For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஸ்பரஸ் கொளுத்தியும் ப்ளாஸ்டிக் அரிசியும்!

By Shankar
Google Oneindia Tamil News

சில வருஷங்களுக்கு முன்னால வெயில் காலத்துல தமிழ்நாட்டுல அங்கங்க ஒரு சில தீ விபத்துக்கள் நடந்துச்சி. விபத்துக்கான காரணங்கள் சரியா தெரியல. 'வெள்ளை பாஸ்பரஸ்' அப்டிங்குற ஒரு வேதிப்பொருள் அறை வெப்ப நிலையில தீப்பற்றி எரியும்ங்குற விஷயத்த சமீபத்துல படிச்சி தெரிஞ்சிக்கிட்ட நம்மூரு விஞ்ஞானி ஒருத்தன் தீப்பற்றி எரியிற குடிசைங்க வெள்ளை பாஸ்பரஸாலதான் எரியிதுன்னு கிளப்புனான். அதுமட்டும் இல்லை இத வேணும்னே ஒரு குழு செய்வதாகவும் பரப்புனான்.

அதாவது இந்த பாஸ்பரஸ் கொளுத்தி என்ன பண்ணுவான்னா, வெள்ளை பாஸ்பரஸ்ஸ சாணில முக்கி அத வீட்டு கூரை மேல எரிஞ்சிட்டு போயிருவானாம். வெயில் அடிச்சி சாணி காஞ்சப்புறம் அதுக்குள்ள இருக்க பாஸ்பரஸ் எரிய ஆரம்பிக்குமாம். இந்த டெக்கினிக்க யூஸ் பண்ணிதான் தமிழ்நாட்டுல பல குடிசைகள் எரிக்கப்பட்டதா செய்தி தீயா பரவுச்சி. வெள்ளை பாஸ்பரஸ் எப்டி இருக்கும்னே நமக்குத் தெரியாது. வெள்ளை பாஸ்பரஸ் எப்டி இருக்கும்..? வெள்ளையா இருக்கும் அவ்வளவுதான்.

Plastic rice is a pure fake!

குடிசைய கொளுத்துறவன் போற போக்குல ஒரு பீடிய பத்தவச்சி கூரை மேல தூக்கிப் போட்டுட்டு போறான்னு சொன்னாலாவது ஒரு லாஜிக் இருந்துருக்கும். இல்ல வெள்ளை பாஸ்பரஸ் வச்சி கொளுத்துறவன் இப்ப எரிஞ்சிதே சென்னை சில்க்ஸ் அந்த மாதிரி ஒரு பெரிய ஆப்ரேஷனுக்கு அத யூஸ் பண்ணான்னு அடிச்சி விட்டாலாவது கதைல ஒரு நியாயம் இருந்துருக்கும்.

அதயெல்லாம் விட்டுட்டு அவன் கைக்காசயெல்லாம் போட்டு வெள்ளை பாஸ்பரஸ் வாங்கி, அத சாணியில முக்கி, அந்த சாணி காயிற வரைக்கும் காத்திருந்து கொளுத்தி... ஸ்ஸ்ஸப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே.... சரி யாராவது அந்த பாஸ்பரஸ் கொளுத்திய பாத்திருக்கீங்களான்னா அதுவும் இல்லை.. 'அவன் எப்டி இருந்தா'ன்னா... 'ஹைட்டு சார்.. வெய்ட்டு சார்... ஒய்ட்டு சார்'ன்னு அளந்து விட வேண்டியது. இல்லன்னா 'இருட்டுல என் பக்கத்துலதான் சார் ஓடுனான்.. புடிக்க கை நீட்டுனேன்.. ஜஸ்ட்டு எஸ்கேப் ஆகி ஓடிட்டான் சார்.. அதுலயும் அவன் கால்ல ஸ்பிரிங் வச்சி செம்ம ஸ்பீடா ஓடுனா'ன்னு எங்க ஊர்ல ஒண்ணு கெளப்புனாய்ங்க பாருங்க அதெல்லாம் உச்சகட்டம்.

இந்த பாஸ்பரஸ் கொளுத்திக்கு கொஞ்சமும் சளைக்காத, இன்னும் சொல்லப்போனா அத விட பல மடங்கு வீரியமுள்ள ஒரு புரளிதான் ப்ளாஸ்டிக் அரிசி.

போன வாரம் அலுலகத்துல நண்பர் ஒருத்தர் இந்த ப்ளாஸ்டிக் அரிசைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தாரு. ப்ளாஸ்டிக்ல் அரிசியா? அது எப்டிங்க? எதும் கலப்பட அரிசியா?ன்னேன்.... இல்லங்க.. ப்ளாஸ்டிக்லயே அரிசி வந்துருக்குன்னாரு. அவர் சொன்ன இந்த பதில்லருந்தே, ப்ளாஸ்டிக் அரிசின்னு அவர் என்கிட்ட சொன்னப்போ எனக்கு என்னென்ன கேள்விங்கல்லாம் தோணுச்சோ, அதெல்லாம் அவர்கிட்ட யாரோ ப்ளாஸ்டிக் அரிசியப் பத்தி சொன்னப்போ அவருக்குத் தோணலன்னு தெரிஞ்சிது.

