For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதமாற்றத்தை கைவிட்டு இந்தியாவின் வளர்ச்சியில் மோடி கவனம் செலுத்துவாரா?: ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மத மாற்றம் குறித்து ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா உள்ளிட்ட அமைப்புகளின் பேச்சும், செயல்களும் சகோதர உணர்வுடன் வாழும் மக்களிடையே சண்டை உணர்வை ஏற்படுத்திவிடுமோ? என்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்துத்துவா செயல்திட்டங்களை கைவிட்டு, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கவனம் செலுத்த வேண்டும்

PMK slams pro-Hindu outfits on reconversion issue

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை

"மத மாற்றம் குறித்து ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துக்கள் மிகவும் கவலையளிக்கின்றன. இவர்களின் பேச்சும், செயல்களும் சகோதர உணர்வுடன் வாழும் மக்களிடையே சண்டை உணர்வை ஏற்படுத்திவிடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

கொல்கத்தாவில் விசுவ இந்து பரிசத் அமைப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், "இந்தியா என்பது இந்துக்களின் தேசம். கடந்த காலங்களில் இழந்ததை இப்போது மீட்போம்.

கடந்த காலங்களில் மதமாற்றம் செய்யப்பட்டோரை கட்டாயமாக மறு மதமாற்றம் செய்வோம். அதன்பின் இந்துக்களை எவரும் மதமாற்றம் செய்யாமல் தடுக்க கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றுவோம்'' எனக் கூறியுள்ளார்.

சென்னை, கொச்சி ஆகிய நகரங்களில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் அமீத் ஷா, "தேசிய அளவில் கட்டாய மதமாற்றத்தை சட்டத்தைக் கொண்டு வர பாரதிய ஜனதாக் கட்சி தயாராக உள்ளது. இதற்கு மற்ற கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் பாகவத் பேசிய சில நிமிடங்களில் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களை கிறித்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மாற்றியிருக்கிறார்கள். அண்டை மாநிலமான கேரளத்தில் 30 கிறித்தவர்களை மத மாற்றம் செய்திருப்பதாகவும் விசுவ இந்து பரிசத் அமைப்பு அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்தியா முழுவதும் பெருமளவிலான பிற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்றவும் ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்புகள் திட்டமிட்டிருக்கின்றன.

இன்னொருபுறம் கிறித்தவர்கள் கிறித்துமஸ் பெருவிழாவை கொண்டாடுவதை தடுக்கும் வகையில், கிறித்துமஸ் பெருவிழாவன்று நடைபெறவிருக்கும் நல் ஆளுமை நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக பாலஸ்தீன நாட்டிற்கு உலக அரங்கில் காலம்காலமாக இந்தியா அளித்து வந்த ஆதரவை நிரந்தரமாக திரும்பப் பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

மத்திய அரசும், சங்க பரிவாரங்களும் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவை இந்து நாடாக்குவதற்கான தொடக்கக் கட்ட முயற்சிகளாகவேத் தோன்றுகின்றன. இவை இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையை சீர்குலைப்பதுடன், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தை கேலிக் கூத்தாக்கி விடும்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்காக இந்தியா கொடுத்த விலை என்ன? என்பதை அனைவரும் அறிவார்கள். இதையெல்லாம் அறிந்த பிறகும் மத மாற்றம் செய்வது, இந்தியாவை இந்து நாடாக்குவது போன்ற செயல்களில் சங்க பரிவாரங்கள் ஈடுபடுவதும், இவற்றை மத்திய ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் ஆபத்தானவை ஆகும்.

மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் வெற்றியை மக்கள் வாரி வழங்கியதன் நோக்கம் என்ன? என்பதை பிரதமர் நரேந்திர மோடியும், அவரை இயக்கும் அமைப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இந்தியா சந்தித்த பின்னடைவை போக்க வேண்டும்; ஏழைகள் படும் அவதியை போக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் காங்கிரசை வீழ்த்தி பாரதிய ஜனதாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்களே தவிர, இந்து ராஜ்ஜியத்தை அமைப்பதற்காக அல்ல.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவும், இந்திய பொருளாதாரமும் எத்தகைய சீரழிவை சந்தித்து வந்தனவோ, அவை இப்போதும் தொடர்கின்றன. இவற்றை சரி செய்யாமல் தங்களின் சொந்த செயல்திட்டத்தை நிறைவேற்ற முயல்வது நல்லதல்ல.

2014 மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில், "இந்தியாவில் பல்வேறு மதங்களிடையே நல்லிணக்கத்தையும், நம்பிக்கையையும் வளர்ப்பதற்காக பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஆலோசனை அமைப்பு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அதற்கு நேர் எதிரான செயல்கள் தான் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இந்து அமைப்புகள் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டாமா? என கேட்டால், இனி இப்படி நடக்காமல் தடுக்க கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வரலாம் என்று மத்திய அரசு கூறுகிறது. இதன்மூலம் தங்களின் இன்னொரு செயல்திட்டத்திற்கு உயிர் கொடுக்க பா.ஜ.க முயல்வது கண்டிக்கத்தக்கது.

கட்டாய மத மாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது சிறுபான்மையினருக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து இருக்கிறது. எனவே, மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் 153(ஏ) பிரிவைப் பயன்படுத்தி மதமாற்றங்களைத் தடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கிறித்துமஸ் கொண்டாட்டங்களைத் தடுப்பது உள்ளிட்ட இந்துத்துவா செயல்திட்டங்களை கைவிட்டு, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
PMK Party founder S Ramadoss asked the Centre to focus its resources in addressing issues affecting common people rather than 'furthering their own agenda'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X