For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீக் எண்ட் செலவு தாறுமாறா போகுதா.. அடிங்கடே.. ஆனால் கையை கழுவிட்டு அடிங்கடே!

Google Oneindia Tamil News

சென்னை: 'கொலம்பஸ்.., கொலம்பஸ் விட்டாச்சி லீவு'... வீக் எண்ட் எனப்படும் வாரக் கடைசி நாள் வந்தவுடன் பள்ளிக் குழந்தைகள் மாதிரி நம்ம இளசுகளும் இப்படி துள்ளிக் குதிப்பதைப் பார்க்க முடியும். விடுமுறைன்னாலே எல்லாருக்கும் முகத்துல பளிச்சுனு பல்பு எரியுறது இயற்கைதானே.

ஓவர் ஒர்க் லோட், ஆபீஸ் பாலிடிக்ஸ், உயரதிகாரிகளின் அழுத்தம் என வரிசைகட்டும் பிரச்சனைகளுக்கு ஒரு வடிகாலாககவே வீக் எண்டை இன்றைய இளைஞர்கள் கருதுகிறார்கள். அளவிற்கு அதிகமான சுமைகளால் வீக் எண்ட் வந்ததையே உணராமல் கடமையே கண்ணாகக் கருதி மாங்கு மாங்கென வேலை செய்பவர்களும் உண்டு. அதேசமயம் வீக் எண்ட் எப்போடா வரும் என்கிற ஏக்கத்தில் மூழ்கி, அதையே நினைத்து காலத்தைக் கடத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மேலை நாடுகளில் எப்போதோ ஆரம்பித்த பழக்கம் இது. வாரத்தில் 5 நாட்கள் அசராமல் பணியாற்றுவதும், வார விடுமுறை நாட்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடித் தீர்ப்பதும் மேலை நாடுகளைப் பொறுத்தவரை மிகப் பழமையான சங்கதி. ஆனால் நம் நாட்டில் இந்த வீக் எண்ட் கொண்டாட்டங்கள் காலதாமதமாகத்தான் தலைகாட்டத் தொடங்கின. அதிலும் ஐடி கம்பெனிகளின் வருகைக்குப் பிறகே இந்தக் கொண்டாட்டங்கள் அதிகளவில் களைக்கட்டத் தொடங்கின.

சினிமா போகலாம்

சினிமா போகலாம்

கும்பலாக சினிமாவுக்குப் போவதில் தொடங்கி, ஹோட்டல், ரிசார்ட், மிட்நைட் பார்ட்டி என விதவிதமான வடிவங்களில் வீக் எண்ட் கொண்டாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. சென்னை போன்ற நகரங்களில் வசித்துவரும் இளைஞர்களின் மாதாந்திர பட்ஜெட்டில் வீக் எண்ட் பார்ட்டிக்கென்று கணிசமான தொகை ஒதுக்க வேண்டியிருக்கிறது.

செலவுகளை திட்டமிடுங்க

செலவுகளை திட்டமிடுங்க

தங்களின் வருமானத்திற்கு ஏற்பவும், இதர செலவுகளை கணக்கில் கொண்டும் வீக் எண்ட் செலவுகளை ஒரு சிலர் பக்காவாக கணக்கிட்டு அதன்படி செயற்படுத்தி வருகின்றனர். ``யார் என்ன சொன்னாலும் சரி... நமக்குண்ணு ஒரு 'லிமிட்' இருக்குதில்ல! ஊத்தித் தர்றாங்கண்ணு அப்படியே உள்ளே தள்ள முடியுமா! அப்படி செஞ்சா என்ன ஆகும்ணு நல்லாவே தெரியும். அதே மாதிரிதான் வீக் எண்ட் செலவுகளும். என்னதான் எஞ்சாய்மெண்ட் என்றாலும் அதற்கு ஒரு லிமிட் வேணும்தானே!'' என போதி மரத்து புத்தன் போல தெளிவாகப் பேசுபவர்களும் உண்டு.

திட்டமிடல் இன்றி

திட்டமிடல் இன்றி

இதற்கு நேரெதிராக எந்தவித பிளானும் இன்றி வீக் எண்ட் கொண்டாட்டங்களுக்காக எக்குத்தப்பாக வாரியிறைத்து சிக்கலில் மாட்டிக் கொண்டவர்களையும் இங்கே பார்க்க முடியும். புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் அவர். சென்னை தரமணியில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் பணியாற்றுகிறார். சம்பளம், மாதம் அரை லட்சத்தைத் தொடும். ஜாலி பேர்வழியான இந்த இளைஞர், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற எண்ணம் கொண்டவர். இதனால் அவரது அறையில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் வாரக் கடைசியில் சொல்லவே வேண்டாம். வந்து குவியும் அத்தனை பேரின் தாகத்தையும் மூச்சுமுட்டத் தீர்த்துவைத்ததில்... எக்கச்சக்கமாகக் கடன் எகிறிவிட்டது.

