For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"தலித்"துக்கு தடையா.. பின்னணியில் பாஜகவின் அரசியலா?

Google Oneindia Tamil News

- ராஜாளி

சென்னை: அரசின் ஆவணங்களில் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்கிறார் பங்கஜ் மேஷ்ராம். மனுவை விசாரிக்கிறது நீதிமன்றம். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ் என் நானாவார் மார்ச் மாதத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் “மாநில அரசுகள் அனைத்தும் தலித்திற்கு பதிலாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பதத்தினை பயன்படுத்தக் கூறி அறிவுறுத்திய தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார். இதனையடுத்து நீதிமன்றம் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று ஊடகங்களுக்கு அறிவுறுத்துவது குறித்து ஆறு வாரத்திற்குள் பரிசீலிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிடுகிறது.

Is BJP behind the ban on Dalit term

இதனைத் தொடர்ந்து தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தலித்தென்று அடையாளப்படுத்த வேண்டாமென்றும், ஆங்கிலத்தில் நடைமுறையில் இருக்கும் Scheduled Caste என்பதற்கு நிகரான பிராந்திய மொழி வார்த்தைகளை பயன்படுத்திக் கொள்ளவும்” என்று ஊடகத்துறைக்கு தற்போது அறிவுறுத்தியுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட மாற்றத்திற்கு எதிராக தலித் மக்கள் போராடி வரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவுறுத்தல் தலித் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமாரை ஒன் இந்தியா தமிழுக்காக சந்தித்தோம்

மத்திய அரசின் இந்த அறிவுறுத்தல் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?

2008-ம் ஆண்டு தேசிய அட்டவணை இனத்தோர் ஆணையம் இதேபோன்றதோர் சுற்றறிக்கையை மாநிலங்களுக்கு அனுப்பியது. அப்போது சில மாநிலங்கள் அதை நடைமுறைப் படுத்தின சில மாநிலங்கள் நடைமுறைப் படுத்தவில்லை, சட்டத்தில் தலித் என்ற வார்த்தை இல்லை என்ற காரணம் அப்போது கூறப்பட்டது. இப்போது மீண்டும் உயர்நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையின் அடிப்படையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஊடகங்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை நடைமுறைப் படுத்துவதில் என்ன சிக்கல் ?

தலித் என்பது சாதி பெயர் அல்ல. Scheduled Caste என்பதற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் ஒரு சொல்லும் அல்ல. தலித் என்பது சாதியற்றவர்களுக்கான, சாதி மறுப்பவர்களுக்கான அடையாளம். அம்பேத்கர் கூறிய சாதி ஒழிப்பின் அடையாளம். ஆகவே தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்பது தேவையற்ற ஒன்று.

நீங்கள் கூறியது போல தலித் என்ற வார்த்தை சாதி மறுப்பின் அடையாளம் என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு போன்றவற்றில் அவர்களுக்கான உரிமையை அவர்களே வேண்டாம் என்று கூறுவது ஆகாதா?

அப்படி கூற முடியாது, எந்த ஒரு சொல்லுக்கும் சட்ட ரீதியான ஒரு பொருளும், நடைமுறையிலான ஒரு பொருளும் உண்டு. ஒருவர் சான்றிதழில் பதிவு செய்யும்போது தனது உட்சாதியை பதிவு செய்வார் அல்லது சாதியற்றவர் என்று பதிவு செய்வார். தலித் என்று பதிவு செய்வது இல்லை. தலித் என்பது ஒரு சமூக அரசியல் அடையாளமே தவிர சான்றிதழில் கூறப்படுவது இல்லை.

தலித் என்ற வார்த்தையை மத்திய அரசு பயன்படுத்தக் கூடாது என்று கூறுவதால் என்ன சிக்கல் எழும்?

இதன் சிக்கலை புரிந்து கொள்ள வரலாற்றை புரிந்து கொள்ளவேண்டும், Scheduled Caste பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது அல்ல. ஆங்கிலேயர் காலத்தில் சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இஸ்லாமியருக்கும் இரட்டை வாக்குரிமை முறையிலேயே னி வாக்குரிமை வழங்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து காந்தியடியகள் எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார். இதன் விளைவாக 1932 ம் ஆண்டு பூனா ஒப்பந்தம் ஏற்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1935 –ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த தேவையின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பட்டியலை அம்பேத்கார் போன்றவர்களோடு கலந்தாலோசித்து வரலாற்றில் முதன் முறையாக தயாரிக்கப்படுகிறது. இந்த அட்டவனைதான் இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அம்பேத்கார் போன்றோர் சுதந்திரத்திற்குப் பிறகு முடிவெடுக்கிறார்கள். அதோடு இந்தப் பட்டியலில் புதிதாக ஒரு சாதியை இணைக்கவோ அல்லது ஏதாவது ஒரு திருத்தத்தையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடுதான் திருத்தம் மேற்கொள்ள முடியும். இதுதான் அந்த அட்டவணை உருவான வரலாறு. இப்படி தலித் என்ற வார்த்தையே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை. வன்கொடுமை தடுப்பு சட்டப்படி ஒருவரின் உட்சாதி பெயரை குறிப்பிட்டால் அவருக்கு தண்டனை வழங்கப்படலாம். ஆக சாதி மறுப்பாளர்களும் சாதிப் பெயரை குறிப்பிட விரும்பாதவர்களுமே தலித் என்ற வார்த்தையை அரசியல் அடையாளமாக பயன்படுத்துகிறார்கள்.

இப்போது மத்திய அமைச்சகம் Scheduled Caste என்பதற்கு பதிலாக பிராந்திய பகுதிகளில் பயன்படுத்தப்படும் மாற்று வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று சொல்வதில் என்ன சிக்கல் இருந்துவிடப் போகிறது?

தலித் என்ற வார்த்தையை ஊடகங்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறுவதின் பின்னால் அரசியல் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார அதிகாரமோ, தொழிலதிபர்கள் என்ற அடையாளமோ இன்றி இந்தியா முழுவதிலும் ஏறத்தாழ 25 கோடி என்ற எண்ணிக்கையில் வாழும் மக்களை ஒரே அடையாளத்தில் இருந்து பிரித்து அவர்களை சிதறடிக்க வேண்டும் என்பதே பாஜக அரசின் ஒரே நோக்கம். வேறுவிதமான எந்த பலமும் இன்றி எண்ணிக்கை பலம் ஒன்றை மட்டும் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களில் ஒரு சிலரை தூண்டிவிட்டு அவர்களது உட்சாதி அடையாளங்களை தூக்கிப் பிடிக்க சொல்கிறார்கள். இதன்மூலம் அவர்களை ஒரே தலைமையின் கீழ் எழுச்சியுறுவதை தடுத்து மீண்டும் உட்சாதி பிரிவுகளாக உடைத்துவிடலாம் என்ற உள்நோக்கம் இருப்பதாக நான் ஐயப்படுகிறேன். அதோடு இதை எதிர்த்து எங்களது போராட்டங்களை தலைவர் மூலமாக அறிவிப்போம் என்றார் திரு ரவிக்குமார்.

ஆக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் இந்த அறிவுறுத்தல் பட்டியலின மக்களிடையே எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது

English summary
Opposition parties are blaming that the BJP is behind the ban on Dalit term.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X