For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முழு மதுவிலக்கு, இலவசக் கல்வி, இலவச மருத்துவம்: பாமக தேர்தல் அறிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மாணவர்களுக்கு இலவசக்கல்வி, தமிழக மக்களுக்கு இலவச மருத்துவம், விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்கள் என பல இலவசங்களை அள்ளி வீசி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.

தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தலில் தனித்து களமிறங்குகிறது. பா.ம.க.வில் முதல்வர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். 2 கட்டமாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு பேசினார். இது வெறும் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல மாற்றத்திற்கான தேர்தல் அறிக்கை என்று கூறினார்.

PMK offers Free education and medical in election Manifesto

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:

மது ஒழிப்பு

* தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். பா.ம.க. ஆட்சி அமைந்தபின்
முதலமைச்சர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் ஆணையில் தான்.
* தமிழ்நாட்டில் உள்ள மது ஆலைகளின் உரிமம் இரத்து செய்யப்பட்டு மூடப்படும்.
* மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுதல்,
கள்ளச்சாரயத்தைத் தடுத்தல், குடிநோயர்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கான சிறப்புத்
திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* மதுவால் கணவனை இழந்தப் பெண்களுக்கு தொழில் தொடங்க உதவி செய்யப்படும்.
* கள்ளச்சாராயம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.
* கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஊராட்சித் தலைவர் கிராம நிர்வாக
அதிகாரி, காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.
* கள்ளச்சாராய வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். 6 மாதங்களில்
விசாரித்துத் தீர்ப்பு அளிக்கப்படும். தீர்ப்பு வழங்கப்படும் வரை பிணையில் வெளிவரமுடியாத
வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும்.
* கள்ளச்சாராயக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் வகையில்
சட்டத்திருத்தம் செய்யப்படும்.

ஊழல் ஒழிப்பு


* ஊழலை ஒழிப்பதற்காக, புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே லோக் அயுக்தா
சட்டம் (Lokayukta act) கொண்டுவரப்படும்.
* முதலமைச்சரும், அமைச்சர்களும் லோக் அயுக்தா அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள்.
* பொதுச்சேவை பெரும் உரிமைச் சட்டம் (Right to Public Service act) கொண்டு வரப்படும்.
* தகவல் ஆணையம் 10 உறுப்பினர்கள் மற்றும் தலைவரைக் கொண்ட வெளிப்படையான அமைப்பாக
மாற்றப்படும்.
* தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்படும். மின் ஆளுமை
(e-governance) முறையில் இணைக்கப்படும்.
* மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்களும், துறைகள் அளவில் செயலாளர்களும் ஊழல் ஒழிப்பு
அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அவர்களின் அதிகாரவரம்புக்குட்பட்ட அலுவலகங்களில் ஊழல்
நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், தவறு செய்தவர்கள் மட்டுமின்றி, அதைத் தடுக்கத் தவறிய
பொறுப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்புக் கேமிராக்கள் பொறுத்தப்படும்.
* ஊழல் குறித்து புகார் தெரிவிக்க 3 இலக்க இலவச தொலைபேசி சேவை வழங்கப்படும்.

கல்வி

* கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4 சதவிகிதம் ஆக
அதிகரிக்கப்படும். அதாவது கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்படும்.
* மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார்
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து செலுத்தும்.
* மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள்
தரம் உயர்த்தப்படும். பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளித்
தர இயக்குனர் நியமிக்கப்படுவார்.
* மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு (CBSE) இணையான புதியக் கல்வித் திட்டம்
உருவாக்கப்படும். புதியக் கல்வித் திட்டம் 2017 ஆம் கல்வி ஆண்டிலிருந்து
நடைமுறைப்படுத்தப்படும்.
* மாணவர்களின் புத்தக சுமை குறைக்கப்படும். மாணவர்களுக்கு கையடக்கக் கணினிகள்
வழங்கப்பட்டு இ-பேக் என்ற மென்பொருள் மூலம் பாடங்கள் தொகுத்து வழங்கப்படும். இதனால்
மாணவர்கள் புத்தகப்பை சுமந்துச் செல்ல வேண்டியிருக்காது.
* மாணவர்கள் எளிதாக பள்ளிக்குச் சென்றுவர மாணவர் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும்.
* தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9-ஆம் வகுப்பிலிருந்தே
சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
*- அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும்
கணிணி ஆசிரியர்களும், பிற சிறப்பு ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.
* தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு
இணையான ஊதியம் வழங்க வகை செய்யப்படும்.
* திறன் சார் கல்வி முறை, அறிவுசார் கல்வி முறை, தொழிற்கல்வி முறை
அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11 ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத்
திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாக சேர்க்கப்படும். அது மாணவர்கள்
படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.
* பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண்மை
குழுக்களாக (School Management Committee) மாற்றப்படும். பள்ளியின் தேவைகள்
தொடர்பான முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்படும்.
* விளையாட்டு, தொழிற்பயிற்சி, நீதிபோதனை, யோகா பயிற்சி ஆகியவற்றுக்கு அதிக பாட
வேலைகள் ஒதுக்கப்படும்.
* மாணவர்களுக்கான பேனா முதல் இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டிகள் மற்றும் ஐ-பேட்
வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இலவச இணைய இணைப்பு தரப்படும்.
* மாணவர்களுக்கு ஆண்டுதோ-றும் மருத்துவ ஆய்வு வழங்கப்படும். மருத்துவ ஸ்மார்ட் கார்டு
வழங்கப்படும்.
* தமிழ் வழிக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

உயர்கல்வி

* உயர் கல்வி கற்பதற்காக பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை
தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.
* பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் திறன்சார் கல்வி கல்லூரிகளுக்கும், பல்தொழில்நுட்ப
கல்லூரிகளுக்கும் ( Polytechnics) நீட்டிக்கப்படும். கல்லூரிப் படிப்பு முடிக்கும் போது
வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
* தொழில்நுட்ப தொழில்கல்வி மற்றும் பயிற்சியை (Technical Vocational Education
and Training - TVET) வழங்க உலகத்தரம் கொண்ட தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி
நிறுவனங்கள் உருவாக்கப்படும். இதில் படிப்பவர்களுக்கு வேலை உறுதி என்ற நிலை உருவாக்கப்படும்.
* மருத்துவக் கல்லூரி இல்லாத 15 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்.
விழுப்புரத்தில் சித்த மருத்துவக் கல்லூரி.
* சென்னையில் இந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of
Science Education and Research - IISER) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழகத்தில் 6 ஒருமை பல்கலைக்கழகங்கள் (Unitary Universities) அமைக்கப்படும்.
ஆராய்ச்சிகளை செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.
* தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு
மண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு இணையான ஓர் உயர் தொழிட்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
இந்த மண்டலங்களில் தலா ஒரு வேளாண் கல்லூரியும், சட்டக்கல்லூரியும் அமைக்கப்படும்.
* பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் (University constituent colleges) அனைத்தும் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும். அவற்றில் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களாக்கப்படுவர்.