கடன் தீரலையே

கடன் தீரலையே


கைவசமிருந்த கிரடிட் கார்டுகளைத் தேயோ தேயென்று தேய்த்தும் கடன் செட்டிலாகவில்லை. ஆசைஆசையாக வாங்கிய செயின் மற்றும் மோதிரங்களை விற்று கடனைத் தீர்த்தவர், இப்போது 'எல்லாவற்றையும்' விட்டுவிட்டார். விளைவு! சாதாரண நாட்களில் மட்டுமல்ல, வார விடுமுறை நாட்களிலும் இப்போது அவரது அறையில் மருந்துக்குக் கூட யாரையும் பார்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட மனிதர் தனிமைச் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

என்எஸ்கே பாட்டு

என்எஸ்கே பாட்டு

கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு. ‘'தேதி ஒண்ணில இருந்து இருபது வரை கொண்டாட்டம், கொண்டாட்டம். இருபத்தொண்ணில் இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் திண்டாட்டம்'' என்கிற இந்த டூரிங் டாக்கிஸ் பாடல் இன்றைய யூ டியூப் யுகத்திற்கும் அப்படியே பொருந்திப் போகிறது. தனி நபர்கள் மட்டுமல்ல, வீக் எண்ட் கொண்டாட்டங்களுக்கு முன்பு தாறுமாறாக வாரியிறைத்த நிறுவனங்கள் கூட இப்போது கையை சுருக்கிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐடி கம்பெனிகளில் சேரும் இளைஞர்கள், எந்த நிறுவனம் எண்டெர்டெயின்மெண்டுக்கு அதிகம் செலவழிக்கிறதோ அதையே தேர்வு செய்யும் நிலை இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ``மச்சான் எங்க கம்பெனியில 6 மாசத்திற்கு ஒருமுறைதான் எம்ப்ளாயிஸ் கெட்-டுகெதர். அதனால அக்கம்பக்கம் விசாரிச்சிக்கோ`` என நண்பர்கள் அட்வைஸ் செய்யும் அளவிற்கு நிலைமை உள்ளது.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் வீக் எண்ட் கொண்டாட்டங்களைப் பற்றி பேச்செடுத்தாலே பலருக்கும் கண்ணைக் கட்டும் நிலை ஏற்படுகிறது. இதனால் முன்பு வீக் எண்ட் பார்ட்டிகளில் பங்கேற்க ஒரு ஆள் விடாமல் சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் வலைவீசியவர்கள் இப்போது சைலண்டாக ஒன்றிரண்டு பேர்களுடன் சென்று கடனே என கொண்டாட்டங்களை முடித்துத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரிலாக்சேஷன் தேவை

ரிலாக்சேஷன் தேவை

``அழுத்தம் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழலில் வீக் எண்ட் கொண்டாட்டங்கள் போன்ற ரிலாக்சேஷன் நிச்சயம் தேவைதான். அது சோர்வை நீக்கி நம்மை ரீசார்ஜ் செய்ய ரொம்பவே உதவும். அதேநேரம் கொண்டாட்டங்களுக்கான செலவீனங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ரிலாக்சேஷனுக்காக செலவழிக்கிறேன் என்கிற பெயரில் ரீல் அந்துபோகுமளவிற்கு எல்லை மீறக் கூடாது. ஒரு பேலன்சான அணுகுமுறையைக் கையாள வேண்டும். அளவிற்கு மீறினால் அமிர்தம் மட்டுமல்ல, வீக் எண்ட் ரிலாக்சேஷனும் நஞ்சாகிவிடும்`` என்கிறார்கள்... பட்டுத் திருந்திய அனுபவஸ்தர்கள்.

அடிங்க.. கையை கழுவிட்டு அடிங்கடே!

அடிங்க.. கையை கழுவிட்டு அடிங்கடே!

பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் ஜானி வீடு எது எனத் தேடி அலையும் விவேக்கை வருவோர் போவோர் எல்லாம் அடிப்பார்கள். நொந்து போகும் விவேக்கை ஓரமா ஒண்ணுக்கு போய்விட்டு வந்து ஒருவர் அடிப்பார். அப்போ விவேக், "அடிங்க.. ஆனா கைய கழுவிட்டு அடிங்க" என்பார். இதே டையலாக்கை தான் உங்களுக்கு சொல்கிறோம். வாரக் கடைசியில ஆட்டம் போடுங்க, ரிலாக்ஸ் பண்ணுங்க.. தப்பே இல்லை. ஆனா அதுவே மாதக் கடைசியில உங்கள் மண்டையை காய வெச்சு காசுக்கு நாலு பேர் கிட்ட அலையவிடாத அளவுக்கு பார்த்துக்கங்க. அம்புட்டுதேன் சொல்ல முடியும்.

- கௌதம்

English summary
Friends, you can plan your weekend brilliantly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X