For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை முழுவதும் எங்கெல்லாம் போதை பொருள் விற்கப்படுகிறது.. பட்டியலிடும் ராமதாஸ்

சென்னை முழுவதும் எங்கெங்கு போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் பட்டியலிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: முழுவதும் எங்கெல்லாம் போதைப் பொருள் விற்கப்படுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் பட்டியலிட்டுள்ளார். புறநகர் பகுதிகளில் போதை மருந்து விற்பனை தடையின்றி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ள ராமதாஸ், வாடிக்கையாளர்களின் அறைகளுக்கே போதை மருந்தைக் கொண்டு சென்று வழங்குவதும் நடக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் போதைப்பொருள் விற்பனையை ஒடுக்குவதுடன், பாதிக்கப்பட்டவர்களை மீட்க போதை மீட்பு மையங்களையும் அதிக அளவில் அரசு திறக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

'இந்திய வரலாற்றில் பல நல்ல விஷயங்களுக்காக இடம் பிடித்துள்ள சென்னை மாநகரம் இப்போது போதைப் பொருள்கள் தாராளமாகக் கிடைக்கும் நகரம் என்பதற்காக வரலாற்றில் இடம் பிடித்துவிடும் போலிருக்கிறது. அந்த அளவுக்குச் சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை தலைவிரித்தாடும் நிலையில், அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சென்னைக்குள் எப்படி?

சென்னைக்குள் எப்படி?

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போதைப் பொருள்கள் விற்பனை எந்த அளவுக்குப் பெருகியுள்ளது என்பதற்கு அண்மையில் ஊடகங்களில் வெளியான இரு செய்திகள்தான் எடுத்துக்காட்டு ஆகும். சென்னை பெருங்குடியில் ஒரே அறையில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சில நாள்களுக்கு முன் நாளிதழ்களில் செய்தி வெளியாகியிருந்தது. பொது இடங்களில் புகைப்பிடிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் சென்னைக்குள் கொண்டு வரப்பட்டு தாராளமாக விற்பனை செய்யப்படுவது எப்படி? கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்தவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? கடைகள் தவிர்த்து கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதா? மாணவர்களிடம் கஞ்சா புழக்கம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்த பட்டதா? எத்தனை முறை நடத்தப்பட்டது? என்பன உள்ளிட்ட வினாக்களை எழுப்பியிருந்தார். தமிழகத்தில் போதைப் பொருள்களின் விற்பனை பெருகி விட்டதுதான் இத்தகைய செய்திகளுக்கு அடிப்படை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

காவல்துறை கண்டுகொள்ளவில்லை

காவல்துறை கண்டுகொள்ளவில்லை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் மட்டும்தான் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் எங்கெல்லாம் கஞ்சா விற்கப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டு அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை நான் வலியுறுத்தியுள்ளேன். ஆனால், அதையெல்லாம் காவல்துறையினர் கண்டுகொள்ளாததன் விளைவாக இப்போது சென்னையில் அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. எங்கெல்லாம் டாஸ்மாக் மதுக்கடைகள் அமைந்துள்ளனவோ, அவற்றுக்கு அருகில் ஏதோவோர் இடத்தில் கஞ்சா கிடைக்கிறது.

பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை

பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை

அதிகபட்சமாக அரை கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு சட்டவிரோத கஞ்சா விற்பனையகம் நடைபெறுகிறது. குறிப்பாகப் பள்ளி மாணவர்களை இலக்கு வைத்து பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை பட்டாணி, சுண்டல்களுக்கு மட்டுமன்றி கஞ்சாவுக்கும் புகழ்பெற்ற இடமாக மாறிவருகிறது. இதனால் மாணவர்களும், சிறுவர்களும் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருவதும், குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் மிகவும் கவலை அளிக்கிறது.

மிகவும் ஆபத்தான போதைப்பொருள்

மிகவும் ஆபத்தான போதைப்பொருள்

அதேநேரத்தில் கல்லூரி வளாகங்களிலிருந்து கஞ்சா காணாமல் போயிருக்கிறது. இதற்குக் காரணம் கஞ்சா ஒழிக்கப்பட்டுவிட்டது அல்ல... மாறாகக் கஞ்சாவைவிட அதிக போதை தரும் போதை மருந்துகள் கல்லூரி வளாகங்களில் நுழைந்து விட்டதுதான். சென்னை உள்ளிட்ட நகரங்களிலுள்ள பணக்கார கல்வி நிறுவனங்களில் பயிலும் பணக்கார மாணவர்களின் உதவியால் விலை உயர்ந்த, மிகவும் ஆபத்தான போதைப் பொருள்கள் மாணவர்களின் கைகளில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் மட்டுமன்றி எல்.எஸ்.டி (Lysergic Acid Diethylamide -LSD) எனப்படும் ஒரு வகை போதை மருந்தையும் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். ஒருவகையான காளானிலிருந்து தயாரிக்கப்படும் இந்த போதை மருந்து குறைந்த பட்சம் 12 மணி நேரம் மாயை உலகில் மனிதர்களை மிதக்க வைத்திருக்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.

காவல்துறையினருக்கு நன்றாகத் தெரியும்

காவல்துறையினருக்கு நன்றாகத் தெரியும்

கஞ்சா சென்னை முழுவதும் கிடைக்கும் நிலையில், மற்ற உயர்வகை போதை மருந்துகள் எழும்பூர், தரமணி, கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும், புறநகர் பகுதிகளில் மதுரவாயல், பூந்தமல்லி, வண்டலூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் போதை மருந்து விற்பனை தடையின்றி நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்களின் அறைகளுக்கே போதை மருந்தைக் கொண்டு சென்று வழங்குவதும் நடக்கிறது. இந்த விவரங்கள் அனைத்தும் போதைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்களை விட, காவல்துறையினருக்கு நன்றாகத் தெரியும்.

தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

ஆனாலும், குட்கா விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக ஆட்சியாளர்களுக்கும், காவல்துறைக்கும் என்னென்ன பலன்கள் கிடைத்தனவோ, அதைவிடப் பலமடங்கு அதிக பலன்கள் கிடைப்பதால் அவர்கள் கண்டுகொள்ள மறுக்கின்றனர். இதனால் போதை வணிகம் கட்டுப்பாடின்றி வளர்ந்து கொண்டிருக்கிறது. இளைய தலைமுறையினரை போதைப் பொருள்களின் பிடியிலிருந்து மீட்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. எனவே, சென்னையில் போதைப்பொருள் விற்பனையை ஒடுக்குவதுடன், பாதிக்கப்பட்டவர்களை மீட்க போதை மீட்பு மையங்களையும் அதிக அளவில் அரசு திறக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

English summary
PMK fonder Ramadoss listed out the places in Chennai where drugs selling. He urges Tamilnadu govt to stop this drugs selling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X