For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் ஆந்திர தொழில், கல்வி நிறுவனங்களே இருக்காது.. பண்ருட்டி வேல்முருகன் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: பாலாற்றில் தடுப்பணை உயரத்தை உயர்த்துவதற்கும், தமிழகத்துக்குச் சொந்தமான கோவிலை கைப்பற்றுவதற்கும் ஆந்திர அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலை நீடித்தால், தமிழகத்தில் ஆந்திர தொழில், கல்வி நிறுவனங்களே இருக்காது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்த்து போராடி வருகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டங்களைத் தொடர்ந்து தமிழக அரசும் தமது கடுமையான எதிர்ப்பை ஆந்திரா அரசிடம் தெரிவித்திருந்தது.

Panruti Velmurugan warns Andhra govt

இந்த நிலையில் வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே புல்லூர் தடுப்பணையை மேலும் 10 அடிக்கு உயர்த்தும் நடவடிக்கையை ஆந்திரா அரசு மேற்கொண்டு வருவது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழகத்தின் 2,000 ஏக்கர் விவசாயம் பொய்த்துப் போகும். அத்துடன் தமிழகத்தில் பாலாறு என்ற நதியே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

இதேபோல் தடுப்பணை அருகே உள்ள புல்லூர் கனகநாச்சியம்மன் கோவில் தமிழகத்துக்குச் சொந்தமானது. தற்போது இந்த கோவிலுக்கும் உரிமை கொண்டாடுகிறது ஆந்திரா.

ஆந்திராவின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்து போராட்டத்தில் குதித்து விவசாய பெருங்குடிமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது. பாலாறு படுகை விவசாயிகளின் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்கிறது.

பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை உயர்த்தும் நடவடிக்கையை ஆந்திரா அரசு கைவிட வேண்டும்; இந்த விவகாரத்தில் ஆந்திரா அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்.

இதையும் மீறி ஆந்திரா அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுமேயானால் தமிழகத்தில் எந்த ஒரு ஆந்திராவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களோ, கல்வி நிறுவனங்களோ ஒருபோதும் இயங்க விடாமல் பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மாநில சுயாட்சிக்கு மரண அடி கொடுக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்

இதற்கிடையே பண்ருட்டி வேல்முருகன் விடுத்துள்ள இன்னொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் 189 உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் மாநில அரசின் ஒதுக்கீட்டை ரத்து செய்து அகில இந்திய அளவிலான சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு என்பது 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. உண்மையில் பின்தங்கிய மாநில மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அகில இந்திய ஒதுக்கீடானது வளர்ச்சி கண்ட பிற மாநிலத்தவரே அனுபவித்து வருகின்றனர்.

அதேபோல் தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இதை உச்சநீதிமன்றம் தம்முடைய தீர்ப்பின் மூலம் ஒழித்துக் கட்டுவது என்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டிருக்கும் சமூக அநீதியாகும். இப்போது தமிழக உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு அகில இந்திய அளவில் சேர்க்கை நடத்த வேண்டுமாம்! இனி தமிழக மாணவர்களுக்கு இந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்பு என்பதும் எட்டாகனியாகிவிடும்.

ஏற்கனவே மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்து ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்து கல்வி கனவை கானல்நீராக்கிவிட்டது உச்சநீதிமன்றம். இப்போது மருத்துவம் படித்த மாணவர்கள், அரசு மருத்துவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ படிப்பிலும் மண்ணை அள்ளிப் போட்டு அகில இந்திய சேர்க்கைக்கு திறந்துவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். இதனால் தமிழக மாணவர்களின் உயர் சிறப்பு மருத்துவ படிப்பு என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது.

இதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் சேவைத் தரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவத் துறை என்பதே வலுவற்றதாகிவிடும். இது தமிழகத்தின் நலனை மிகவும் பாதிப்படையச் செய்யும் உத்தரவாகும். மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அடுத்தடுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பதும் உத்தரவுகளை பிறப்பிப்பது என்பது இந்தியாவின் ஒற்றுமைக்கு அடித்தளமான மாநில சுயாட்சிக்கு மரண அடி கொடுப்பதாகும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டு தமிழகம் பறிகொடுத்திருக்கிற உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று அவர் கோரியுள்ளார்.

English summary
TVK leader Panruti Velmurugan has warned the Andhra govt in the Palary check dam issue and temple issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X