For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வை அனுமதித்ததற்கு கண்டனம்... டல்லாஸ் விழாவில் தமிழக அமைச்சர் பங்கேற்க எதிர்ப்பு

நீட் தேர்வை அனுமதித்ததற்கு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து டல்லாஸில் விழாவில் கலந்து கொள்ளும் தமிழக அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வை அனுமதித்ததற்கு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து டல்லாஸில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொள்வதற்கு அமெரிக்காவில் உள்ள பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Periyar Ambedkar Study circle in America condemns for Minister Mafoi Pandiyarajan

நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்து வாய்ப்புகளும் வசதிகளும் மறுக்கப்பட்டு சிறிய கிராமங்களில் ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களில் மகனாக மகளாக பிறந்த முதல் தலைமுறைக் குழந்தைகள் இந்த சமூகத்தில் வளர்ந்து, பொதுமைய நீரோட்டத்தில் கலப்பதற்கான ஒரே நம்பிக்கையாக இருப்பது கல்வி மட்டுமே. அந்த நம்பிக்கையையும் சிதைப்பதற்காக, இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு கொண்டுவரப்பட்ட கொடிய திட்டமே நீட். இந்த கொடிய திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதித்து, அமல்படுத்திய அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு மாஃபா பாண்டியராசன் அவர்களை இந்த ஆண்டு டாலாசில் நடைபெறவிருக்கும் 31 ஆவது பேரவை தமிழ் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்திருப்பதை சமூக வலைதளங்களின் வாயிலாக அறிந்து அதிர்ச்சியுற்றோம்.

1176 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ இடத்திற்கான தரவரிசையில் 196.5 கட் ஆஃப் மார்க் பெற்றும், நீட் தேர்வின் கொடுமையினால் தன் மருத்துவக்கனவு தகர்ந்துபோனதைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதையும் அதன் தொடர்ச்சியாக உலகம் முழுக்க நடைபெற்ற போராட்டங்களையும் நாம் நன்கு அறிவோம்.

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்தாலும், தமிழ் நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தங்களது ஆதரவையும் அதற்கான முன்னெடுப்பையும் அமெரிக்கத் தமிழர்கள் செய்துகொண்டே வருகின்றனர். ஈழம், சல்லிக்கட்டுப் போராட்டங்களைப் போல அனிதாவின் மரணமும் அமெரிக்கத் தமிழர்களைப் பெருந்துயரில் ஆழ்த்தியது. இதன் விளைவாக அமெரிக்கத் தமிழர்கள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து நாற்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் அஞ்சலிக் கூட்டமும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தியதோடு, இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டமும் செய்தனர். இதுமட்டுமில்லாமல் ஐ.நா கூட்டத்திற்கு வருகைபுரிந்த மத்திய அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குப் பெற்று, தமிழ் நாட்டு மாணாக்கர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக கடந்த ஆண்டு முதல் உலகப் முழுக்கவுள்ள தமிழ் அமைப்புகள் தொடர்ந்து போராடிவரும் சூழலில், நீட் தேர்வை அனுமதித்த அமைச்சரைத் தமிழ் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்திருப்பது உலகம் முழுக்க பரவியிருக்கும் தமிழர்களின் மனதைப் புண்படுத்துவதோடு தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களை நீர்த்துப்போக செய்யவும் வாய்ப்புள்ளதாக அச்சமுறுகிறோம். இது நம் தமிழ் இனத்திற்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.

இதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு தமிழ்நாட்டு மாணவர்களைத் தேர்வெழுத பிற மாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டது குறித்த ஊடக சந்திப்பில்
"எர்ணாகுளம் என்ன அமெரிக்காலயா இருக்கு? அதான் ஆயிரம் ரூபாய் கொடுத்தோம்ல" என்ற அமைச்சரின் ஏளன பேச்சு ஒட்டுமொத்த தமிழர்களின் மனதில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதையும் பேரவை கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். இந்த சூழலில் அமைச்சர் மாஃபா அவர்களை அழைத்து சிறப்பு செய்தால் அது அமெரிக்க தமிழர்களுக்கு மிகப்பெரிய இழுக்காக அமைவதோடு ஓர் வரலாற்று பிழையாகவும் நம் வரலாற்று பக்கங்களில் பதிவுசெய்யப்படும்.

காவிரி , ஸ்டெர்லைட் , நீட் போன்ற திட்டங்களின்மூலம் தமிழ்நாட்டை வஞ்சித்து கொண்டிருக்கும் இந்திய பிரதமரின் தமிழ் நாடு வருகையை கண்டித்து கருப்பு கொடி, பலூன் பறக்கவிட்டதோடு "GoBack மோடி" என்று சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து நடத்தி உலகத்தின் கவனத்தை நம் தமிழர்கள் ஈர்த்தனர் , இதனை தொடர்ந்து லண்டனிலும் இதேபோன்று போராட்டம் இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக நடைபெற்றதது. இதேபோன்று, அமைச்சர் மாஃபா அமெரிக்கா வரும்பட்சத்தில், அதையெதிர்த்துக் கண்டன போராட்டங்களும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதை எண்ணிக் கவலை கொள்கிறோம்.

முப்பது ஆண்டுகளாக தமிழ் மொழி , பண்பாடு, கலை ஆகியவற்றை முன்னெடுத்துச்செல்லும் பேரவை தமிழ்விழா, இந்த ஆண்டும் அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெறவேண்டும் என்று விரும்புவதோடு அதற்கான அனைத்து பணிகளையும் பேரவையுடன் இணைந்து முன்னெடுக்க ஆயத்தமாகவுள்ளோம்.

அமைச்சர் மாஃபா பாண்டியராசன் அவர்களின் வருகையைப் பெரும்பான்மையான அமெரிக்கத் தமிழர்கள் விரும்பவில்லை. நம் தமிழ் உறவுகளின் விருப்பத்திற்கு மதிப்பளித்து அமைச்சரின் அழைப்பை திரும்பப்பெற வேண்டுமென்று பேரவையைக் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் -அமெரிக்கா

English summary
Periyar Ambedkar Study Circle in America condemns for Minister Mafoi Pandiyarajan as the TN government allows to conduct Neet Exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X