For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையை பயமுறுத்திய சிறுத்தை... 4 பேர் காயம்.. பாத்ரூமில் வைத்து சிக்கியது!

Google Oneindia Tamil News

நெல்லை: திருநெல்வேலி, பாளையங்கோட்டை நகருக்குள் ஒரு சிறுத்தை புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. நான்கு பேரைக் கடித்த அந்த சிறுத்தை பின்னர் அரை மயக்க நிலையில் வீட்டு பாத்ரூம் ஒன்றில் சிக்கியது.

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ளது திருமால் நகர். ரெட்டியார்பட்டி மலையடிவாரம் அருகே உள்ள நெல்லை மாநகராட்சியின் விரிவாக்க பகுதியான இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இன்று அதிகாலை அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் வாக்கிங் சென்றார். அப்போது அங்குள்ள ஒரு புதர் பகுதியில் இருந்து ஏதோ ஒரு விலங்கு ஒன்று பாய்ந்து ஓடியது. முதலில் அதனை நாய் என்று நினைத்த அந்த முதியவர் அருகில் சென்று பார்த்த போது அது சிறுத்தை என தெரியவந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கூறினார்.

Panther creates panic among Palayamkottai people

இதையடுத்து பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறுத்தை பதுங்கியிருந்த இடத்திற்கு விரைந்தனர். மக்களைக் கூட்டமாக பார்த்த சிறுத்தை பயந்து போய் அங்கிருந்து ஓடியது. வீட்டுச் சுற்றுச் சுவர்களில் ஏறி குதித்து ஓடியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சிறுத்தையை பிடிக்க வந்த அவர்கள் அதிர்ச்சியிலும், பீதியிலும் ஓடினர்.

பெருமாள்புரம் போலீஸ் மற்றும் நெல்லை வனத்துறையினருக்கு தகவல் போனது. இதைத் தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி அம்புரோஸ் தலைமையில் வனச்சரகர் பால்ராஜ் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு சுற்றிதிரிந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Panther creates panic among Palayamkottai people

ஆனால் அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததால் அதனை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறுத்தையை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி வன ஊழியர்கள் வேனில் ரேடியோ கட்டி மைக் மூலம், திருமால்நகர் பகுதியில் சிறுத்தைசுற்றி திரிவது குறித்து தெரியப்படுத்தினர். துமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்ததையடுத்து பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளின் கதவுகளை பூட்டி விட்டு உள்ளே தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இதனிடையே திருமால்நகர் பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை அங்குள்ள ஒரு வீட்டின் மாடிப்படி வழியாக ஏறி மேலே சென்றது. பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு வீடுகளின் மாடிக்கும் தாவி தாவி ஓடியது. இதனால் வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். பலர் பயந்து வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

ஒவ்வொரு வீட்டு மாடியின் வழியாக ஏறி சென்ற சிறுத்தை சிறிது நேரத்தில் கீழே இறங்கி தெருப்பகுதியில் ஓடியது. அப்போது அப்பகுதியில் நின்ற காடுவெட்டி பஞ்சாயத்து தலைவர் துரை என்பவர் மீது பாய்ந்து கடிக்க முயன்றது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் அவரது முதுகில் லேசான காயம் ஏற்பட்டது.

சிறுத்தையை பிடிக்க முயன்ற வன ஊழியர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 பேரையும் தாக்கியது. இதில் அவர்கள் லேசான காயம் அடைந்தனர். காயமடைந்த 4 பேரையும் போலீசார் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க பல்வேறு திட்டங்களை வகுத்தனர். மயக்க ஊசி செலுத்தியும், கூண்டு வைத்து பிடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கும் இங்கும் சுற்றிதிரிந்த சிறுத்தைப்புலி கடைசியாக அங்குள்ள பேராசிரியர் ஒருவரது வீட்டிற்குள் சென்று பதுங்கியது.

உடனே கால்நடை மருத்துவர்கள் சிறுத்தை மீது மயக்க ஊசியை செலுத்தினர். ஊசி பட்டதும் அந்த சிறுத்தை அங்கிருந்து ஓடி வீட்டின் குளியலறைக்குள் சென்று பதுங்கியது. சிறிது நேரத்தில் சிறுத்தை மயங்கி விடும் என்பதால், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இருந்து இரும்பு கூண்டு கொண்டு வரப்பட்டது. அதனை சிறுத்தை பதுங்கி இருந்த வீட்டிற்குள் கொண்டு செல்ல, அந்த வீட்டின் காம்பவுண்டு சுவர் இடித்து உடைக்கப்பட்டது. பின்பு குளியலறையின் கதவை ஒட்டியவாறு இரும்பு கூண்டு இறக்கி வைக்கப்பட்டது.

சிறிது நேரம் கழித்து குளியலறை கதவை திறந்த போது அரைகுறை மயக்கத்தில் இருந்தது சிறுத்தை. மீண்டும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த சிறுத்தை தப்பி ஓடி முயன்று வெளியேறியது. ஆனால் வைத்திருந்த இரும்புக் கூண்டில் சிக்கிக் கொண்டது. சிறுத்தை பிடிபட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் நிம்மதி ஏற்பட்டது.

அதி வேகமாக செயல்பட்ட வனத்துறையினரும், போலீஸாரும் சிறுத்தையை பத்திரமாகவும், உயிருடனும் உடனடியாக பிடித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த சிறுத்தை களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இருந்து தப்பி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

English summary
A Panther created panic among Palayamkottai people this morning. The panther was captured alive after some hours of struggle by the foresters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X