Plastic rice is a pure fake!

சரி இப்ப ப்ளாஸ்டிக் அரிசின்னா, ப்ளாஸ்டிக்ல உருவாக்கப்பட்ட போலி அரிசிகள்.. அப்டின்னா ப்ளாஸ்டிக்க கொதிகிற தண்ணில போட்டா அது எப்புடி வெந்து சோறு மாதிரி ஆகும்? அப்படியே அதிக வெப்பநிலையில சோறு மாதிரி ஆனாலும் திரும்ப வெப்பநிலை கம்மியான உடனே இறுகிய நிலைக்கு போயிருமே? அப்படியே சோறு மாதிரி பதமா இருந்தாக் கூட அத சாப்டா எப்படி ஜீரணம் ஆகும்? பல வருஷங்கள் ஆனா கூட மண்ணாலயே மக்க வைக்க முடியாத ப்ளாஸ்டிக்க நம்ம உடம்புல உள்ள அமிலங்கள் எப்படி ஜீரணிக்குது? இதெல்லாம்தான் எனக்கு தோணுன அடிப்படை கேள்விகள்.

சரி என்ன மேட்டர்னு இண்டர்நெட்டுல தேடிப் பாத்தா, இப்ப இந்த வதந்தி ஆரம்பிச்சது ஆந்திராவுலன்னு தெரிஞ்சிது. யாரோ ஒருத்தர் பாய் கடையில பிரியாணிய நல்லா ஃபுல் கட்டு கட்டிருக்கார். வயித்துல ஜலபுலஜங்ஸ் ஆயி ரெண்டு நாள் வயித்தப் புடிச்சிட்டே யோசிச்சிருக்கான். அப்பதான் பாய் கடையில திண்ண பிரியாணிலதான் பிரச்சனைன்னு தோணிருக்கு. இந்த ப்ளாஸ்டிக் முட்டை ப்ளாஸ்டிக் அரிசி மேட்டர எங்கயோ கேட்ட ஞாபகம் இருந்திருக்க, உடனே அந்த பிரியாணி கடையில போய் நீ ப்ளாஸ்டிக் அரிசில சமைச்சி போடுறன்னு சண்டை கட்டிருக்கார். அங்க ஆரம்பிச்ச வசந்தி தான் இப்புடி கொழுந்து விட்டு எரியிது.

சரி ப்ளாஸ்டிக் அரிசின்னு எதாவது கண்டுபுடிச்சிருக்காங்களான்னு தேடிப்பாத்தா எல்லாமே நம்ம பாஸ்பரஸ் கொளுத்திய பாத்த கதைதான். புரளியக் கிளப்பிருக்கானுங்களே தவற எங்கயும் ஆதாரப்பூர்வமா புடிக்கல.

ப்ளாஸ்டிக் அரிசி இல்லாம செயற்கை அரிசி தயாரிப்புகள் இருக்கு. அதாவது அரிசி அரைக்கும்போது வர்ற உடைஞ்ச அரிசிக்கள (குருனை) வச்சி, அதுகூட சில பொருட்கள சேர்த்து அத மறுபடியும் முழு அரிசியா மாத்துற செய்முறைகள் இருக்காம். அப்படி உருவாக்கப்படுற அரிசிக்கள் உண்மையான முழு அரிசிக்களை விட பண்புகளில் கொஞ்சம் மாறுபாடு இருக்குமாம். அவ்வளவுதான்.

இப்ப வாட்ஸாப், முகப் பக்கங்கள்ல உலவுல வீடியோ ஆதாரங்கள் என்னன்னா வடிச்ச சோத்த உருண்டையா உருட்டி அத பந்து மாதிரி அடிச்சி ஜம்ப் பன்ன வச்சி இதான் ப்ளாஸ்டிக் அரிசிங்குறாங்க. எனக்கு அதப் பாத்து உள்ளத்தை அள்ளித்தா காமெடிதான் ஞாபகம் வந்துச்சி. 'ஐ இவரு துள்றாரு இவருதான் காசிநாதன்.. ஐ அவரும் துள்றாரு அவருதான் காசிநாதன். ஐ நானும் துள்றேன் நாந்தான் காசிநாதன்'ங்குற மாதிரி 'ஐ இதுவும் ஜம்ப் பன்னுது இதான் ப்ளாஸ்டிக் அரிசி.. ஐ அதுவும் ஜம்ப் பன்னுது அதுவும் ப்ளாஸ்டிக் அரிசி'ன்னு அள்ளி விடுறாங்க. கடந்த ஒரு வாரமா சோத்த எவனும் திங்கிறதுல்ல. உருட்டி தரையில அடிச்சி விளையாண்டுக்கிட்டு இருக்கானுங்க.