மருத்துவம்

* தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். இதனால் மருத்துவத்திற்காக
மக்கள் ஒருபைசா கூட செலவழிக்க தேவையிருக்காது.
* இலவச மருத்துவம் வழங்குவதற்கு வசதியாக தமிழ்நாடு சுகாதார இயக்கம் என்ற புதியத்
திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும்.
* புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கான அதிகவிலை கொண்ட மருந்துகளை வாங்குவதற்கு உதவ
தனி நிதியம்.
* மருந்து விலையை கட்டுப்படுத்த Generic மருந்துகள் ஊக்குவிக்கப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து வசதிகளைக் கொண்ட அதிஉயர் சிறப்பு மருத்துவமனை
(Super Speciality Hospital) அமைக்கப்படும். இம்மருத்துவமனை மாவட்டத்தில் உள்ள மற்ற
அரசு மருத்துவமனைகளுடன் தகவல் தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்படும்.
* கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு கால உதவி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ. 20
ஆயிரமாக உயர்த்தப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள 79,394 கிராமங்களிலும் ஆஷாக்கள் (Accredited Social Health
Activists-ASHAs) நியமிக்கப்படுவார்கள். இவர்கள் கருவுற்றப் பெண்களுக்கு பேறு கால
உதவிகளைச் செய்வார்கள்.
* அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், 24 மணிநேர முதலுதவி வழங்கும்
மருத்துவமனைகளாக படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.
* உலகின் தலைசிறந்த மருத்துவப் பல்கலைக்கழகங்களான ஹார்வர்டு, ஜான்ஸ் ஹாப்கின்ஸ்,
ஸ்டேன்ஃபோர்டு உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களுடன் தமிழகத்தில் உள்ள மருத்துவக்
கல்லூரிகளும், மருத்துவமனைகளும் இணைக்கப்படும்.
* மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதியோர் பிரிவு ஏற்படுத்தப்படும்.
* குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் வரை, அவர்களின் தாய்க்கு தினமும் ஒரு
லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.
* பள்ளிக்கூட மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தின்கீழ், அனைத்துக் கொள்கைகளுக்கும் முழு
உடல் பரிசோதனை செய்யப்படும். இதற்காக மருத்துவ ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
* நோய்களைத் தடுக்கும் நோக்குடன் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
மருத்துவ ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

வேளாண்மை

* வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். உழவர்கள் தெரிவிக்கும்
கோரிக்கைகள் இதில் சேர்க்கப்படும்.
* தோட்டக்கலைத்துறை, நீர்ப்பாசனத் துறை ஆகியவற்றுக்கு தனித்தனி அமைச்சகங்கள்
உருவாக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களையும் சேர்த்து வேளாண்
துறைக்கு மொத்தம் 3 அமைச்சர்கள் இருப்பார்கள்.
* வேளாண்மைக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, விதைகள் உள்ளிட்டவையும், மின்சார
மோட்டாரும் இலவசமாக வழங்கப்படும்.
* உழவர்களின் பயன்பாட்டுக்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஓர் டிராக்டர் இலவசமாக வழங்கப்படும்.
* கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,000 ஆகவும், நெல் கொள்முதல் விலை
குவிண்டாலுக்கு ரூ.2,200 ஆகவும் உயர்த்தப்படும்.
* உழவர்களின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; உழவர் ஊதியக்குழு அமைக்கப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வேளாண் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதன ஆலைகள், ஏற்றுமதி மண்டலங்கள் அமைக்கப்படும்.
இவற்றில் வேளாண் பொருட்கள் மதிப்புக் கூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் என்பதால், புதிய
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* தமிழகத்தில் 4 மண்டல வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கும் இஸ்ரேலிய
வேளாண்துறைக்கும் இடையே ஒத்துழைப்பு உடன்பாடு செய்யப்படும்.
* மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அனுமதிக்கப்படாது.
* காவிரி பாசன மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்
அமைக்கப்படும். பிற மாவட்டங்களில் தேவையான அளவு அமைக்கப்படும்.
* தில்லி, பெங்களூரில் செயல்படுவது போன்று திருச்சியில் சஃபல் சந்தை (Safal
Market) அமைக்கப்படும்.
* பனையிலிருந்து பதனீரும், தென்னையிலிருந்து நீராவும் (NEERA) இறக்கி விற்பனை செய்ய
அனுமதி அளிக்கப்படும்.
* நன்செய் நிலங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்ப்பாசனம்

* நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம்... தனி அமைச்சர்
* தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டம்
செயல்படுத்தப்படும்.
* அவினாசி&அத்திக்கடவு, பாண்டியாறு - புன்னம்புழா, மேட்டூர் உபரி நீர் பாசனம் ஆகிய
திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* பாசன வசதி பெற்ற நிலங்களின் அளவு 33 லட்சம் ஹெக்டேரிலிருந்து 60 லட்சம்
ஹெக்டேராகவும், விவசாயம் செய்யப்படும் நிலங்களின் பரப்பு 48 லட்சம் ஹெக்டேரில் இருந்து
ஒரு கோடி ஹெக்டேராகவும் அதிகரிக்கப்படும்.
* ஆறுகள் மற்றும் கால்வாய்களில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டப்படும்.
* தமிழகத்தில் பாயும் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* வீராணம் ஏரி, பொன்னேரி ஏரி, ஆர்.எஸ்.மங்கலம் ஏரி உள்ளிட்ட அனைத்துப் பெரிய
ஏரிகளையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

