For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீ அடிச்சா அடி.. நான் உதைச்சா இடி...!

Google Oneindia Tamil News

சென்னை: வெற்றி என்பது விபத்தல்ல. அது கடின உழைப்பு, கற்றுக் கொள்ளும் திறன், ஆழ்ந்த ஆய்வு, தியாகம் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் என்ன செய்கிறோமோ அதை ரசித்து, நேசித்து செய்வது.. இவற்றின் இறுதியில் கிடைப்பதுதான் வெற்றி.. இது பீலே சொன்னது.

பிரேசில் நாட்டில் ஒவ்வொரும் இழுக்கும் சுவாசக் காற்று இரண்டு பேரை சுமந்து செல்கிறது. ஒன்று ஆக்சிஜன்.. இன்னொன்று பீலே. பிரேசில் மக்களின் வாழ்க்கையில் அப்படி அப்பிக் கொண்டு கிடக்கிறது பீலேவின் வரலாறும், வாழ்க்கையும்.

Pele the

அப்படிப்பட்ட பீலேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகியுள்ளது... Pele: Birth of a Legend என்ற பெயரில். இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பவர் நமது இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான். கெவின் டி பாலா பீலே வேடத்தில் நடித்துள்ளார். படம் உலகெங்கும் திரைக்கு வந்துள்ளது. ஆனால் பீலேவின் ரசிகர்களுக்கு முழுமையான திருப்தியை அது தரத் தவறியுள்ளது.

அதை விடுங்க.. பீலே கிட்ட வாங்க.. அது 1950ம் ஆண்டு. உலகக் கோப்பை இறுதிப் போட்டி. பிரேசில் - உருகுவே மோதின. இந்தப் போட்டியை நடத்தியது பிரேசில். இதனால் இறுதிப் போட்டியில் பிரேசில் வெல்லும் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் உருகுவே, பிரேசிலை தோற்கடித்து அத்தனை பிரேசிலியர்களுக்கும் ஷாக் கொடுத்தது.

தனது தந்தை சியூ ஜோர்ஜின் மடியில் படுத்தபடி போட்டியின் நேரடி ஒலிபரப்பை வானொலியில் கேட்டுக் கொண்டிருந்த இளம் பீலே துள்ளி எழுந்தார். மாடிக்கு ஓடினார். மாடியிலிருந்து தூரத்தில் தெரிந்த மைதானத்தைப் பார்த்தார். அவரது மனதுக்குள் பேரலைகள் மோதி மோதி வீழ்ந்தன. அந்த இளைஞனின் நெஞ்சு விம்மிப் புடைத்தது. கீழே வந்தான்.. தனது தந்தையிடம் சொன்னான்.. நான் வெல்வேன். பிரேசிலுக்காக நான் வெல்வேன். கவலைப்படாதீர்கள் தந்தையே என்றான்.

தந்தைக்கும் தெரியும். தன் மகன் கால்பந்து உலகை ஆளப் பிறந்தவன் என்று. காரணம், பீலேவின் திறமை அந்த சிறு வயதிலேயே பளிச்சிட்டு அவரது கால் திறனை வெளிக்காட்டிக் கொண்டிருந்த சமயம் அது.

ஷூக்கள் வாங்கக் கூட காசு இல்லாத வறுமைக் குடும்பம் பீலேவுடையது. ஒருமுறை அவரும், அவரது கருப்பர் இன நண்பர்களும் சேர்ந்து வெள்ளையர் இன நண்பர்களுடன் மோதியபோது ஷூ கூட போடாமல் விளையாடினர். தனது வெள்ளையர் இன சகாக்கள் போட்டிருந்த டிரஸ், ஷூ வைப் பார்த்து ஏங்கிப் போனார் பீலே.