இவங்களாச்சும் பரவால்ல. இவங்களுக்கு விழிப்புணர்வக் குடுக்கவேண்டிய மீடியா இன்னும் ஒருபடி மேல போய் எரியிற தீயில எண்ணைய ஊத்தி அவங்க கொஞ்சம் பிரச்சனைய பெருசாக்கிட்டு இருக்காங்க.

அதயெல்லாம் விட மீடியாக்கள்ல வர்ற 'ப்ளாஸ்டிக் அரிசியைக் கண்டறிய வழிகள்தான்' தாறுமாறு. யாருமே ப்ளாஸ்டிக் அரிசியப் பாத்ததில்லை. இப்படித்தான் இருக்கும்னு ஒரு உத்தேசமா 'ப்ளாஸ்டிக்' அப்டிங்குற வார்த்தைய மட்டும் மனசுல வச்சிக்கிட்டு ஸ்க்ரிப்ட் எழுதிருக்காங்க.

சோற வடிச்சி மூணு நாள் வச்சிருங்க.. அது கெட்டுப்போகலன்னா ப்ளாஸ்டிக் அரிசி.. கெட்டுப்போச்சுன்னா நல்ல அரிசியாம். அப்ப மூணு நாள் கண்டுபுடிக்கிற வரைக்கும் சோறு திங்காம பீஸா பர்கர்ன்னு திங்கிறதா?

அப்புறம் தண்ணில போட்டா நல்ல அரிசி கீழ போயிருமாம்..ப்ளாஸ்டிக் அரிசி மேல மிதக்குமாம். நல்ல அரிசிய தண்ணில போட்டாலே எடை கம்மியா இருக்க அரிசிங்க மேல மிதக்கத்தான் செய்யும்...

அப்புறம் கொதிக்கிற தண்ணில போட்டா ஒரு லேயரா ஃபார்ம் ஆகுமாம்.. அரிசிய சூடு பண்ணா ப்ளாஸ்டிக் அரிசி கருப்புக் கலர்ல கருகிருமாம். அதாவது பாலிதீன் பை, ப்ளாஸ்டிக் ஐட்டத்தையெலாம் எரிச்சா உருகி கருப்பாகுதுல்ல.. அத மைண்டுல வச்சி எழுதப்பட்ட பாய்ண்டு இது.

அதவிட உச்சகட்ட சிரிப்பு வந்தது ஒரு ஃபோட்டோவப் பாத்து. அதுல ஒருபக்கம் வெள்ளையா கொஞ்சம் அரிசி.. இன்னொரு பக்கம் மங்கலா பழுப்பு நிறத்துல கொஞ்சம் அரிசி. மங்கலா இருக்க அரிசி நல்ல அரிசின்னும், வெள்ளையா இருக்க அரிசிய ப்ளாஸ்டிக் அரிசின்னும் குறியிட்டுக் காட்டிருந்தாங்க. அட பதறுகளா... இந்தப் பக்கம் வெள்ளையா இருக்கது பச்சரிசி.. அந்தப்பக்கம் மங்களா இருக்கது புழுங்கரிசி.. பச்சரிசிக்கும் புழுங்கலரிசிக்கும் வித்யாசம் தெரியாதவன்லாம் ப்ளாஸ்டிக் அரிசியக் கண்டுபிடிக்க வழிசொல்றானே ஆண்டவா..

ஆனா ஒண்ணு... நெருப்பில்லாம புகையாது. நாம வழக்கமா வாங்கி சாப்புடுற அரிசிகள்ல கலப்பட அரிசிகள் வந்திருக்கலாம். இப்போதுதான் வந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. நெடு நாட்களுக்கு முன்னரே வந்திருக்கலாம். இப்பதான் ப்ரச்சனை வந்திருக்குங்குறதால நாம எல்லாருமே சாதத்த உருட்டி உருட்டிப் பாக்குறோம். அப்படி பந்து போல உருளும் அரிசிவகை வெளிநாடுகளில் உபயோக்கிக்கப்படும் Glutinous rice எனப்படும் ஒருவித ஒட்டும் தண்மையுடைய அரிசி வகையாக இருக்கக்கூடும் என நண்பர் ஒருவர் எழுதியிருந்தார். அப்படியும் இருக்கலாம். அல்லது பாஸ்பரஸ் கொளுத்திகளைப் போல இது முழுவதும் மிகைபடுத்தப்பட்ட ஒரு வசந்தியாகவே இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் புதுசா வந்திருக்குற அரிசி ப்ளாஸ்டிக்கால் ஆனதல்ல என்பது மட்டும் உறுதி. கிளப்பி விடுறதுதான் விடுறீங்க.. தயவு செய்து 'ப்ளாஸ்டிக் அரிசி'ங்குறதுக்கு பதில் 'கலப்பட அரிசி'ன்னாவது சொல்லுங்க. மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாவாச்சும் இருக்கும்!

- முத்து சிவா

English summary
Is plastic Rice a real one or hoax spreading by a group? Here is an analysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X