நிர்வாகம்

* முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டு தோறும் ஜனவரி மாததின்
முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
* ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு அதன்
முடிவுகள் மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.
* அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத் தலைநகரில் நடத்தப்படும். அதேபோல்,
மாவட்ட அளவிலான வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்திற்கு
முதலமைச்சர் தலைமையிலான குழு சென்று ஆய்வு நடத்தும்.
* அரசின் முடிவுகள் பெரும்பாலும் கருத்தொற்றுமை அடிப்படையில் எடுக்கப்படும்.
சட்டமுன்வரைவுகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்கள் விரும்பும் மாற்றத்துடன்
நிறைவேற்றப்படும்.
* அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில், தமிழகம் 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு
மண்டலத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக தலைமைச் செயலாளர் நிலையிலான அதிகாரி
ஒருவர் நியமிக்கப்படுவார். அம் மண்டலத்தில் நிர்வாகம் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம்
அவருக்கு வழங்கப்படும்.
* திருச்சி மாநகரம் இரண்டாவது தலைநகரமாக மாற்றப்படும்.
* தமிழ்நாட்டில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 12 லட்சம்
மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வகையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள்
உருவாக்கப்படும்.
* மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க முதலமைச்சர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர்
அலுவலகங்களிலும் இலவச தொலைபேசி சேவை தொடங்கப்படும்.

சட்ட மேலவை

* தமிழ்நாட்டில் சட்டமேலவை மீண்டும் ஏற்படுத்தப்படும்.
* ஆண்டுக்கு நான்குமுறை சட்டப்பேரவை கூடுவதும், 100 நாட்கள் பேரவைக் கூட்டம் நடப்பதும்
உறுதி செய்யப்படும். பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
* நிதிநிலை தயாரிப்புக்கு முன்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்துத் தரப்பு
மக்களிடமும் கருத்துக் கேட்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும்.
* நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக நடவடிக்கை திட்ட விவர அறிக்கை (Action Taken Report), தாக்க அறிக்கை (Outcome Budget), பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) ஆகியவை தாக்கல் செய்யப்படும்.
* வேளாண் துறைக்கான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த தனி அமைச்சரவைக் குழு
(Cabinet Committee on Agriculture) அமைக்கப்படும்.
* காவல்துறையின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்ய நேர்மையான அதிகாரிகளைக்
கொண்ட சுதந்திரமான காவல் ஆணையம் (Independent Police Authority) அமைக்கப்படும்.
* அனைத்து காவல் நிலையங்களிலும் படப்பதிவுக் கருவிகள் பொருத்தப்படும்.
* உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

தொழில் வளர்ச்சி

* தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திக்க முதலமைச்சர் வாரம் 3
மணி நேரம் ஒதுக்குவார்.
* புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி 3 வாரங்களில் வழங்கப்படும். தொழில்
தொடங்குவதற்கான அனைத்து அனுமதிகளும் ஒற்றைச்சாளர முறையில் (ஷிவீஸீரீறீமீ கீவீஸீபீஷீஷ்
ஷிஹ்stமீனீ) அளிக்கப்படும்.
* ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தொழில் திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு உதவ
முதலமைச்சர் அலுவலகத்தில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
* வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய முன்வந்தால்
அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அ-னுமதியும், நிலம் மற்றும் மானியமும் வழங்கப்படும்.
* தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தியில் 60% சென்னையிலும், 15% கோவையிலும்
செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் 25% மட்டுமே உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நிலையை
மாற்ற தமிழகம் முழுவதும், குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் தொழிற்சாலைகள்
தொடங்கப்படும்.
* தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை தொடங்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன்
மூலம் அங்கு புதிய தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மதுரை & தூத்துக்குடி தொழில் தாழ்வாரத்தை விரைவாக உருவாக்கி, புதிய
தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தொழிற்சாலைகளில் பணியாற்ற சிறந்த மனித வளத்தை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு
மாவட்டத்திலும் ஒரு தொழிற்கல்வி நிலையமும், ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு தொழிற்பயிற்சி
நிலையமும் அமைக்கப்படும்.
* ஓசூரில் தொடங்கி கிருஷ்ணகிரி, தருமபுரி வரையுள்ள பகுதி தகவல் தொழில்நுட்பத்
தாழ்வாரமாக மாற்றப்படும்.
* புதிய தொழில் தொடங்க முன்வருவோருக்கு உடனடியாக நிலம் வழங்க வசதியாக ஒன்றரை
லட்சம் ஏக்கர் நிலம் கொண்ட நில வங்கி ஏற்படுத்தப்படும். இதில் ஒரு சதுர அடி கூட
விளைநிலமாக இருக்காது.
* சிறு&குறு விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் அளவு 50
யூனிட்களிலிருந்து 100 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
* விசைத்தறியாளர்கள் சூரியஒளி மின்உற்பத்தி கட்டமைப்பை அமைப்பதற்கான மூலப் பொருட்கள்
90 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.
* பல்லடம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பதுடன், விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும்
துணிகளை விற்பனை செய்ய ஜவுளி சந்தையும் ஆரம்பிக்கப்படும்.
* விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது உறுதி
செய்யப்படும்.
தொழில் முதலீட்டை ஈர்க்க ஆணையரகங்கள்
* தமிழகம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் தனித்தனிப் பொருளாதார
ஆணையரகங்களாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள
அதிகாரி ஒருவர் பொருளாதார ஆணையர்களாக நியமிக்கப்படுவர்.
* ஒவ்வொரு மண்டலத்திலும் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து
அதற்கான முதலீட்டை ஈர்க்கும் பணிகளில் பொருளாதார ஆணையர்கள் ஈடுபடுவார்கள்.
* உலக அளவில் ஏற்படும் தொழில்துறை முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அவற்றை
தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை அரசுக்கு இந்த அமைப்பு பரிந்துரைக்கும்.
* தொழில்தொடங்க முன்வருவோருக்கு ஆலோசனை வழங்குதல், முதலமைச்சரைச் சந்தித்துப் பேச
வகை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபடும்.
* வெளிநாடுகளில் நடைபெறும் பொருளாதார மாநாடுகள், தொழில் முதலீட்டுச் சந்திப்புகள்
ஆகியவற்றில் மண்டலப் பொருளாதார ஆணையர்களுடன், தமிழக முதலமைச்சர் பங்கேற்று முதலீட்டைத் திரட்டுவார்கள்.

