For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வன்னியர் கல்வி அறக்கட்டளை சட்ட கல்லூரிக்கு அனுமதி தராவிட்டால் பெரும் போராட்டம்.. ராமதாஸ் எச்சரிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: வன்னியர் கல்வி அறக்கட்டளை சட்ட கல்லூரிக்கு தமிழக அரசு அனுமதிக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தனியார் சட்டக் கல்லூரி தொடங்க தடை விதிக்கும் சட்டம் செல்லாது; வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சரஸ்வதி சட்டக்கல்லூரிக்கு இணைப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து 53 நாட்களாகியும் அத்தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.

PMK founder Ramadoss warns state government

அடித்தட்டு பாட்டாளி மக்களுக்கு தரமான சட்டக் கல்வி வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்குடன் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் சட்டக் கல்லூரி தொடங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு அதிமுக மற்றும் திமுக அரசுகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தன.

கடுமையான போராட்டங்களுக்கு பிறகு சரஸ்வதி சட்டக் கல்லூரிக்கு இணைப்பு அனுமதி அளித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்ட நிலையில், தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை விதிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. இதை எதிர்த்தும், சரஸ்வதி சட்டக்கல்லூரிக்கு இணைப்பு அனுமதி வழங்க ஆணையிடக் கோரியும் வன்னியர் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு , தமிழக அரசின் சட்டம் செல்லாது என்று 26.10.2016 அன்று தீர்ப்பு வழங்கியதுடன், தீர்ப்பு நகல் கிடைத்த 4 வாரங்களில் அனுமதியளிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு கடந்த 17.11.2016 அன்று தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, 19.11.2016 அன்று பெற்றுக் கொள்ளப்பட்டது. உயர்நீதிமன்றம் வழங்கிய 4 வார அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று வரை சரஸ்வதி சட்டக்கல்லூரிக்கு இணைப்பு அனுமதி வழங்கப் படவில்லை. மாறாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து காலம் கடத்த தமிழக ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக ஆட்சியாளர்களின் இந்த முடிவு மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களுக்கும், மாணவர்களுக்கும் செய்யப்படும் மிகப்பெரிய, மன்னிக்க முடியாத துரோகமாகும். வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சட்டக் கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்கான சட்டப்போராட்டம் கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது. 2007-ஆம் ஆண்டில் சட்டக்கல்லூரி தொடங்க தடையில்லாச் சான்று கோரி தமிழக அரசிடம் விண்ணப்பித்த போது, தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க விதிகளே இல்லை என்று கூறி அம்மனுவை அரசு தள்ளுபடி செய்தது.

அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வன்னியர் கல்வி அறக்கட்டளையின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆணையிட்டது. ஆனால், மனுவை ஆய்வு செய்த தமிழக அரசு, சட்டக்கல்லூரிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று கூறி மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில் கடந்த 2010 ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், சட்டக்கல்லூரிக்கு அனுமதி அளிக்க ஆணையிட்டது. ஆனால், அந்த தீர்ப்பையும் மதிக்காத தமிழக அரசு, தமிழகத்தில் போதுமான அளவு சட்டக் கல்லூரிகள் இருப்பதால் புதிய சட்டக்கல்லூரிக்கு அனுமதி தர முடியாது என கூறிவிட்டது. சமூகநீதிக்கு எதிரான இந்நடவடிக்கைகள் அனைத்தையும் அரங்கேற்றியது முந்தைய திமுக அரசு.தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சட்டக்கல்லூரிக்கு ஒரு வாரத்தில் அனுமதி அளிக்க வேண்டும் என 23.09.2011 அன்று ஆணையிட்டது.

ஆனால், அந்த உத்தரவையும் செயல்படுத்தாத தமிழக அரசு, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.முருகேசன், சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சட்டக்கல்லூரிக்கு இனியும் தாமதிக்காமல் அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

ஆனால், அந்த உத்தரவையும் செயல்படுத்தாமல் அதிமுக அரசு கிடப்பில் போட்டது. இதையடுத்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த அதே நீதிபதிகள், தமிழக அரசை கடுமையாக எச்சரித்ததுடன், உடனடியாக அனுமதியளிக்க ஆணை பிறப்பித்தது. இதற்குப் பிறகும் அனுமதியளிக்காமல் இருக்க முடியாது என்பதால் தான் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தை 2014&ஆம் ஆண்டில் அதிமுக அரசு கொண்டு வந்தது.

