For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணீர் விடும் கீழடி.. சங்கத் தமிழ் அடையாளங்களை காப்பாற்றுங்கள்.. எழுத்தாளர் சு.வெங்கடேசன் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழர் தொல் வரலாற்றை காக்க உடனடியாக கள அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்று எழுத்தாளர் சு. வெங்கடேசன் கோரியுள்ளார்.

இது குறித்து சு. வெங்கடேசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Novelist S. Venkatesan demands field museum at Keezhadi

இன்னும் ஒரு சில நாட்களில் இரண்டு லாரிகள் மதுரையிலிருந்து மைசூருக்குப் புறப்படவிருக்கின்றன. அந்த லாரிகள் தமிழகப் பதிவெண்களைக் கொண்டவையா? அல்லது கர்நாடகப் பதிவெண்களைக் கொண்டவையா என்பது இனிமேல்தான் தெரியவரும். ஒருவேளை, காவிரிப் பிரச்சினையை ஒட்டி, கர்நாடகத்தில் அந்த லாரிகள் தாக்கப்பட்டால், அரசுக்குப் பெரும் நட்டம் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஏனென்றால், அந்த லாரிகளில் இருப்பதெல்லாம் பழம்பொருட்கள்தான். அதுவும் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பொருட்கள்!

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் இதுவரை 5,300 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த இடமும், பொருட்களும்தான் இனி தமிழகத்தின் வரலாற்றுக் காலநிர்ணயத்தை அளவிடும் அடிப்படைத் தரவுகள்.

அந்தத்தரவுகள், தமிழக நாகரிகத்தின் காலத்தை இன்னும் பின்னோக்கித் தள்ளுவதாக இருக்கும். இன்றைய அரசியல் சூழலில் இந்தச் செய்தி பலருக்கு ஏற்புடையதல்ல. தரவுகளைத் தன்னழிவுக்கு விடும் அரசியல் ஒன்றும் புதிதல்ல, எல்லாக் காலங்களிலும் அது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

நகர நாகரிகம் இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் பலரும் பழந்தமிழகத்தை ஒரு இனக் குழுச் சமூகமாகத்தான் வரையறுத்தார்கள். சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் போல ஒரு நகர நாகரிகம் இங்கு இல்லை என்பது அவர்கள் கருத்தின் அடிப்படை.

இலக்கிய வர்ணனைகளை மட்டும் வரலாற்று ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், அவற்றைக் கடந்த ஆதாரங்கள் கண்டறியப்படாத நிலையில் அந்தக் கருத்துக்கு உயிர் இருந்தது.

ஆனால், இன்று கீழடியில் கண்டறியப்பட்டுள்ள தரவுகள் அந்தக் கருத்தைத் தகர்த்திருக்கின்றன. சங்க காலத்தில் நகர நாகரிகம் செழிப்புற்று இருந்ததை மெய்ப்பிக்கிறது. கீழடியில் இருப்பது அழிந்துபோன ஒரு பெரும் நகரம். நகர நாகரிகத்தின் அனைத்துத் தடயங்களும், முதன்முறையாக அங்கு கண்டறியப்பட்டுள்ளன.

எண்ணற்ற கட்டிடங்களின் தரைத்தளங்கள், நீண்டு செல்லும் மதில்சுவர்கள், முத்துக்கள், தந்தத்தால் ஆன பல்வேறு பொருட்கள், சதுரங்கக் காய்கள், எண்ணிலடங்கா மணிகள். வணிகர்களின் எடைக் கற்கள், நெசவுக்கான தக்கை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இதுவரை 71 தமிழ்ப் பிராமி எழுத்துகள் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. அதில் பிராகிருதம் உள்ளிட்ட வேற்று மொழிப் பெயர்களும் உள்ளன.

ஆப்கானிஸ்தானத்து பகுதியைச் சேர்ந்த சூதுபவழத்தாலான மணிகளும், ரோமாபுரியைச் சேர்ந்த மட்பாண்டங்களும், வட இந்தியப் பிராகிருதப் பெயர்களுமாக வணிகமும் பண்பாடும் ஊடறுத்துப் பாயும் பெருநகரமாக இது இருந்துள்ளது.

தொழிற்சாலை சென்ற ஆண்டின் இதே மாதத்தில், அகழாய்வு முடிவுறும் தறுவாயில் அதுவரை கிடைத்த பொருட்களை வைத்து, இது நகரத்தின் குடியிருப்புப் பகுதியென எல்லோரும் உறுதி செய்தனர். ஆனால், இந்த ஆண்டு அகழாய்வுப் பணி அதற்கு சில அடி தூரத்திலேதான் நடந்துள்ளது. அங்கு கிடைத்துள்ள தடயங்கள் எல்லாம் பெரும் தொழிற்சாலை இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

வரிசை வரிசையான கால்வாய்கள், அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள். அந்தத் தொட்டிகளுக்குள் தண்ணீர் உள்செல்லவும், வெளிச்செல்லவுமான அமைப்புகள். அந்த கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறிதும், பெரிதுமான ஆறு உலைகள். கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள், மூன்று விதமான வடிகால் அமைப்பு, மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினாலான வடிகால்கள்.

