
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் சாலை விபத்தில் மரணம்
கோத்தகிரி: தமிழகத்தையே அதிர வைத்து கொண்டிருக்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் சாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொட நாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கனகராஜ் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து மர்மமாக உயிரிழந்தனர். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணை இப்போதும் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் பழனிவேல், சில நாட்களுக்கு முன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் கொட நாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சப் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் போலீஸ் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முகமது ரபீக். முகமது ரபீக் நேற்று காலை வழக்கு தொடர்பாக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவரிடம் விசாரித்தார். பின்னர் போலீஸ்காரர் அபுதாகீருடன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டார்.
இருசக்கர வாகனத்தை முகமது ரபீக்தான் ஓட்டி சென்றார். கொடநாடு செல்லும் வழியில் கேர்பெட்டா செம்மண் முடக்கு என்ற இடத்தில் முகமது ரபீக் ஓட்டிய இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. அங்கே கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மீது இருசக்கர வாகனம் ஏறியது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவருமே சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது அந்த வழியே சென்ற லாரியின் சக்கரத்தில் முகமது ரபீக் சிக்கினார். அவர் மீது லாரி சக்கரங்கள் ஏறி இறங்கியதால் அந்த இடத்திலேயே முகமது ரபீக் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video - Watch Now
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தனிப்படை போலீசார் விசாரிப்பதற்கு முன்பு விசாரித்து வந்தவர் முகமது ரபீக் என்பது குறிப்பிடத்தக்கது.