வேலைவாய்ப்பு

* ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்கு வேலை உறுதி செய்யப்படும்.
* 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
* 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
* சுய தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்படும். முறைசாரா தொழில் தொடங்குவதற்காக அரசே
உத்தரவாதம் அளித்து கடன் பெற்றுத் தரும்.
* இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி தொழில் தொடங்க
மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
* குறைந்தபட்சம் 10 பேருக்கு வேலை வழங்கக்கூடிய புதிய நிறுவனங்களைத் தொடங்க
அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வட்டியில்லா கடனாகவோ / அரசின் பங்கு மூலதனமாகவோ வழங்கப்படும்.

தகவல் தொழில்நுட்பத் துறை

* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோர் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம்
செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு புதிய
வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, தனிப்பிரிவு தொடங்கப்படும்.
* பணி இழந்த தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களுக்கு அரசு செலவில் திறன் மேம்பாட்டுப்
பயிற்சிகள் அளிக்கப்படும்.
* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோரின் வசதிக்காக, இரவு நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

ஒரு கோடி பேருக்கு வேலை

* தமிழ்நாட்டில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்காக சிறப்புத் திட்டம்
செயல்படுத்தப்படும். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தமிழ்நாட்டில் 6 பெரிய துறைமுகங்களும், 20 சிறிய துறைமுகங்களும் இருப்பதைப்
பயன்படுத்தியும், புதிய கிடங்குகளை உருவாக்கியும் தமிழகத்தை சர்வதேச தளவாடக் கிடங்கு
மையமாக (International Warehousing Hub) மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழக அரசுக்-குச் சொந்தமான கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்கள் விரிவாக்கப்படும்.
* சென்னையில் வாகனம் சார்ந்த தொழில்கள் அமைக்கவும், கோவை மற்றும் திருப்பூரில் ஆடை
சார்ந்த தொழில்கள் அமைக்கவும் வெளிநாடுகளில் முதலமைச்சர் அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று
முதலீடுகளைத் திரட்டி வருவார்.
* உலக மருத்துவ கவனிப்பு மையமாக தமிழகம் மாற்றப்படும்.
* சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்கள் மருத்துவச் சுற்றுலாத் தலங்களாக மாற்றப்படும்.
* மருத்துவம் சார்ந்த அயல்பணி வணிக மையமாக (Health Care BPO) தமிழகம் உருவாக்கப்படும்.
* தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் செவிலியர் பயிற்சிப் பள்ளிகளை அமைத்து
பல்லாயிரக்கணக்கான செவிலியர்களை உருவாக்கி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை பெற்றுத்தரப்படும்.
* கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் ஆடை தயாரிப்பு நிறுவனங்களை அதிக அளவில்
தொடங்குவதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இது தமிழகத்தின் பொருளாதார
வளர்ச்சிக்கும், ஏற்றுமதி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.
* தமிழகத்தின் பொருட்கள் ஏற்றுமதி ரூ.1.90 லட்சம் கோடியாகவும், தகவல் தொழில்நுட்ப
சேவை சார்ந்த ஏற்றுமதி ரூ.78,400 கோடியாகவும் உள்ளது. இது இரட்டிப்பாக்கப்படும்.
* மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்
ஏற்படுத்தப்படும்.

பொருளாதார வளர்ச்சி

* பொருளாதார விஷயங்களில் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார வல்லுனர் குழு
அமைக்கப்படும்.
* தமிழகத்தின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 10 விழுக்காட்டுக்கும் கூடுதலாக
உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* சர்க்கரை மீதான 5% மதிப்பு கூட்டு வரி ரத்து செய்யப்படும்.
* நிலங்களின் மீதான வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படும்.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் இலவசம்
* அனைவருக்கும் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கான அனைத்து தேவைகளும்
இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம்
மிச்சமாகும். இதை அக்குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவசமாக கருதலாம்.
* தமிழகத்தின் கடன் சுமையை குறைக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம்
ஆண்டுக்கு ரூ. 1.08 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும்.
* இந்த நடவடிக்கைகளின் மூலம் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படுவதால் இனி அதிகமாக கடன்
வாங்கத் தேவையிருக்காது.

உட்கட்டமைப்பு வசதிகள்

* அனைத்து மாவட்ட சாலைகளும் இருவழிப் பாதைகளாக்கப்படும்; அனைத்து மாநில
நெடுஞ்சாலைகளும் நான்குவழி பாதைகளாக மாற்றப்படும்.
* அனைத்து மாவட்டத் தலைநகரங்களும் சென்னையுடன் தேசிய நெடுஞ்சாலை வழியாக
இணைக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
* சென்னை -கன்னியாகுமரி இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை ஆறுவழிப் பாதையாக
மாற்றப்படும்.
* சாலைகளை அமைப்பவர்களே அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவற்றை பராமரிக்க வேண்டும் என்பது
ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக சேர்க்கப்படும்.
* சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை அமைக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
* குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்கப்படும்; வேலூருக்கு விமான சேவை தொடங்கப்படும்.
* கட்டமைப்பு தேவைகளை முன்கூட்டியே கணக்கிட்டு நிறைவேற்ற வசதியாக தமிழ்நாடு
கட்டமைப்பு ஆணையம் (Tamil Nadu Infrastructure Authority) அமைக்கப்படும்.
குடிசைகள் இல்லாத தமிழகம்
* குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்குடன் குடிசைகளில் வாழும் குடும்பங்கள்
கணக்கெடுக்கப்படும். அவர்களுக்கு அடுத்த இரு ஆண்டுகளில் கழிப்பறை, சூரிய ஒளி மின்சார
வசதியுடன் கூடிய வீடுகள் கட்டித்தரப்படும்.
* சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரவில்
தங்குவதற்கான வீடுகள் கட்டித் தரப்படும்.

