For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவாதியைக் கொன்றது யார்.. தீவிர வேட்டை.. கொலையாளியின் கத்தி கண்டுபிடிப்பு.. சுவாதி செல்போன் எங்கே?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் மென் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாதியை கொன்ற கொலைகாரன், கத்தியை ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டு சாவகாசமாக தப்பியுள்ளான். கொலைகாரன் இவனாக இருக்கலாம் என்று போலீசார் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சந்தான கோபாலகிருஷ்ணன். மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது 2வது மகள் சுவாதி, 24. சாய்ராம் பொறியியல் கல்லூரியில் படித்த இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் மகேந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை செய்தார்.

Nungampakkam Swathi Murder: Chennai no more safe

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பரனூருக்கு சுவாதி தினமும் மின்சார ரயிலில் வேலைக்கு செல்வது வழக்கம். தினசரி காலையில் சுவாதியின் அப்பாவே ரயில் நிலையத்திற்கு வந்து இறக்கி விடுவது வழக்கம்.

வெள்ளிக்கிழமையன்றும் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக நேற்று காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அப்பா உடன் வந்தார் சுவாதி. மகளை கடைசியாக உயிருடன் பார்ப்பது இதுதான் கடைசி முறை என்பது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணனுக்கு தெரியாது. மகளை இறக்கி விட்டு விட்டு வழக்கம் போல வீட்டிற்கு திரும்பி சென்றார் அவர்.

சுவாதியை கொடூரமாகக் குத்திக் கொன்றவர் இவரா?.. சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை- வீடியோ

செங்கல்பட்டு நோக்கி செல்லும் ரயிலுக்காக 2வது நடைமேடையில் சுவாதி காத்திருந்தார். அப்போது, அவர் அருகில் வந்த இளைஞர் ஒருவர் சுவாதியுடன் பேசியதாகவும், இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும், அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் சுவாதியை வெட்டியதாகவும் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொலையாளி வெட்டியதில் சுவாதியின் தலை, முகத்தில் வெட்டுகள் விழுந்தன. சுவாதி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். கன்னத்தில் ஆழமாக வெட்டு விழுந்ததில் பற்கள் கூட பிளாட்பாரத்தில் சிதறின. சுவாதியை கொன்ற கொலையாளி, கத்தியை ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டு சாவகசமாக தப்பி சென்றுள்ளான். இச்சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் சிதறி ஓடினார்களே தவிர, கொலையாளியை பிடிக்க முயற்சி செய்யவில்லை என்பதுதான் சோகம்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்து கிடந்த சுவாதியின் கைப்பையில் இருந்த அடையாள அட்டை மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த சுவாதியின் அப்பா, மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

சுவாதியின் கைப்பையில் செல்போனை தவிர மற்ற பணம் உள்ளிட்ட பொருட்களும் அப்படியே இருந்தன. ஒரு மணி நேரம் கழித்து சுவாதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என்ன காரணத்திற்காக சுவாதி கொலை செய்யப்பட்டார் என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

சுவாதியின் கைப்பையில் இருந்த பணம் உள்ளிட்ட பொருட்கள் அப்படியே இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் வைத்திருந்த ஸ்மார்ட் போனை மட்டும் காணவில்லை. கொலை செய்தவன் கொண்டு சென்றானா என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரலாம். சுவாதியின் எண்ணுக்கு வந்த அழைப்புகள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் சுவாதி கால் டாக்சியில் சென்றுள்ளார். அப்போது அந்த கார் டிரைவர் கூடுதல் கட்டணம் கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், உடனடியாக சுவாதி அந்த நிறுவனத்தில் புகார் செய்யவே ஓட்டுநரை வேலையை விட்டு நீக்கி விட்டனராம். அந்த விவரத்தை குடும்பத்தினர் தெரிவிக்கவே அந்த டிரைவரையும் பிடித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், அவர் தான் கொலை செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

சுவாதியை வெட்ட பயன்படுத்திய வெட்டுக் கத்தியை ரயில்பாதையில் இருந்து போலீசார் கைப்பற்றி தடய அறிவியல் ஆய்வு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்வே போலீசின் ஜாக் என்ற மோப்ப நாயும், மாநகர காவல்துறையின் அலெக்ஸ் என்ற மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டன. அவை இரண்டும் ரயில்நிலையத்தில் இருந்து புஷ்பா நகர் நெல்சன் மாணிக்கம் சாலை வரை ஓடி நின்றுவிட்டன.

கொலை நடந்த நடைமேடையில் மட்டுமல்ல, நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. அதனால் கொலைச் சம்பவம் குறித்தும், கொலையாளி குறித்தும் உடனடியாக தெரிந்துகொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய அடையாளத்தை வைத்து இந்த படுகொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். ஆனால் கொலையாளி அவர்தானா என்பதை உறுதியாக போலீசார் கூற மறுத்துவிட்டனர்.

English summary
Swathi's murder also raises the pertinent question of safety of women working in the IT sector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X