மேலும் வெள்ளையர் இனத்தவர் ஆடும் விதத்தைப் பார்த்த பீலே, அவர்களை விட தான் சிறப்பாக ஆடினால்தான் அணியில் இடம் பிடிக்க முடியும் என்று முடிவு செய்து தனது பாணியை மாற்றி வித்தியாசமாக ஆட ஆரம்பித்தார். அப்படி அவர் எடுத்துக் கொண்ட பாணிதான் "ஜிங்கா". உலகம் முழுவதும் படு பிரபலமான வார்த்தை இந்த ஜிங்கா.. காரணம் பீலே. அது ஒரு வகையான அக்ரோபாட்டிக் முறை. இந்த ஜிங்காதான் பீலேவை கால்பந்து உலகில் உச்சிக்குக் கொண்டு சென்று உட்கார வைத்தது.

மைதானத்தில் பீலே என்ற பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் கூடவே ஜிங்கா ஜிங்காவும் தவறாமல் முழங்கும். பீலேவின் அடையாளமாக ஜிங்கா மாறிப் போனது.

பீலே கோலடிக்கும் விதமே அலாதியானது. எங்கிருந்து பாய்ந்து வருகிறார், எப்படி பந்தை உதைத்தார் என்பதே தெரியாது. நீ அடிச்சா அடி.. நான் உதைச்சா இடி என்பதுதான் பீலேவின் ஸ்டைல். அதை இப்படத்தில் சரியாக காட்டவில்லை என்பது நிச்சயம் பெரிய குறைதான்.

1957ம் ஆண்டு பீலே பிரேசில் அணியில் இடம் பிடித்தார். 1958ல் ஸ்வீடனில் நடந்த உலகக் கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார். பீலே அணியல் இருந்தால் புயலும் கூடவே மையம் கொண்டிருக்கும்... அவர் எங்கு ஓடுவார், எப்படித் தாவுவார், எப்படி பந்தை பாஸ் செய்வார், எப்படி உதைப்பார்.. ம்ஹூம்.. எதையுமே அனுமானிக்க முடியாமல் எதிரணியினர் பரிதவித்துப் போய் விடுவார். "பார்வர்ட்" பீலே ஒருபோதும் ஆட்டத்தில் "பேக்வேர்டு"க்குப் போனதே இல்லை. குறி வச்சா வச்சதுதான்.. பந்து அந்து போகும் வரைக்கும் விட மாட்டார்.

பீலேவின் "பாசிட்டிவ் ஷேட்"களை மட்டும் படத்தில் பார்த்துப் பார்த்துக் கோர்த்திருக்கிறார்கள். அவர் குறித்த சர்ச்சை பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அந்த சர்ச்சைகள் பீலேவுக்கு பெரிய கெட்ட பெயரையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. அதனாலும் கூட அது குறித்து இயக்குநர்கள் ஜெப் ஜிம்பாலிஸ்ட் - மைக்கேல் ஜிம்பாலிஸ்ட் சகோதரர்கள் கவலைப்படவில்லை என்று தெரிகிறது.

படத்தில் ஆழம் இல்லை என்பது ரசிகர்களின் ஒரு குறை. ஆனால் பீலேவின் ஆட்டத்தில் இன்னும் கூட மயங்கித்தான் கிடக்கிறார்கள். மீண்டும் பறந்து வந்து நம் முன் ஆடுமா அந்த கருப்பு மின்னல் என்று ஏங்காத கால்பந்து நெஞ்சங்களே இல்லை என்பதுதான் நிதர்சனம்.. !

"ஒரு நாள் மரணமடைவேன்.
ஆனாலும் நான் எல்லாவற்றிலும் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டதற்காக மகிழ்ச்சியும் அடைவேன்.
உலகின் மிகப் பெரிய விளையாட்டை நான் ஆடியுள்ளேன்.
அது எனக்கு உத்வேகம் கொடுத்தது, முயற்சிக்க கற்றுக் கொடுத்தது" - இது பீலேவின் மொழி.. அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் கூட பொருந்தும்.

பீலே பிரேசிலுக்கு மட்டுமல்ல, கால்பந்தை சுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷம்தான்.. படத்தைப் பாருங்க, உங்க கருத்தையும் சொல்லுங்க.. அதுக்கு முன்னாடி உங்களுக்காக இதோ டிரெய்லர்.

English summary
Pele: Birth of a Legend, the biopic movie of the great Pele is released worldwide. The movie has failed to lure the fans, but not Pele.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X