For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒட்டுமொத்த கல்வித் திட்டத்தையே மாற்ற வேண்டும்!

Google Oneindia Tamil News

சென்னை: நீட் மருத்துவர்களை உருவாக்கும் சிறந்த தேர்வு என்று அதிகாரிகளும் கோர்ட்டும் கூறிவிட சமூக ஏற்றத்தாழ்வுகள் தீரும் வரை எங்களுக்கு நீட் வேண்டாம் எங்களுக்கு என மாணவர்களும் முழங்கிக் கொண்டிருக்கும் கால நேரத்தில் நாம் யோசிக்க இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றது.

எல்லோருக்கும் ஒரே சூழல் ஒரே வசதி கிடைத்திடுகிறதா என்பது நம் முன்பு உள்ள மிகப் பெரிய கேள்வி. அம்பானிக்கும் அருக்காணிக்கும் ஒரே நீட் தேர்வா என மாணவர்கள் எழுப்பும் கேள்விகள் நியாயமாகப்படுகிறது.

எல்லோருக்கும் நீட் பயிற்சிக்கு போகும் அளவுக்கு வாய்ப்புகள் வசதிகள் கிடைத்திடுமா என்ற கேள்விகள் வருகிறது. நிச்சயமாக இல்லை என்பதுதான் ஒரே பதில். ஒரு கிராமப்புற மாணவனுக்கும் நகரத்து மாணவனுக்கும் ஆயிரம் வித்யாசங்கள் இருக்கிறது.

இடைவெளிகள் :

இடைவெளிகள் :

அவர்கள் மாடி வீட்டில் டுயூப் லைட் வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது இவர்கள் குடிசை வீட்டில் குண்டு பலப் ஒளியில் படிக்க வேண்டியிருக்கிறது. போக்குவரத்து வசதி, சிறந்த கல்வி நிலையங்கள் என எல்லாமே அவர்களுக்கு கிடைத்திடும் வசதிகள் வாய்ப்புகள் நகரத்தில்அதிகம். இவர்களுக்கு கல்வி நிலையங்களின் தூரங்கள் அதிகம். தரமான கல்வி நிலையங்கள் குறைவு. அவர்களுக்கு இயல்பாய் கிடைப்பதை இவர்கள் போராடி அடைய வேண்டும்.

ஊட்டி விட ஆள் இல்லை

ஊட்டி விட ஆள் இல்லை

சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு கல்வி என்பது குழந்தைகளுக்கு தாய் ஊட்டிவிடும் சாதம் போல. அவர்கள் வாய்க்கு மிக எளிதாக வந்து விடுகிறது. இவர்களுக்கு ஊட்டிவிட ஆளில்லை. தானாக அவர்களின் வயிற்றுப் பசி தரும் உந்துதலில் இவர்களுக்கான தேடலில் இவர்கள் கைகளே உணவை தேடி கொஞ்சம் சிந்தி பின் சிந்தாமல் சாப்பிட கற்று கீழும் மேலுமாக இவர்கள் வாயில் நுழையும் அரை குறை சாதம் போல தான் இவர்களுக்கு கிடைக்கும் கல்வி. இந்த இடைவெளிகள் குறையும் காலம் என்று வரும்?.

அரசு பணியில் இருப்போர் :

அரசு பணியில் இருப்போர் :

அரசுப் பள்ளிகளில் வசதிகளும் இல்லை. அரசுப் பள்ளிகளின் அவலம் களைந்து அவை புதுப் பொலிவு பெற்றிட ஒரே வழி அரசு வேலையில் இருக்கும் அத்தனை பேரின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பது தான். இந்தக் கருத்து முன்னெடுத்துவைக்கப்பட்டு காலங்கள் கடந்தும் பின்பற்றுவாரில்லை. துணிச்சலாக ஒரு முன்னேற்றத்தின் வித்தாக தனியார் பள்ளியில் படிக்கும் மகனையோ மகளையோ நம்பிக்கையோடு அரசுப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் அரசு அதிகாரிகளின் கைகளில் இருக்கிறது, அரசுப் பள்ளிகளின் எதிர்காலமும் நம் கல்விக்கான முன்னேற்றமும். அத்தகைய உயர்ந்த எண்ணம் என்று அரசு பணியில் இருப்போர் மனதில் மலர்ந்திடுமா ?