போக்குவரத்து

* பேருந்துக்கட்டணங்கள் குறைக்கப்படும்.
* ஆம்னி பேருந்துகளின் கட்டணம் முறைப்படுத்தப்படும்.
* ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அனைத்து வசதிகளுடன் கூடிய அரசுப்
போக்குவரத்துக்கழக பேரூந்துகள் இயக்கப்படும்.
* லாபத்தில் இயங்கும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
* அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் நடைபெறும் ஊழல்கள் ஒழிக்கப்பட்டு, அனைத்துப்
போக்குவரத்துக் கழகங்களும் லாபத்தில் இயக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படும்.
* அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட
வேண்டிய ரூ.2000 கோடி நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும்.
* சென்னையில் மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும். கோவை, மதுரை, சேலம், திருச்சி,
திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் மெட்ரோ சேவை அறிமுகம் செய்யப்படும்.
* தமிழகத்தில் ரயில் திட்டங்களை விரைந்து முடிக்க வசதியாக திட்டச் செலவில் 50
விழுக்காட்டை மாநில அரசு வழங்கும்.
* சென்னையில் பேருந்து விரைவுப் போக்குவரத்துத் திட்டம் (BRTS) செயல்படுத்தப்படும்.

மின்துறை

* மின்துறை சீர்திருத்தம் மூலம் 15% மின்கட்டணம் குறைக்கப்படும்.
* இருமாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்துவதற்கு பதில், மாதத்திற்கு ஒருமுறை
மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும். இதனால், 25% வரை கட்டணம் குறையும்.
* தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு புத்துயிரூட்ட வல்லுனர் குழு அமைக்கப்படும். அதன்
பரிந்துரைகள் 3 மாதங்களில் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
* மின்துறை சீர்திருத்தங்களின் மூலம் மின்வாரியம் லாபம் ஈட்டும் நிலை ஏற்படுத்தப்படும்.
* தமிழகம் உண்மையாகவே மின்மிகை மாநிலமாகும் வகையில் புதிய மின்திட்டங்கள்
செயல்படுத்தப்படும்.

சூரியஒளி மின்திட்டம்

* தமிழ்நாட்டில் உள்ள 12,500 ஊராட்சிகளிலும் தலா ஒரு மெகாவாட் திறன் கொண்ட
சூரியஒளி மின்நிலையம் அமைக்கப்பட்டு, அதிலிருந்து அங்குள்ள வீடுகளுக்கு மின்சாரம்
வழங்கப்படும். இது 10 ஆண்டுகாலத் திட்டமாக செயல்படுத்தப்படும்.
* வீட்டின் கூறைகளில் சூரிய ஒளி மின்னுற்பத்தி ஊக்குவிக்கப்படும். அவ்வாறு உற்பத்தி
செய்யப்படும் மின்சாரத்தை அரசே எடுத்துக் கொண்டு அதற்கான விலையை வழங்கும்.
* மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார சட்டத்தின் அம்சங்களுக்கு ஏற்ற வகையில்
மாற்றியமைக்கப்படும்.

தண்ணீர்

* தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.
* நிலத்தடி நீர் மாசுபட்ட ஊராட்சிகளில் சவ்வூடுபரவல் (RO_ Reverse Osmasis)
முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
* அனைத்து நகரப்பகுதிகளிலும் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட தூய
குடிநீர் வழங்கப்படும்.
* நகரப்பகுதிகளில் குடிநீர் மற்றும் சமையல் பயன்பாட்டுக்காக 40 லிட்டர் உட்பட 135
லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
* நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* அனைத்து நதிநீர் பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.

சமூக நீதி

* தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
* உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் 100% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த முயற்சி.
* தனியார் துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை.

சமூக நலன்

* தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடை சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகள் மற்றும் அரசின்
நலத்திட்ட உதவிகளைப் பெற ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் அட்டை
வழங்கப்படும்.
* படிப்பை முடித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்
வேலை கிடைக்காமல் இருக்கும் அனைவருக்கும் மாதம் ரூ.3000 வரை உதவித் தொகை வழங்கப்படும்.
* 60 வயதான அனைவருக்கும் மாதம் ரூ. 2000 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக அவர்கள்
விண்ணப்பிக்கத் தேவையில்லை. அரசிடம் உள்ள ஆவணங்களின்படி இவர்கள் அடையாளம் காணப்பட்டு உதவி வழங்கப்படும்.
* ஆதரவற்றோர், கைம்பெண்கள், வேலை செய்ய முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்
ரூ.2500 ஓய்வூதியம் வழங்கப்படும்.

சிறுபான்மையினர் நலன்

* மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்த சிறுபான்மை சமுதாயத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப
அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.
* 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் அனைவரும் கருணை அடிப்படையில் விடுதலை
செய்யப்படுவார்கள்.
* கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் நலன் மற்றும் உரிமைகள்
பாதுகாக்கப்படும்.
பட்டியலினத்தவர் பழங்குடியினர் நலன்
* தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்புக்கூறு திட்டம் மிகச் சிறப்பான
முறையில் செயல்படுத்தப்படும்.
* தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவ&மாணவியர்கள் கல்வி உதவித் தொகைக்கான
நிதி ஒதுக்கீடு 50% அதிகரிக்கப்படும்.
* அட்டவணை இன மக்களுக்கான சிறப்புக் கூறுத்திட்டம், பழங்குடியினர் உட்கூறு திட்டம்
ஆகியவை சிறப்பாகச் செயல்படுத்தப்படும்.
* அரசுத் துறையில் நிரப்பப்படாத பணியிடங்களைச் சிறப்புப் பணி நியமனங்கள் மூலமாக
நிரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* மனிதக் கழிவுகளையும், கழிவுநீர்ப் பாதை மற்றும் தொட்டிகளையும் மனிதர்களே அகற்றும்
அநீதிக்கு முடிவு கட்டப்படும்.

பிற பிற்படுத்தப்பட்டோர் நலன்

* தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று
மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும்.
* தேசிய அளவில் பிறபிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று
மத்திய அரசிடம் வலியுறுத்தி வெற்றிபெறுவோம்.
* பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும். இடைக்கால
ஏற்பாடாக கிரிமிலேயருக்கான வருவாய் வரம்பை தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.12
லட்சமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.
* மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிரிமிலேயர் அல்லாதவர்கள்
கிடைக்காவிட்டால், அந்த இடத்தை கிரிமிலேயரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று அரசாணை
பிறப்பிக்கும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

மாற்றுத்திறனாளிகள் நலன்

* கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீடு
முழுமையாக கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பின்னடைவு பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நிரப்பப்படும்;
மாத உதவித் தொகை ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.

