For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எழுத்தாளர் பெருமாள் முருகனாகிய நான் இறந்துவிட்டேன்..அதிர வைக்கும் அறிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை : தனது மாதொருபாகன் நாவலுக்கு எதிர்ப்புகள் அதிகமானதைத் தொடர்ந்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் இனி தான் எழுதப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்

பிரபல எழுத்தாளரான பெருமாள் முருகன், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார். திருச்செங்கோடைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் கடந்த 2010ம் ஆண்டு மாதொருபாகன் என்ற நாவலை எழுதினார்.

Perumal Murugan gives up writing

அது நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றியது. குழந்தைப் பேறில்லாத தம்பதியரின் துயரங்களைக் கூறுவதாகும். வழக்கமாக நாவல் என்பது வாழ்க்கையும், கற்பனையும் கலந்த கலவை தான். அந்தவகையில், திருச்செங்கோடு கிராமத்தில் நடைபெறும் திருவிழாவை முன்வைத்து மாதொருபாகன் நாவல் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அந்த நாவல் சர்ச்சையில் சிக்கியது. நாவலை எரித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் பெருமாள்முருகன்.

இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள்முருகன் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது அவரது வார்த்தைகளில்:

Perumal Murugan gives up writing

"நண்பர்களே, கீழ்வரும் அறிக்கை இரண்டு நாட்களுக்கு இந்த முகநூலில் இருக்கும். அதன்பின் சமூக வலைத்தளச் செயல்பாடுகளில் இருந்து பெருமாள்முருகன் விலகி விடுவான். சமூக வலைத்தளங்களில் அவனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

எழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை

எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.

பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.

‘மாதொருபாகன்' நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:

1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.

2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.

3. பெருமாள்முருகன் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.

4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.

5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.

அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.
பெ.முருகன்
பெருமாள்முருகன் என்பவனுக்காக "

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

எழுத்துலகில் பெருமாள் முருகனின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Haunted by Hindutva and caste outfits, writer Perumal Murugan, whose novel Madhorubhagan was under attack, announced his decision to give up writing altogether.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X