For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழீழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப துடிக்கிறார் கருணாநிதி: முதல்வர் ஓ.பி.எஸ். சாடல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழீழ அகதிகளை இலங்கைக்கு திருப்ப அனுப்ப தி.மு.க. தலைவர் கருணாநிதி துடித்துக் கொண்டிருக்கிறார் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் காரணமாக புகலிடம் தேடி தமிழகம் வந்து பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது பற்றி விவாதிப்பதற்காக கடந்த 30.1.2015 அன்று தமிழக அரசின் உயரதிகாரியை அனுப்பி வைக்கும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்திற்கு நான் பாரதப் பிரதமருக்கு 28.1.2015 அன்று ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன்.

OPS dares M Karunanidhi on Sri Lankan Tamil refugees row

மத்திய அரசு அனுப்பியிருந்த கடிதத்தில் இலங்கை தமிழ் அகதிகளின் விருப்பத்தின் அடிப்படையில் இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்த 3,04,269 பேரில் 2,12,000 பேர் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் ஏற்கனவே திரும்பியுள்ளனர் என்பதை நான் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டி, எனவே சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கை திரும்புவோர் குறித்த கூட்டம் என்பது இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்பிச் செல்ல ஊக்குவிக்கும் நடவடிக்கை தொடர்பான கூட்டம் என்றே பொருள் கொள்ளப்படும் என்பதை சுட்டிக்காட்டி, அகதிகள் இலங்கைக்கு திரும்புவதற்கு சுமூகமான நிலை இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னமும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்திருந்தேன்.

மேலும், அண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், நல்லிணக்கம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தியுள்ளபோதிலும், தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் நீடித்து வருவது தமிழர்களிடையே தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது; அச்சுறுத்தல், அடக்குமுறை, மனித உரிமை மீறல்களுக்கான சூழ்நிலை முற்றிலுமாக நீங்கிவிடவில்லை; உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் தொடர்ந்து முகாம்களிலேயே வாழ்ந்து வருகிறார்கள்; நல்லிணக்கம் மற்றும் மறுகுடியமர்த்தல் ஆகியவை குறித்த புதிய அரசின் எண்ணங்கள் இன்னமும் செயலாக்கப்படவில்லை;

இலங்கையில் நல்லிணக்கமும், மறு குடியமர்த்தலும் செயல்படுத்தப்பட்டால் தான், பிற நாடுகளில் குடியேறியுள்ள இலங்கை தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான நம்பிக்கையை உருவாக்கும்; இலங்கை அரசால் உறுதியான நம்பத்தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிருபிக்கப்படக்கூடிய உறுதிமொழிகள் வழங்கப்பட்டு சொந்த இடங்களுக்கு திரும்பக்கூடிய நம்பிக்கை உருவாக்கப்பட்ட பின்னரே, இத்தகைய ஒரு கூட்டம் நடத்தப்படவேண்டும் என்று நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தேன்.

இந்தக் கூட்டத்தின் நோக்கம் பற்றியும், பிரதமருக்கு நான் எழுதிய கடிதம் பற்றியும் சரியாக புரிந்து கொள்ள இயலாத தி.மு.க. தலைவர் கருணாநிதி "அகதிகள் பிரச்சனையில் அ.தி.மு.க அரசின் பொறுப்பற்ற செயல்!" என்ற தலைப்பில் ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பல்வேறு முரண்பாடுகள் நிறைந்துள்ளதாக உள்ளது.

அறிக்கையின் தொடக்கத்திலேயே என்னை மற்றவர்கள் எவ்வாறு மதித்து வருகிறார்கள் என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் கருணாநிதி. இது "காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.

தற்போது தி.மு.க.தலைவர் கருணாநிதிக்கு அவரது கட்சிக்குள்ளேயே என்ன மதிப்பும், மரியாதையும் உள்ளது என்பதை தமிழகமே நன்கு அறியும். இதனால், மன உளைச்சலுக்குள்ளாகியுள்ள கருணாநிதி, மற்றவர்கள் மதிக்கப்படவில்லை என்று கூறிக் கொண்டு தனக்குத் தானே ஆறுதல் தேடிக்கொள்கிறார்.