பால் உற்பத்தியாளர் நலன்

* பால் உற்பத்தியாளர்கள் எவ்வளவு பால் கொண்டு வந்தாலும், அதை ஆவின் கொள்முதல் செய்யும்.
* ஆவின் பால் கொள்முதல் தினமும் 50 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்படும்.

நெசவாளர் & மீனவர்கள் நலன்

* பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு 40% கூலி உயர்வு வழங்கப்படும்.
* காஞ்சிபுரம் & ஆரணி, கும்பகோணம் & திருபுவனம் ஆகிய இடங்களில் பட்டுப்பூங்கா
அமைக்கப்படும்.
* கூட்டுறவு வங்கிகளில் நெசவாளர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* நெசவாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.
* மீன் பிடித் தொழிலை மேம்படுத்தவும், மீன் பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை
எடுக்கப்படும்.
* படகுகள், வலைகள் மானிய விலையில் வழங்கப்படும்.
* ஆழ்கடல் மீன்பிடிப்பு ஊக்குவிக்கப்படும்.
* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்; இலங்கைப் படைகள் பறிமுதல் செய்து வைத்துள்ள
படகுகள் மீட்கப்படும்.
* மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி இரட்டிப்பாக்கப்படும்.

வணிகர்கள் நலன்

* வரிச்சீர்திருத்தம் தொடர்பான வணிகர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.
* சிறு வணிகர்களுக்கு Debit Card and Credit Card Swiping Machine கள்
வங்கிகளின் மூலம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான மானியத்தை
தமிழக அரசே வழங்கும்.
* சிறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இலவசக் காப்பீட்டு வசதி வழங்கப்படும்.
ஆசிரியர் & அரசு ஊழியர் நலன்
* அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில்
வழங்கப்படும்.
* புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படும்.
* 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
* இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 15% சேர்த்து வழங்கப்படும்.
* போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,000 கோடி
மதிப்பிலான ஓய்வூதியப் பயன்கள் உடனடியாக வழங்கப்படும்.
* போக்குவரத்துக் கழக பணியாளர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக்கப்படுவர்.
* அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும்.
* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
* அனைத்து நிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் காணப்படும் முரண்பாடுகள் களையப்படும்.
* அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு
கிடைப்பது உறுதி செய்யப்படும்.
* பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், அரசுத் துறைகளில்
பணியாற்றும் பகுதி நேர ஊழியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு
காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
* அரசு ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து சரி செய்வதற்காக அரசுத்துறை செயலாளர்
தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும்.

பெண்கள், திருநங்கையர் நலன்

* காவல்துறையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
* சென்னை, தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கூடுதலாக 3 மகளிர் பல்கலைக்
கழகங்கள் அமைக்கப்படும்.
* தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும்.
* பெண்களுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் சத்து குறைந்த குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் வழங்கப்படும்.
* கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கையர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.
* குடும்பத்தைப் பிரிந்து வாழும் திருநங்கையர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு வசதியாக
விடுதிகள் அமைத்துத்தரப்படும்.

இந்துசமய அறநிலையத்துறை

* கோயில்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் மீட்கப்படும்.
* கோயில் நிலங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
* இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கோயில்களின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு
முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
* பழங்கால கோயில்கள் அனைத்தும் சீரமைக்கப்படும்.
* கோயில் குளங்கள் அனைத்தும் தூர்வாரி மேம்படுத்தப்படும்.

மசூதிகள் & தேவாலயங்கள்

* வ-க்ஃபு வாரியச் சொத்துக்கள் மீட்கப்படும்.
* தேவாலயங்கள் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
* கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கான மின் கட்டணம் 40 விழுக்காடு வரை
குறைக்கப்படும்.

பத்திரிகையாளர் நலன்

* பத்திரிகையாளர்கள் நல நிதிக்கு அரசு விளம்பரங்களில் இருந்து 3% தொகை வழங்கப்படும்.
* நீதிபதி மஜிதியா குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை.
* புதிய மருத்துவக் காப்பீடு, வீட்டுவசதித் திட்டம், வாடகை வீடு திட்டம், மாத
ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* பத்திரிகையாளர்கள் மடிக்கணினி வழங்க 90% மானியத்துடன் கடன், இலவச இணையதள வசதி.

திரைப்படத்துறை

* திருட்டு வி.சி.டி.க்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கை.
* திரைத்துறையில் இழந்த அனைத்து பெருமைகளையும், வாய்ப்புகளையும் மீட்டு, சென்னையை
தென்னிந்திய திரை உலகின் தலைநகராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
தனியார் பங்களிப்புடன் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த படப்பிடிப்புத் தளங்களை அமைக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் படப்பிடிப்பு
நடத்துவதற்கான கட்டணங்கள் குறைக்கப்படும்.
சென்னையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அசைகலை பூங்கா (Animation Park) அமைக்கப்படும்.
திரைத்துறையில் தனி நபர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்படும். அரசின் தலையீடு முற்றிலுமாக
இருக்காது. திரைத்துறை ஒரு கலைத்துறை என்ற வகையில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படும்.
குறைந்த செலவில் தரமான திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில்
சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
விலைவாசிக் கட்டுப்பாடு, நியாயவிலைக் கடை
* சாந்தகுமார் குழு பரிந்துரை அறிக்கையின்படி, உணவுப் பொருள் மானியத்தை மக்களுக்கு
நேரடியாக வழங்கும் திட்டம் (Direct Benefit Transfer), நேரடி நெல் கொள்முதல்
நிலையங்களையும், நியாயவிலைக் கடைகளையும் மூட வகை செய்யும் என்பதால், அத்திட்டத்தை
பாட்டாளி மக்கள் கட்சி ஏற்காது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் கணினி மயமாக்கப்படும்.
அனைத்துப் பொருட்களையும் அனைத்து நாட்களிலும் வழங்க வகை செய்யப்படும்.
நியாயவிலைக் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கும் திட்டமும், பருப்பு உள்ளிட்ட பிற
தானியங்களை மானிய விலையில் வழங்கும் திட்டங்களும் தொடரும். அரிசி 20 கிலோ
மூட்டையாகவும், பிற பொருட்கள் ஒரு கிலோ பாக்கெட்டுகளிலும் வழங்கப்படும்.
200 குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கப்படும்.

