For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருநின்றவூர் மக்கள் தண்ணீரில் தத்தளிக்க திமுக அரசாணையே காரணம்: சொல்லிட்டாரு ஓ.பி.எஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க அரசின் கொள்கை கோணலுக்கு ஒரு உதாரணம் தான் திருநின்றவூர் வீட்டுமனைத் திட்டம். இதன் காரணமாகத் தான் இன்று திருநின்றவூர் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:

OPS sees DMK govt's order for Thirunindravur flood

தி.மு.க ஆட்சியின் போது ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்ற நிலைமையே இருந்தது. பல்வேறு அதிகார மையங்கள் செயல்பட்டு காவல் துறையினரை சுதந்திரமாக செயல்பட விடாமல், காவல் துறையையே முடக்கி விட்டது. மக்கள் தங்களது சொந்த இடங்களையே நில அபகரிப்பாளர்களிடம் பறிகொடுக்கும் நிலையும் இருந்தது. ஆனால், 2011-ஆம் ஆண்டு மே மாதம் தமிழக முதல்வராக ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் தான் இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு, இன்று தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தி.மு.க அரசின் கொள்கை கோணலுக்கு ஒரு உதாரணம் தான் திருநின்றவூர் வீட்டுமனைத் திட்டம். இதன் காரணமாகத் தான் இன்று திருநின்றவூர் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. திருநின்றவூர் குடியிருப்புப் பகுதியில் மழை வெள்ள நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதால், இந்தக் குடியிருப்புப் பற்றிய உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்வது எனது கடமை என கருதுகிறேன்.

திருநின்றவூர் ஏரியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் குடிசை மற்றும் ஓடு வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன. உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக குடிசைப் பகுதிகள் மேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டது.

திருநின்றவூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளான பெரியார் நகர் பகுதி - 1 மற்றும் பெரியார் நகர் பகுதி - 2, முத்தமிழ் நகர், கன்னிகா புரம், மற்றும் சுதேசி நகர் ஆகிய பகுதிகளில் 2,467 ஆக்கிரமிப்புகளில் 1,006 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் தற்போது மொத்தம் 2,467 வீடுகள் உள்ளன.

ஏரியின் ஒரு பகுதியிலேயே இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் பெருமழை காலங்களில் வீடுகளைச் சுற்றி வெள்ளம் சூழ்வது வாடிக்கையாக உள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 12 அடியாக உள்ளது. ஆனால் வீட்டுப் பகுதிகள் இதிலிருந்து 5 அடி கீழேயே உள்ளன. எனவே, திருநின்றவூர் ஏரியில் 7 அடி அளவிற்கு தண்ணீர் வந்தவுடன் வீடுகள் வெள்ளத்தால் சூழப்படுகிறது. 7 அடிக்கு கீழே தண்ணீர் அளவு குறையும் போது தான் வீடுகளைச் சுற்றியுள்ள வெள்ளம் வெளியேறும். பெரு மழை காலங்களில், ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், ஏரி முழுக் கொள்ளளவை எட்டி விடுகிறது. தற்போது இந்த ஏரியில் 11 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளது.

1.8.1996 மற்றும் 21.7.1997 ஆகிய தேதியிட்ட அரசாணைகளின்படி திருநின்றவூர் ஏரியில் 20.13 ஹெக்டேர் அதாவது 49.74 ஏக்கர் நிலம் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்திற்கு வீட்டுமனை அபிவிருத்திக்காக வழங்கப்பட்டது. ஏரிகள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்புகளையும் முறைப்படுத்தும் வகையில் 1990 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது அன்றைய தி.மு.க அரசு செய்த பெரும் தவறாகும். அவ்வாறு பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஏரியின் ஒரு பகுதியை மாற்றுவதற்கு ஆட்சேபனை இல்லை என்ற சான்றை பொதுப் பணித்துறை வழங்கிய போது, அவ்வாறு வழங்கப்படும் நிலம் திருநின்றவூர் ஏரியின் முழுக் கொள்ளளவிற்கு 45 சென்டி மீட்டர் அதிகமான உயரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு உயர்த்தப்படுவதற்கு தேவையான மண் ஏரியின் உட்பரப்பிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த நிபந்தனைகள் எதுவும் கடைபிடிக்கப்படாததால் தான் இந்தக் குடியிருப்புகளில் வெள்ள நீர் தேங்குவது என்பது தடுக்க இயலாததாக உள்ளது.