அவரவர்க்கு உரிய மரியாதை அவரவர்க்கு கிடைக்கப் பெறும் என்பதை தந்தையும் தனயனும் புரிந்து கொள்ள வேண்டும்.

தனது அறிக்கையில் என்ன சொல்ல வருகிறோம் என்பது கருணாநிதிக்கு புரியாததால் அவர் தன்னையும் குழப்பிக் கொண்டு, பிறரையும் குழப்ப முற்பட்டுள்ளார் என்பது அவரது அறிக்கையிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது. "இலங்கை அகதிகளும், இலங்கையிலே முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசின் கொடுமையினால் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும், தாங்கள் மீண்டும் தாயகம் திரும்பி, நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்புவது ஒரு புறம் இருந்தாலும், தற்போது அப்படி அங்கே சென்றால் அமைதியான வாழ்வுக்கான வழி ஏற்படுமா? அல்லது முன்பு போலவே கொடுமை தொடருமா? என்றே தெரியாத நிலையில்; இலங்கைக்கு திரும்பினால் என்ன நடக்கும்? என்பது தெளிவற்ற தெரியாத நிலையில்......" மத்திய அரசு இந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தெரிவித்துவிட்டு, ஆனாலும், மத்திய அரசு கூட்டிய அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிமுக அரசின் பொறுப்பற்ற செயல் என்று கூறுவது எத்தகைய இரட்டை வேடம்.

இங்கே உள்ள இலங்கை அகதிகளை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று துடிக்கிறார் கருணாநிதி.

இலங்கையில் தமிழினத்தையே அழித்த சிங்கள வெறிபிடித்த முந்தைய இலங்கை அரசுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தது தி.மு.க.அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தான். இலங்கை ராணுவத்தினருக்கு, இந்திய மண்ணில், இந்திய ராணுவம் ரகசியமாக போர் பயிற்சி அளித்தது, இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியது, மிக நவீன ராணுவ ரேடார் கருவிகளை வழங்கியது, இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய அரசின் உயரதிகாரிகள் இலங்கைக்கு அடிக்கடி சென்றது என பல செய்திகள் அப்போது ஊடகங்களில் வெளிவந்தன.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான கூட்டம் நடத்தப்படவேண்டும் என்ற இந்த அரசின் முடிவு எப்படி பொறுப்பற்ற செயல் ஆக இருக்க முடியும்? இங்கே உள்ள இலங்கை அகதிகளின் மீது இந்த அரசுக்கு உள்ள பொறுப்பின் காரணமாகத் தான் இது போன்ற ஒரு சரியான முடிவு எடுக்கப்பட்டது என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன், சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்த போது, வாரம் இரு முறை வெளிவரும், ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் "இது வரை கிழக்கு மாகாணம் உள்பட பல இடங்களில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை இருந்தது. பல இடங்களில் மக்கள் குடியமர்த்தப்படாமல் இருந்தனர். இந்த நிலைமைகளையெல்லாம் மாற்றியமைக்க தற்போதைய அரசாங்கம் முடிவெடுக்கிறது. ஆரம்ப கட்டமாக தமிழர்கள் குடியேற்றப்பட்டு வருகிறார்கள். விரைவாக குடியேற்றம் நடைபெற உள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்த மக்களை அழைத்து குடியமர்த்த உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இதைத் தான் மத்திய அரசுக்கு நாங்களும் சொல்லி இருந்தோம். இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் முதலில் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பின்னரே, இங்கே உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான கூட்டம் நடத்தப்படவேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை கருணாநிதி எப்பொழுது மாற்றிக் கொண்டார்? இலங்கை அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்ற முடிவை எப்போது எடுத்தார்? என்பதை அவர் தான் விளக்க வேண்டும். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் காரணமாக தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அந்த நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும். அதன் பின்னரே, இங்கேயுள்ள இலங்கை அகதிகள், தாயகம் திரும்புவது பற்றி எவரும் சிந்திக்க இயலும் என்று பன்னீர்செல்வம் தெளிவுபடக் கூறியுள்ளார்.

இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

English summary
Tamilnadu chief minister O Panneerselvam daring DMK chief M Karunanidhi on Srilankan Tamil refugees isse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X