இவையெல்லாம் முதன்முறையாகக் கிடைத்துள்ளன. இவற்றை ஒப்பிடுவதற்கு தமிழ்நாட்டிலோ அல்லது தென்னிந்தியாவிலோ வேறு இடங்களே இல்லை.

கீழடியில் இருக்கும் தொல்லியல் மேடு சுமார் 110 ஏக்கர் பரப்பைக் கொண்டது. அதில் அகழாய்வு நடந்திருப்பது வெறும் 50 சென்ட் நிலப் பரப்பளவுதான். மீதமிருக்கும் பெரும் பகுதியில் ஆய்வுகள் தொடருமேயானால், இந்த நகரத்தில் இருந்த பல்வேறு பகுதிகளை நம்மால் கண்டறிய முடியும் என்கின்றனர், இவ்வாய்வை நடத்திக் கொண்டிருக்கிற அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமை யிலான குழுவினர்.

1964-ல் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை மிக விரிவாகச் செய்து முடித்த தமிழ்ப் பேரறிஞர் மா.இராசமாணிக்கனார், "பழந்தமிழ் இலக்கியங்களான பரிபாடல், திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, சிலப்பதிகாரம் மற்றும் திருவிளையாடல் புராணம் ஆகியவற்றின் அடிப்படையில், சங்ககால மதுரை என்பது இன்றுள்ள மதுரையல்ல, நமது இலக்கியக் குறிப்புகளின்படி அது திருப்பூவணத்துக்கு நேர் மேற்கிலும், திருப்பரங்குன்றத்துக்கு நேர் கிழக்கிலும் அமைந்திருக்க வேண்டும். அதனை ஆய்வுகளின் மூலம்தான் கண்டறிய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

அவரது குறிப்பு, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பெரும் உண்மையை நெருங்க வழிகாட்டுகிறது. சங்க இலக்கியம் சொல்லும் அதே புவியியல் அமைப்பில்தான் இன்று அகழாய்வு நடக்கும் இடம் இருக்கிறது. இவ்வளவு துல்லியமான புவியியல் ஆதாரமும், எண்ணிலடங்கா தொல்லியல் ஆதாரங்களையும் இணைத்துப் பார்க்கையில், இதுவே சங்ககால மதுரையாக இருப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாக என்னைப் போன்ற பலரும் கருதுகிறோம்.

என்ன செய்ய வேண்டும்? 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம், பழந்தமிழ் நாகரிகத்தின் பேரடையாளங்களைத் தனது மார்போடு இறுக அணைத்து வைத்திருக்கிறது. அவற்றை இழந்து விடாமல் இவ்விடத்தைப் பாதுகாக்க வேண்டும்.

மாநில அரசும் இங்கு அகழாய்வுப் பணியைத் தொடங்க வேண்டும். இவற்றையெல்லாம்விட மிக அவசரமாகச் செய்ய வேண்டிய ஒரு பணி, 'கள அருங்காட்சியகம்' ஒன்றை உருவாக்குவது. அது உருவானால் தான், இங்கு கண்டறியப்பட்டுள்ள இந்தத் தொல்பொருட்கள் எல்லாம் பார்வைக்கு வைக்கவும் பாதுகாக்கவும்படும்.

இல்லை யென்றால், மத்திய அகழ்வாய்வுப் பிரிவின் கிட்டங்கி இருக்கிற மைசூருக்குக் கொண்டு செல்லப்பட்டு, சாக்கு மூட்டைகளுக்குள் இருக்கும் என்ற நம்பிக்கையில் நாம் இருக்க வேண்டிவரும்.

கள அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய தொல்லியல் துறை தயாராக இருக்கிறது. அதற்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசினுடையது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை.

இந்த கசப்பான உண்மையைச் சில நாட்களுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில் நான் பேசினேன். கூட்டம் முடிந்ததும் என்னருகே வந்த ஒரு இளைஞர், "அய்யா, நான் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். என் பெயர் கரு.முருகேசன். தமிழ்தான் எனக்குச் சோறு போடுகிறது. அகழாய்வு நடக்கும் அதே கிராமத்தில் எனக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. நான் அதனை மனமுவந்து தர முன்வருகிறேன், இவ்வரலாற்றுப் பொக்கிஷத்தை எப்படியாவது காப்பாற்றி இங்கு காட்சிப்படுத்துங்கள்" என்று கண் கலங்கக் கூறினார்.

ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களோ, அல்லது இருந்தவர்களோ, யாரேனும் தமிழ் தங்களுக்கும் சோறு போட்டது என்று நம்பினால், செஞ்சோற்றுக் கடன் தீர்க்கமுன்வாருங்கள்.

மைசூரை நோக்கி லாரிகள் புறப்பட இன்னும் சில நாட்களே இருக்கின்றன என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

English summary
Novelist S. Venkatesan demanded field museum to protect Sangam Tamils Great History at Keezhadi excavation in Sivagankai District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X