உள் வாங்கத் தவறுகிறோம்

உள் வாங்கத் தவறுகிறோம்

கல்வி முற்றிலும் இலவசம் என மேலை நாடுகள் இருக்க நாம் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. மேலை நாட்டு கலாச்சார சீரழிவுகள் துரித உணவுகள் என எல்லாவற்றையும் உடனே உள்வாங்கும் நாம் ஏனோ இது போன்ற நல்ல விஷயங்களை உள்வாங்க தவறி விடுகிறோம். என்றைக்கு வரும் அத்தகைய புரிதல்கள் நமக்கு? என்று நம் அரசு தரமான கல்வியும் தரமான வசதிகளையும் நம் குழந்தைகளுக்கு தந்து அவர்களை வரவேற்கப் போகிறது..

தனியார் பள்ளிகளைத் தேடும் நாம் :

தனியார் பள்ளிகளைத் தேடும் நாம் :

நாமும் தனியார் பள்ளிகள் பின் போய்ப் போய் இனி வரும் காலங்களில் இருக்கும் சொற்ப அளவிலான அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தப்போகிறோம். எல்லோருக்கும் நம்ம பிள்ளைகள் நல்லா வந்திடணும்ங்கிற எண்ணம் தவிர இதற்கு பெரிதாக வேற காரணம் இல்லை. அந்த எண்ணத்தை ஏன் அரசுப் பள்ளிகளால் நிறைவேற்ற முடியவில்லை. கட்டமைப்பு குறைபாடா, கல்வியில் குறைபாடா, ஆசிரியர் எண்ணிக்கையா எதில் அரசுப் பள்ளிகள் பின் தாங்குகின்றன என ஆய்வு மேற்கொண்டு சீர்படுத்திடுமா அரசு?

பெற்றோர்கள் மனநிலை :

பெற்றோர்கள் மனநிலை :

தெரிந்தே சேர்க்கிறோம் தனியார் பள்ளிகளில். ஆனால் வலிக்கத் தான் செய்கிறது பெருந்தொகையைக் கொண்டு கட்டணம் என்று கட்டும் போது. ஒரு துண்டு ரசீது கூட இல்லாமல் திரும்பி வரும்போது வலிக்கத் தான் செய்கிறது. இவ்வளவு காசா என்று மனசு கேள்வி எழுப்ப எம் பிள்ளை நல்லா படிச்சா சரி எனக் கேள்விகளை விழுங்க பழகிக்கொண்டோம்.

தனியார் கல்வி கொள்ளை

தனியார் கல்வி கொள்ளை

குழந்தையின் கல்யாணத்துக்கு கடன்படும் அந்த காலம் போய் குழந்தையின் பள்ளி கல்விக்காக கடன்படும் காலத்தில் பெற்றோர்கள். இந்த தனியார் கல்வி கொள்ளைகளை தடுத்தி நிறுத்திட வேண்டாமா அரசுகள்? பள்ளியில் தொடக்கி கல்லூரி கல்வி வரை தனியார் மையத்தின் கட்டணக் கொள்கை ஒவ்வொரு வருடமும் அழகாய் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. பெற்றோர்களின் பாரம் இறக்கப்படாத பொதி சுமையாய் அவர்கள் தலையில் அது தொடர்ந்து இருந்து வருகிறது. அரசு நடவடிக்கைகள் அந்த சுமையை என்று இறக்கப் போகிறது?

பாட திட்டம் மேம்படுத்த:

பாட திட்டம் மேம்படுத்த:

பாட திட்டம் மேம்படுத்த வேண்டும் என்ற கருத்து அது கொணர்ந்த சமசீர் கல்வி நம் கல்வியில் ஒரு புரட்சியே. இன்னும் அந்த கல்வி தரம் மேம்பட வேண்டும் என்று இந்த நீட் கற்பித்தால் அதையும் இன்முகத்துடன் ஏற்போம். மாற்றங்கள் வளர்ச்சியின் வித்துக்கள் தானே. ஆனால் இந்த கல்விச் சீரமைப்பு என்பது பாட திட்டம் சீரமைப்பாக மட்டும் இருந்துவிடாமல் மேலே சொன்ன எல்லாப் பிரச்சனைகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது. அவை எல்லாவற்றிக்கும் ஒரு சீரமைப்புத் தேவைப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. வலைக்குள் சிக்கிய சிலந்திகளுக்கு விடுதலை உண்டா. கட்டணத்துக்குள் கட்டுப்பட்ட நம் கல்விக்கு விடிவு உண்டா?

- சஹாயா

English summary
Not only the Syllabus, but we have to change the whole Education system for the sake of our Children, says this author.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X