For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார்.. விசாரணை முடியட்டும்,, தேர்தல் நடத்தலாம்.. ராமதாஸ் வலியுறுத்தல்

பணப்பட்டுவாடா புகார் எழுந்த அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை; கடந்த மே மாதம் நடக்கவிருந்த தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாருக்கு உள்ளான அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளிலும், விசாரணை முடியும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

PMK Chief Ramadoss Urges to Postpone Polls In Aravakurichi, Tanjore

தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இரு தொகுதிகளுக்கும் கடந்த மே மாதம் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணை நடத்தவிருப்பதாகவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது பல்வேறு வழிகளில் உறுதி செய்யப்பட்டிருப்பதால், வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அக்கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணையின் போது தான் இத்தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், இந்த விஷயத்தில் ஆணையம் கடைபிடித்து வரும் வெளிப்படைத்தன்மையற்ற அணுகுமுறை தான் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட இரு தொகுதிகள் என்ற அவப்பெயரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் பெற்றுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் ஓட்டுக்கு பணம் தரப்பட்டது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும். இதை தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டிருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த புகார்களின் அடிப்படையில் இந்த இரு தொகுதிகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அங்கு நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்குரிய சூழல் ஏற்படாத நிலையில், அங்கு அவசர அவசரமாக தேர்தல் நடத்தப்படுவது ஏன்? என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வினா எழுப்பி வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்றும் பா.ம.க. வினவி வருகிறது. இந்த வினாக்களுக்கெல்லாம் இதுவரை பதில் அளிக்காத தேர்தல் ஆணையம், இப்போது தான் முதல்முறையாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படவிருப்பதாகவும், இதுகுறித்து அதிமுகவுக்கும், திமுகவுக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு அதிமுகவுக்கும், திமுகவுக்கும் கடந்த மே மாதம் 19ஆம் தேதியே அறிவிக்கை அனுப்பிய தேர்தல் ஆணையம், அதுகுறித்த தகவலை கடந்த 6 மாதங்களாக வெளியிடாமல் மறைத்து வந்திருக்கிறது. வழக்கமாக இத்தகைய அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தால் அதற்கு ஒரு வாரத்தில் பதில் பெற்று அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது வழக்கமாகும். ஆனால், திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பி 6 மாதங்கள் நிறைவடைவுள்ள நிலையில், அதற்கு இரு கட்சிகளும் பதில் அளித்தனவா? என்பதைக் கூட தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை. ஒருவேளை இரு கட்சிகளும் விளக்கம் அளித்திருந்தால், அதை ஆணையம் ஆய்வு செய்து அதனடிப்படையில் விசாரணையைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை தேர்தல் ஆணையத்தின் விசாரணை தொடங்கியதாக தெரியவில்லை.

இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும் போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்காக வினாக்கள் எழுகின்றன. அவை....

1. ஓட்டுக்கு பணம் தரப்பட்டது குறித்து திமுகவுக்கும், அதிமுகவுக்கும் அனுப்பப்பட்ட அறிவிக்கைகள் மீது கடந்த 6 மாதங்களாக பதில் பெறாதது ஏன்?

2. ஒருவேளை இரு கட்சிகளும் பதில் அளித்திருந்தால் அதனடிப்படையில் விசாரணையை தொடங்காதது ஏன்?

3. இரு தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தேர்தல் ஆணையம், அதற்கு முன்பே தொடங்கப்பட்ட விசாரணை நடைமுறையை முடிப்பதில் ஆர்வம் காட்டாதது ஏன்?

4. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த விசாரணையின் முடிவு வருவதற்கு முன்பே, தேர்தல் நடத்தப்பட்டால், விசாரணையின் நோக்கம் நிறைவேறுமா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் தான் விடையளிக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையத்திடமிருந்து இந்த கேள்விகளுக்கு நியாயமான பதில் கிடைக்கப்போவதில்லை. தேர்தல் முறைகேடுகள் குறித்து இரு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கை அனுப்பியதை தேர்தல் ஆணையம் மறைத்ததில் இருந்தே அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது. அதேபோல், தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பியது குறித்தோ, அது தங்களுக்கு வந்து சேர்ந்தது குறித்தோ அதிமுக, திமுக ஆகிய கட்சிகளும் தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே இந்த இரு கட்சிகளும், தேர்தல் ஆணையமும் கூட்டணி அமைத்து செயல்படுவது உறுதியாகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் நடந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நினைத்திருந்தால் 2 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால், சாதாரண நடவடிக்கையைக் கூட ஆணையம் எடுக்கவில்லை.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலில் ஆணையம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டுமானால், வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக தொடங்கப்பட்ட விசாரணை நடைமுறையில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். இரு கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அதனடிப்படையில் இரு கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், அவற்றின் சின்னங்களையும் தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும்.

English summary
PMK Chief Ramadoss urged to postpone polls in Aravakurichi, Tanjore constituencies until end of the trial of distributing money for vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X