For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கச்சநத்தம் படுகொலை- சுயசாதிப் பெருமையே தமிழ் தேசிய ஒற்றுமைக்குத் தடை: சீமான்

சுயசாதிப் பெருமை தமிழர்களின் தேசிய ஒற்றுமைக்குத் தடையாக இருக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    மானாமதுரை அருகே ஆதிக்க சாதியினர் வெறியாட்டத்தில் 2 பேர் பலி- வீடியோ

    சென்னை : கச்சநத்தம் சாதியப் படுகொலை ஒவ்வொரு தமிழர்களும் அவமானத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில், நடந்த சாதிய மோதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    தேநீர்க்கடையில் சக தமிழன் ஒருவன், கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை, ஏற்காத சுயசாதிப் பெருமை தமிழர்களின் தேசிய இன ஒற்றுமைக்குத் தடையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

     தமிழர் நிலத்திற்கான பிரச்னை

    தமிழர் நிலத்திற்கான பிரச்னை

    மேலும் அந்த அறிக்கையில், வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழ் தேசிய இனம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தன் உரிமையைக் காக்க , தனது வாழ்வை காக்க, தன் நிலத்தைக் காக்க போராடி வருகிறது. தமிழர் நிலம் பல வளச் சுரண்டலுக்கு உள்ளாகி வாழ தகுதியற்றதாக மாறி நிற்கிறது.

     சாதி மதப் பிரச்னை

    சாதி மதப் பிரச்னை

    ஆற்று மணல் கொள்ளை, கனிம வள சுரண்டல், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், மீத்தேன்,ஷெல் எரிவாயு போன்றவற்றிற்காக நம் நிலத்தையும் வளத்தையும் இழக்கிற அபாயம், நீர் உரிமைகள் பறி போன அவலம் , ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடி 13 உயிர்களைப் பறி கொடுத்த கொடுமை போன்ற எட்டு திசையும் சுற்றி இருக்கிற பிரச்சனைகளுக்குத் தமிழர்கள் போராடி வருகிற நிலைமையில் சாதி மோதலினால் தமிழர்கள் இருவர் பலியான செய்தி கேட்டு உயிர் பதறுகிறது.

     மனம் கொதிக்கிறது

    மனம் கொதிக்கிறது

    இன்னமும் இந்த இனம் சாதி உணர்வால் பிளவுற்று உதிரம் சிந்தி உயிர்ப்பலி கொடுத்து இருக்கிறதே என நினைக்கும் போது தமிழின ஓர்மைக்காகச் சகலவிதமான அடக்குமுறைகளுக்கும் ,கொடுஞ் சிறை வாசத்திற்கும், கணக்கற்ற வழக்குகளுக்கும் அஞ்சாமல் தமிழின உரிமை போராட்ட களங்களில் நிற்கிற கோடிக்கணக்கான தமிழின இளைஞர்களின் மனம் கொதிக்கிறது.

     சாதிய வேறுபாடு

    சாதிய வேறுபாடு

    ஒரு தேநீர்க்கடையில் சக தமிழன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறான் என்பதைக்கூட அனுமதிக்காத இந்தச் சுயசாதி பெருமித உணர்ச்சி தமிழ் தேசிய இன ஒற்றுமைக்கு மாபெரும் தடையாக விளங்குகிறது. உலகின் மூத்த குடியான தமிழினத்தில் சாதிய உணர்ச்சிக்கு, சாதிய வேறுபாட்டிற்கு இடமில்லை. இடையில் நுழைந்த சாதிய உணர்ச்சிக்கும், சாதிய வேறுபாட்டிற்கும் நாம் கொடுத்த விலையும் அடைந்த இழப்புகளும் கணக்கற்றவை.

     தமிழனுக்கு அவமானம்

    தமிழனுக்கு அவமானம்

    இந்த உலகில் வாழும் பல்வேறு தேசிய இனங்களைப் போல நமது இனமும் முன்னேற வேண்டும், நமது உரிமைகள் காக்கப்பட வேண்டும், நமது தாய் நிலம் மீட்கப்பட வேண்டும் என்கின்ற நமது கனவுகளுக்குச் சுயசாதி பெருமித உணர்ச்சி மாபெரும் தடையாக விளங்குகிறது. இத்தனை சிறப்புகளையும் தாண்டி தமிழன் இன்னும் வரலாற்றிலிருந்து உரிய பாடம் கற்காமல் சாதிப் பெருமை பேசிக்கொண்டு சாதி கட்டமைப்புகளைக் காப்பாற்ற சக தமிழனை கதறக்கதற வெட்டி சாய்த்துக் கொண்டு இருப்பது உண்மையில் ஒவ்வொரு தமிழனுக்கும் அவமானமாக இருக்கிறது.

     காலத்தின் கட்டாயம்

    காலத்தின் கட்டாயம்

    அந்நியரை எதிர்த்து தாய்நாட்டின் விடுதலைக்காகச் சாதி கடந்து ஒற்றுமையாய் நின்று உயிரை சிந்தி போராடிய வேலுநாச்சியாரும் குயிலியும் வாழ்ந்த சிவகங்கை நிலம் இன்று சாதி என்கின்ற கொடும் நோயினால் உதிரம் சிந்தி நிற்பது கண்டு நான் வேதனைப்படுகிறேன். சுய சாதிப் பெருமிதம் என்பது ஒருவித உளவியல் நோய். பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கிற நம் தமிழினம் சாதிய உணர்ச்சிக்கும், சுயசாதி பெருமைக்கும் இடம் கொடுக்காமல் தமிழர் என்கின்ற ஓர்மை உணர்வோடு திகழ வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

     உடனடியாக கைது

    உடனடியாக கைது

    ஒவ்வொரு தமிழின இளைஞனும் சாதிய உணர்ச்சியைத் தனது ஆழ்மனதிலிருந்து அழித்தொழித்தால்தான் அடிமை இருட்டில் இழி நிலையில் கிடக்கின்ற நமது இனம் மேல் எழும்ப முடியும். நினைப்பதற்கே பதறுகின்ற இந்தக் கொடிய கொலையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இதில் உரிய அக்கறை காட்டி இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாரபட்சம் இன்றி உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

     வாழ்வாதார உதவிகள்

    வாழ்வாதார உதவிகள்

    மேலும் கலவரம் பரவாமல் இருக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக மாறாமல் இருக்கவும் உரிய தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சாதிய உணர்ச்சியினால் சக தமிழனை வெட்டி சாய்க்கின்ற இதுபோன்ற சம்பவங்களைத் தமிழக அரசு தனது இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் கொலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கைது செய்து உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும், இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுத் தன் உடைமைகளை இழந்து, உயிர் இழந்து வாடுகிற மக்களுக்கு உடனடியாக வாழ்வாதார உதவிகளைத் தமிழக அரசு செய்ய வேண்டும்.

     தமிழ்ச் சமூகத்தின் சாதி

    தமிழ்ச் சமூகத்தின் சாதி

    கடவுள் வெறி சமய வெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோய்! நோய்! நோயே! இடைவந்த சாதிஎனும் இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம் தாய்! தாய்! தாயே! என்கின்ற பாவேந்தர் வாக்கிற்கேற்ப நமது தமிழ்ச் சமூகமும் சாதி எனும் இடர் ஒழிய தமிழர் என்கின்ற ஒருமை உணர்ச்சியுடன் ஒன்று திரள வேண்டுமென இதன் மூலம் நான் கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Own Community Pride big loss for Tamils Unity says Seeman. Naam Tamilar Party Chief Coordinator Seeman says that, Katchanatham issue is too brutal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X