For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழ. கருப்பையா வீடு மீது நள்ளிரவில் தாக்குதல்- கொலை செய்வோம் என அதிமுகவினர் மிரட்டுவதாக புகார்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தன்னை கொலை செய்து விடுவதாக அதிமுகவினர் மிரட்டுவதாக துறைமுகம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பழ. கருப்பையா புகார் தெரிவித்துள்ளார். பழ.கருப்பையா வீடு மீது நள்ளிரவில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில், கார் கண்ணாடி மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியுள்ளது.

துறைமுகம் சட்டசபைத் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பழ.கருப்பையா. துக்ளக் ஆண்டு விழாவில் ஆட்சியை விமர்சிக்கும் வகையில் பேசியதால் இவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி கடந்த புதன்கிழமை இரவு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, பழ.கருப்பையா கடந்த வியாழக்கிழமை தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும், இதற்காக தனது தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்ட அவர், ஜெயலலிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் கூறினார்.

என்னைப் பொறுத்தவரை மனதளவில் ராஜினாமா செய்து விட்டேன். என் பேச்சு தொடர்பாக என்னிடம் எந்த விளக்கமும் கேட்க வில்லை. முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. நான் வெளிப்படையாக பேசுபவன். அதனால்தான் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். தற்போது கவுன்சிலர்கள் முதல் அமைச்சர்கள் வரை அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். தாது மணல் உள்ளிட்டவற்றில் அரசுக்கு எந்த வருமானமும் வரவில்லை. லஞ்சம் என்பது பெரிய விஷயமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார் பழ. கருப்பையா.

ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதும் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்த நிலையில் பழ.கருப்பையா ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நேற்றிரவு 11 மணிக்கு குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் அவரது வீடு மீது சரமாரியாக கல்வீசி தாக்கியதுடன், அவரை வெளியே வரும்படி அழைத்துள்ளனர். பழ.கருப்பையா வராததால் அங்கிருந்த அவரது கார் மற்றும் வீட்டு ஜன்னல், கதவுகளை உடைத்துவிட்டு சென்றுள்ளனர்.

மர்ம கும்பல் தாக்குதல்

மர்ம கும்பல் தாக்குதல்

தன் வீடு தாக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த மூன்று பேர் வீட்டு வாசலில் நின்று கூச்சல் போட்டனர். மேலும், தன்னுடைய பெயர் ராதாகிருஷ்ணன் என்றும், அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாகவும் வெளியே வா உன்னிடம் பேச வேண்டும் என்று கூச்சலிட்டு அழைத்தனர். நான் வெளியே செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கற்களை வீட்டின் மீது வீசினர். மேலும், கம்பி, கட்டை போன்ற ஆயுதங்களால் வீட்டின் கதவு, ஜன்னல் போன்றவற்றை அடித்து நொறுக்கியதுடன். எனது கார்மீது கல்வீசி உடைத்தனர். பின்னர் அருகிலுள்ள கவுன்சிலர் வீடு நோக்கி சென்றனர். அதற்குள் எனது மகன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ஆள் வைத்து தாக்குவதா?

ஆள் வைத்து தாக்குவதா?

அந்த கும்பல் மீண்டும் திரும்பி வந்தது. அதற்குள் போலீசாரும் வந்துவிட்டனர். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி விட்டது. எனக்கு அதிமுக கட்சி செயல்பாடு பிடிக்காததால், கட்சியிலிருந்து வெளியேறினேன். அதற்காக ஆள் வைத்து என்னை தாக்குவார்களா?.

நள்ளிரவு தாக்குதல் நாகரீகமா?

நள்ளிரவு தாக்குதல் நாகரீகமா?

சுதந்திர நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு உரிமையில்லையா?. நான் ஒரு கருத்தை தெரிவித்தால், அது பிடிக்கவில்லை என்றால் ஆட்சேபனை தெரிவிக்கலாம். பதிலாக, ஆட்களை வைத்து நள்ளிரவில் தாக்குவது, கொலை செய்ய வருவது அரசியல் நாகரீகமா?. இன்று என்னை வீடு தேடி தாக்க வந்தவர்கள், நாளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

வேலூரில் தமிழ் சங்கத்தினை இன்று தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், அவர்களை தொடர்பு கொண்ட அதிமுகவினர் என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க கூடாது என்றும் நான் வந்தால் சங்கத்தை தொடங்கவிட மாட்டோம் என்னை கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர். இதனால், பயந்து போன அந்த தமிழ் சங்க நிர்வாகிகள் என்னை தொடர்பு கொண்டனர். நீங்கள் வந்தால் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஆபத்து எனவே நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என்று கூறினர் என பழ.கருப்பையா தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

பழ.கருப்பையா வீட்டில் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதிமுகவினர் சந்திப்பு

மதிமுகவினர் சந்திப்பு

பழ. கருப்பையாவின் வீடு, கார் மீது கல்வீசி தாக்கப்பட்ட உடன், மதிமுகவினர் ஏராளமானோர் உடனடியாக பழ. கருப்பையாவின் வீட்டிற்கு இரவோடு இரவாகச் சென்று ஆறுதல் கூறினர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பழ.கருப்பையாவின் வீட்டிற்கு மதிமுகவினர் வந்து ஆறுதல் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆறுதல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆறுதல்

இந்த சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி ஆகியோர் பழ.கருப்பையாவை சந்தித்து நேரில் நலம் விசாரித்தனர். அதிமுகவினர்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி உள்ளனர்.

English summary
Pazha Karuppaiah house was attacked by a group of unidentified persons on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X