மழைநீர் ஏரிப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுவதைத் தவிர்க்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று திருநின்றவூர் பேரூராட்சி கவுன்சிலர் அன்புச்செழியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் பேரில், சென்னை உயர்நீதிமன்றம் குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அன்புச் செழியன் கொடுத்த மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி 12.12.2007 அன்று உத்தரவிட்டது. அதனடிப்படையில் தடுப்புச் சுவர் கட்டுதல், ஏரியின் மிகைநீர்ப் போக்கி கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை மேம்படுத்துதல் மற்றும் பெரியார் நகர் இருப்புப் பாதை சுரங்கப் பாதை முதல் கன்னிகாபுரம் கலிங்கல் பகுதி வரை கால்வாய் கட்டுதல் ஆகியவற்றிற்கென 2 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதில், தடுப்புச் சுவர் கட்டுவதற்கு மட்டும் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு அரசாணை எண். 64-ல் 22.3.2010-ன்படி வழங்கப்பட்டது. இந்த தடுப்புச் சுவர் கட்டும் பணி 2013-ல் முடிக்கப்பட்டது. இவ்வாறு தடுப்புச் சுவர் கட்டப்பட்டாலும் இந்த குடியிருப்புகள் ஏரியிலேயே அமைந்துள்ளதால் வெள்ள நீர் தேங்குவதை தடுக்க இயலாது. எனவே தான் தடுப்புச் சுவர் கட்டுவது குறித்த திட்ட அறிக்கையிலேயே இந்தக் குடியிருப்புகள் ஏரியின் முழுக் கொள்ளளவு மட்டத்திற்கு 5 அடி அளவிற்கு கீழே உள்ளது என்றும் மழை காலங்களில் ஏரியில் 7 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பும்போதே இந்த குடியிருப்புப் பகுதிகளில் ஏரித் தண்ணீர் புகுந்து வெள்ள நீர் தேங்கி விடுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே அறிக்கையில் அவ்வாறு இடுப்பளவு தண்ணீர் வந்தவுடன் அந்தப் பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு 6 மாதங்களுக்குப் பிறகே திரும்பி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தடுப்புச் சுவர் மற்றும் மழைநீர்க் கால்வாய்கள் ஆகியவை நிறைவேற்றப்பட்டால் வெள்ளநீர் தேங்கியிருக்கும் காலம் பெருமளவு குறைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது திருநின்றவூர் ஏரியில் வீடுகள் கட்டப்படுள்ளதால் மழை நீரை முழுவதும் வெளியேற்றுவது என்பது இயலாததாகும்.

ஏரிப் புறம்போக்கு, ஏரிக் கரைகள், நீர் படுகைகள் என வீடுகள் கட்டுவதற்கு உகந்ததாக இல்லாத இடங்களிலும் அரசியல் காரணங்களுக்காக ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்துவது என்பது தி.மு.க. அரசு எப்போதும் கொண்டுள்ள கொள்கையாகும். 4.5.1990 நாளிட்ட வருவாய் துறை அரசாணை எண்.742-ல் பட்டா வழங்குவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளான நீர்வழிப் புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் குடிசைகள் பல ஆண்டுகளாக இருந்தாலும் அவற்றை வகைமாற்றம் செய்யமுடியுமெனில், அவ்வாறு செய்த பிறகு உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என உத்தரவிட்டு, பின்னர் அதனை 28.8.1990 நாளிட்ட வருவாய் துறையின் 1911 அரசாணைப்படி மாற்றி தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் இந்த நிலங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அதன் பின்னர் நில மாற்றத்திற்கு அரசிற்கு கருத்துரு அனுப்பலாம் என்றும் அன்றைய தி.மு.க அரசு உத்தரவிட்டது. அரசியல் காரணங்களுக்காகவே முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசு 30.12.2006-ல் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக 854 எண்ணிட்ட வருவாய் துறை அரசாணையை வெளியிட்டது.

அதில் நீதிமன்ற உத்தரவுகளையும் உதாசீனப்படுத்தி பத்தாண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு, ஒப்படை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையாணைகளை தளர்த்தி, வீட்டுமனைப் பட்டா வழங்க உத்தரவிட்டது.

இது போன்றே 23.1.2008 நாளிட்ட வருவாய் துறை அரசாணை எண்.34-ன் படி 5 வருடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தாலே பட்டா வழங்கலாம் என உத்தரவிட்டு 29.1.2010 நாளிட்ட வருவாய் துறை அரசாணை எண்.43-ன்படி மூன்று வருடம் எனவும் குறைத்து விட்டது. நீர்நிலைகளைப் பாதுகாக்காமல் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு அரசியல் காரணங்களுக்காக இது போன்ற அரசாணைகளை பிறப்பித்ததன் விளைவாகத் தான் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

1990 ஆம் ஆண்டில் முந்தைய தி.மு.க. அரசால் வெளியிடப்பட்ட அரசாணை காரணமாகவே திருநின்றவூர் ஏரிப் பகுதியில் உள்ள வீடுகளில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவது என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. எனினும் விவசாயிகள் மற்றும் குடியிருப்புதாரர்களிடம் கலந்து பேசி விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமலும், தேங்கியுள்ள மழை நீர் கணிசமாக குறையும் படியும் மதகுகள் வழியாக தேவையான தண்ணீரை வெளியேற்ற அரசு முடிவெடுத்துள்ளது. இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

English summary
Minister O Panneerselvam has blamed the earlier DMK govt's GO for flood in Thirunindravur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X