விலைவாசிக் கட்டுப்பாடு

விலைவாசியைக் குறைப்பதன் மூலம் பெரும்பான்மையான மக்களை வறுமையின் பிடியிலிருந்து
மீட்க முடியும். இதற்காகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் நியாய விலைப் பல்பொருள் அங்காடிகள் திறக்கப்படும்.
இவற்றில் அனைத்துப் பொருட்களும் அடக்க விலைக்கே விற்பனை செய்யப்படும்.
* சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறிய அளவில் நடத்தப்பட்டு வரும் பண்ணைப் பசுமைக் கடைகள்
தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்படும்.
* பண்ணைப் பசுமைக் கடைகளுக்காக மாவட்ட அளவில் அரசு கொள்முதல் நிலையங்கள்
அமைக்கப்படும். இதனால் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

இளைஞர் நலன் & விளையாட்டு

* படித்து முடித்தவுடன் வேலைக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பள்ளி மற்றும்
கல்லூரிப் படிப்பில் திறன்சார் கல்வி, அறிவுசார் கல்வி, தொழிற்கல்வி ஆகியவை அறிமுகம்
செய்யப்படும்.
* இளைஞர்களுக்கு பொது அறிவு, கணினி அறிவு, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறன்,
நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்கும் திறன் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இளைஞர்களுக்கு வேலை வழங்க வசதியாக, ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான
சிறப்பு செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

விளையாட்டு

தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்.
அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
* தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் பிற வல்லுநர்கள் கலந்து ஆய்வு
செய்து பத்தாண்டு விளையாட்டு செயல் திட்டம் ஒன்றினை வகுக்கும். ஒலிம்பிக் போட்டியில்
தமிழக இளைஞர்கள் தங்கப் பதக்கம் வெல்லும் சாதனையை நிகழ்த்தும் அளவிற்குத் தேர்ச்சித் தரத்தை
இது உருவாக்கும்.
* தடகளம், சிம்னாஸ்டிக், கால்பந்து, ஆக்கி, கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிசு,
பாட்மிண்டன், குத்துச்சண்டை, சடுகுடு, நீச்சல், சதுரங்கம் உள்பட விளையாட்டின் அனைத்துத்
துறைகளிலும் தனித் தேர்ச்சிக்கு வலுவான ஊக்கம் அளிப்பது இந்தச் செயல்திட்டத்தின்
அடிப்படையாக இருக்கும்.

இயற்கை வளப் பாதுகாப்பு

* அனைத்து கிரானைட் மற்றும் தாதுமணல் குவாரிகள் முறைப்படுத்தப்படும்.
* கிரானைட், தாது மணல் மற்றும் ஆற்று மணல் கொள்ளை குறித்து உச்சநீதிமன்றத்தின்
கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்.

ஈழத்தமிழர் நலன்

* இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அகதிகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை வரையறுக்கும்
வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழும் வகையில் அனைத்து
வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படும். இரட்டைக் குடியுரிமை வழங்க நடவடிக்கை.
* தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும், தமிழக மக்களுக்கு வழங்கப்படும்
சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும்.
* இலங்கை இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை, தமிழீழம் அமைப்பது குறித்து
ஐ.நா. பொது வாக்கெடுப்பு ஆகியவற்றுக்காக தமிழக அரசு குரல் கொடுக்கும்.

நகர்ப்புற வளர்ச்சி

* மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 12 ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தை விரைந்து செயல்படுத்த
நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.
* நகரங்களில் பேரூந்து நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வை&ஃபை
(WI_FI) வசதி செய்துத் தரப்படும்.
* பெருநகரங்களில் பேரூந்து வசதிகள் இருமடங்காக்கப்படும்.
* பூஜ்ய குப்பை திட்டங்களை நடைமுறைப்படுத்தி குப்பையும், குப்பை மேடுகளும் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.
* காற்று மாசுபாட்டை முற்றிலும் தடுத்து தூய சுவாசம் உறுதி செய்யப்படும்.
* பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்.

சட்டம் & ஒழுங்கு

* காவல்துறையினருக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.
* காவல்துறையினருக்கு ஊதிய உயர்வும், வீட்டு வசதியும் வழங்கப்படும்.
* காவலர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு வழங்கப்படும்; ஓய்வு பெறும் போது
ஆய்வாளர் நிலைக்கு உயர்வது உறுதி செய்யப்படும்.
* ராணுவத்தினருக்கு வழங்கப்படுவது போன்ற சலுகைகள் வழங்கப்படும்.
* தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சலுகை விலையில் பொருட்கள் வழங்கும்
கேண்டீன்கள் திறக்கப்படும்..
* பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தனிக்காவல் பிரிவு ஏற்படுத்தப்படும்.
* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறைத்துறை
* சிறைகள் தண்டனைக் கூடங்களாக இல்லாமல் குற்றம் செய்பவர்களை திருத்தும் இடங்களாக
செயல்படும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்படும்.
* சிறைகளில் மனிதஉரிமை மீறல் உள்ளிட்ட குற்றங்கள் நடப்பதற்கு வழியே இல்லாத வகையில்
சிறைக் கையேடு திருத்தி அமைக்கப்படும்.

சட்டம் & நீதி

* உச்சநீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசிடம் முதலமைச்சர் தலைமையிலான
குழு வலியுறுத்தும்.
* 5 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கிக்கிடக்கும் வழக்குகளை அடுத்த ஓராண்டுக்குள்
விசாரித்து தீர்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்து காவல்நிலையங்களிலும் மக்களுக்கு சட்ட உதவி வழங்க வசதியாக ஒரு வழக்கறிஞர்
நியமிக்கப்படுவார்.
கருவேல மரங்கள் அழிப்பு
* பிரேசில், ஆஸ்திரேலியா, சிரியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இலை உதிர்க்கும் பூச்சி (Leaf tying moth),சாறு உறிஞ்சும் வண்டுகளை (Sap
sucking bug) கருவேல மரங்களில் விடுவதன் மூலம், அவற்றை பட்டுப்போக வைத்து அழிக்கலாம்.
* கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றிவிட்டு, அந்த இடத்தில் கீமீமீபீநீவீபீமீ
எனப்படும் கலைக்கொல்லியைத் தெளிக்கலாம்.
* கருவேல மரங்கள் ஒழிக்கப்பட்ட இடங்களில் தொடக்கத்தில் பருத்தியும் பின்னர் நெல்லும்
விளைவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தைல மரங்கள் ஒழிப்பு