இச்சட்டம் செல்லாது என்று தெளிவாக அறிவித்ததுடன், இணைப்பு அனுமதியும் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அதை செயல்படுத்த தமிழக அரசு மறுக்கிறது என்றால், அடித்தட்டு மக்கள் சட்ட அறிவு பெற்று விடக்கூடாது என்ற எண்ணம் தான் அதற்கு காரணமாகும்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவரது தீர்ப்பில் கூறியுள்ளவாறு, தமிழகத்தில் மொத்தம் 7 அரசு சட்டக் கல்லூரிகள், 3 நிகர்நிலைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஒரு தனியார் கல்லூரி என 10 சட்டக்கல்லூரிகள் மட்டுமே உள்ளன. ஆனால், ஆந்திராவில் 37 சட்டக் கல்லூரிகளும், கர்நாடகத்தில் 93 சட்டக்கல்லூரிகளும் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் தமிழக சட்டக்கல்லூரிகளில் 3 ஆண்டு பட்டப்படிப்பில் சேர இடம் கிடைக்காமல் 4098 பேர், 5 ஆண்டு படிப்பில் சேர இடம் கிடைக்காமல் 1938 பேர் என மொத்தம் 6038 பேர் அண்டை மாநிலங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

தனியார் சட்டக்கல்லூரிக்கு தடை விதிக்கும் அரசின் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ஜி) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை நடத்தும் உரிமைக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, கல்வி மட்டுமே அழிவற்ற செல்வம் என்பதை குறிக்கும் வகையில், ''கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை (Knowledge is the greatest of riches, for it is permanent & imperishable) என்ற திருக்குறளை தங்களின் தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியதன் மூலம், கல்வி வழங்கும் புனிதப்பணிக்கு முட்டுக்கட்டைப் போடக் கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளனர். இவ்வளவுக்குப் பிறகும் வன்னியர் கல்வி அறக்கட்டளை சட்டக் கல்லூரிக்கு அனுமதி தர மறுத்தால் அது எப்படி மக்கள் நலன் சார்ந்த அரசாக இருக்க முடியும்?

நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் சட்டக்கல்லூரி இல்லாத நிலையில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக் கல்லூரி அம்மாவட்ட மாணவர்களுக்கு பயன் உள்ளதாக அமையும். கல்வியைப் பொறுத்தவரை தமிழகத்தில் 32-ஆவது இடத்தில் அதாவது, கடைசி இடத்தில் இருப்பது விழுப்புரம் மாவட்டம் தான். இம்மாவட்டத்தில் புதிய சட்டக்கல்லூரி தொடங்குவது அவசியமாகும். ஆனால், இக்கல்லூரியை முடக்க நினைப்பதன் மூலம் இம்மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய தீமையை செய்ய அரசு துடிக்கிறது.

வன்னியர் கல்வி அறக்கட்டளை மூலம் இச்சட்டக் கல்லூரி நடத்தப்பட்டாலும் கூட அனைத்து சமுதாயத்தினருக்கும் தான் பயன் கிடைக்கப் போகிறது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக அதை தடுப்பதன் மூலம் இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். தமது மக்களுக்கு எதிராக இப்படி ஒரு பாவத்தை செய்யும் அரசு தமிழ்நாடு அரசாக மட்டும் தான் இருக்கும்.

ஜனநாயகம் என்பது மக்களாட்சி. மக்களாட்சி என்பது அனைத்து மக்களுக்காகவும் தான் இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, இப்போதைய அதிமுக அரசு, முந்தைய திமுக அரசு இரண்டுமே வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கின்றன என்பதையே அவற்றின் செயல்பாடுகள் காட்டுகின்றன. வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சட்டக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் தொடக்கத்திலிருந்தே கூறிவரும் நிலையில் அதை மதிக்க தமிழக அரசு மறுக்கிறது.

மிகவும் பின்தங்கிய மக்களுக்கு சட்டக் கல்வி வழங்குவதற்காக ஒரு சட்டக் கல்லூரியை தொடங்குவதற்காக 10 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி, உயர்நீதிமன்றத்தில் 8 முறை வழக்குகள் தொடர்ந்து, அனைத்திலும் வெற்றி பெற்ற பிறகும் அனுமதி அளிக்க தமிழக அரசு மறுக்கிறது என்றால், அதற்கு, வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சட்டக் கல்லூரி அமைந்து விடக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருந்து விட முடியும்? இந்த காரணத்திற்காகத் தான் முந்தைய திமுக அரசு நான்கரை ஆண்டுகளாக அனுமதி வழங்க மறுத்தது. அதே காரணத்திற்காகத் தான் இப்போதைய அதிமுக அரசு, தனியார் சட்டக் கல்லூரிக்கு தடை விதிக்கும் சட்டத்தை, இந்தியாவில் முதன்முறையாக கொண்டு வந்திருக்கிறது. இந்த துரோகத்தை பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

எனவே, கல்வி சார்ந்த விஷயங்களில் கீழ்த்தரமான அரசியல் செய்யும் போக்கை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். மாறாக, உயர்நீதிமன்றத்தின் ஆணை மற்றும் அறிவுரையை மதித்து, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சட்டக் கல்லூரிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
PMK founder Ramadoss warns state government over pvt law collage issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X