* யூகலிப்டஸ் தைல மரங்களும், சீமைக் கருவேல மரங்களுக்கு இணையாக நிலத்தடி நீரை
உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை வளர்க்கத் தடை விதிக்கப்படும்.
* அரசு நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் வளர்ந்துள்ள யூகலிப்டஸ் தைல மரங்களை
ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பனை மரம் வளர்ப்பு

* தமிழ்நாட்டில் பனை மரங்கள் அழிந்து வருவதைத் தடுத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க
சிறப்புத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி செயல்படுத்தும்.
* காஃபி வாரியம், தேனீர் வாரியம் போன்று பனை வளர்ச்சி வாரியம் அமைக்கப்படும். பனை மர
விவசாயிகள் அமைப்பு உருவாக்கப்படும்.
* நீரா பானம், பனை வெல்லம், பனங்கற்கண்டு உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியும் விற்பனையும்
ஊக்குவிக்கப்படும்.பனம் பழத்திலிருந்து ஜாம் தயாரித்து விற்பனை செய்யப்படும்.
*பனை இலையைக் கொண்டு பாய்கள், பெட்டிகள், கைப்பைகள் ஆகியவை தயாரித்து விற்பனை
செய்யப்படும்.பனை நாரிலிருந்து தரைவிரிப்புகள், கம்பளங்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

நீர் மாசுபாடு, நில மாசுபாடு, காற்று மாசுபாட்டினை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவோம்.
நீர்வள ஆதாரங்கள் சீரழிக்கப்படும் நிலை மாற்றப்படும். ஆறுகள், ஆற்றுவடிநிலப் பகுதிகள்
அனைத்தும் பாதுகாக்கப்படும்.
தமிழ்நாட்டில் 17 ஆற்று வடிநிலப்பகுதிகளிலும் ஒருங்கிணைந்த ஆற்றுவடிநிலப்பகுதி
மேலாண்மை திட்டம் (Integrated River Basin Management - IRBM) செயலாக்கப்படும்.
ஆற்றுப்படுகைகளைக் காப்பாற்றும் வகையில் ஆற்றுப்பகுதி ஒழுங்குமுறை மண்டல (River
Regulation Zone - RRZ) விதிகள் கொண்டுவரப்படும்.

திடக்கழிவு மேலாண்மை

குப்பை சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சுழியக்குப்பை (Zero Waste) முறை ஊக்குவிக்கப்படும். இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் & 2016 முறையாக
செயலாக்கப்படும்.
-ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பாலித்தீன் பைகள் தடைசெய்யப்படும். இதற்கான
சட்டம் கொண்டுவரப்படும்.
சுற்றுச்சூழலைப் பாதிக்கும் மீத்தேன் திட்டம், பாறை எரிவாயுத் திட்டம், கெயில் குழாய்
(GAIL Pipe line project) ஆகிய திட்டங்கள் தடுக்கப்படும்.
கொடைக்கானல் பாதரசக் கழிவு நீக்கம் பன்னாட்டு தரத்தில் இருப்பது உறுதி

மொழி

*- எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் தேசிய மொழிகளாக
அறிவிக்க பிற மாநில முதலமைச்சர்களுடன் இணைந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை தமிழில் நடத்த
நடவடிக்கை எடுக்கப்படும்.
* இந்தியாவின் பிற மாநில மொழிகளையும், பிற வெளிநாட்டு மொழிகளையும் கற்றுக் கொள்ள
மாணவர்கள் விரும்பினால் அதற்கான உதவிகள் வழங்கப்படும்.

சென்னை

* சென்னையில் மாநகரப் பேரூந்துகளின் எண்ணிக்கை 8000 ஆக உயர்த்தப்படும்.
* சென்னையில் அனைத்து பேரூந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
* சென்னையில் பேரூந்து விரைவுப் போக்குவரத்துத் திட்டம் அமைக்கப்படும்.
* சென்னையில் மிதிவண்டிப் போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* சென்னையில் கூவம், அடையாறு உள்ளிட்ட நீர்நிலைகள் தூய்மைப்படுத்தி அழகாக்கப்படும்.

தலைமைச் செயலக நகரம்

* சென்னைப் புறநகர் பகுதியில் தலைமைச் செயலக நகரம் (Secretariat City)
அமைக்கப்படும். அங்கு அரசு தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம், துறைகளின்
செயலகங்கள், அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகள் இடம்பெறும்.
பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றை
உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நகரமாக இது அமையும்.

சுற்றுலா

* கன்னியாகுமரி மாவட்டம் பசுமைச் சுற்றுலா மாவட்டமாக அறிவிக்கப்படும். அம்மாவட்டத்தில்
பசுமைப் பகுதிகள் மேம்படுத்தப்பட்டு சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை வெளிநாட்டவரும், வெளி மாநிலத்தவரும் அறிந்து
கொள்ள வசதியாக கலாச்சார சுற்றுலா அறிமுகப்படுத்தப்படும்.
* மூலிகைப் பகுதி சுற்றுலா, அருவிச் சுற்றுலா, கதை சொல்லி சுற்றுலா என பல
கருத்துக்களின் அடிப்படையிலான சுற்றுலாக்கள் தொடங்கப்படும்.
* ஆன்மிகச் சுற்றுலா தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

பொதுப் பிரச்சினைகள்

* ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* வீடுகட்டுவதற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அரசு மானிய விலையில் வழங்கும்.
* தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழகப் பெருவிழாவாகக்
கொண்டாடப்படும்.
* தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் என்ற
பெருமைக்குரிய சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவரது
சொந்த ஊரில் மிகப் பெரிய அளவில் நூலகம் அமைக்கப்படும்.
* மாணவர்களின் மனம் கவர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பெயரில்
அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்.
* விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடிய நாராயணசுவாமி நாயுடு, இயற்கை விஞ்ஞானி
ஆகியோருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்.
* தமிழ்ப் பன்னிசையை வளர்க்கும் வகையில், மாவட்டத் தலைநகரங்களில் தமிழிசைப் பள்ளிகள்
அமைக்கப்படும்.

English summary
PMK founder Dr.Ramadoss today released election manifesto for assembly poll 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X