For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்!- கவிஞர் முத்துலிங்கம்

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: ‘எம்.ஜி.ஆர். வழியைப் பின்பற்றி பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு சென்னையில் சிலை வைத்து சிறப்பித்தவர் முதல்வர் அம்மாதான். மத்திய அரசு தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்,' என்று திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் பேசினார்.

பசும்பொன் அறக்கட்டளை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி கருத்தரங்கம் சென்னை அபிபுல்லா சாலையிலுள்ள தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசவைக் கவிஞரும், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிஞர் முத்துலிங்கம் பேசியதாவது:

‘தேவர் ஒரு சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சாதி பேதம் பார்க்காத சமத்துவ ஞானியாக விளங்கிய அரசியல் ஞானி அவர்.

Poet Muthulingam urges Bharath Ratna for Thevar

தேவர் படித்தது ஆறாம் படிவம் வரைதான். ஆனால் ஆங்கிலத்திலும் தமிழிலும் அற்புதமாக பேசக்கூடிய ஆற்றல் பெற்றவராக விளங்கினார்.

காசி இந்து சர்வ கலாச்சாலையில் இந்து மதத்தத்துவத்தைப் பற்றி மூன்று மணிநேரம் ஆங்கில பேராசிரியர்களே வியந்து போகும்படி ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார்.

அதற்குத் தலைமை தாங்கிய இந்து சர்வ கலாச்சாலை துணைத் தலைவர் சர்.சி.பி ராமசாமி ஐயர் பேசும்போது, ‘உலக நாடுகளை ஆங்கிலம் அடக்கி ஆள்கிறது. அந்த ஆங்கிலத்தையே மூன்று மணிநேரம் எங்கள் சேது நாட்டுச் சிங்கம் முத்துராமலிங்கம் அடக்கி ஆண்டு விட்டது. இது சேது நாட்டுக்கு மட்டுமல்ல. தமிழ் நாட்டுக்கே பெருமை, இந்தியாவுக்கும் இந்தியர்களுக்குமே பெருமை' என்று பேசினார்.

தேவர் முதன்முதலில் மேடையேறியது 1933 ஆண்டு சாயல்குடியில் நடந்த விவேகானந்தர் வாசக சாலையில்தான். அங்கும் மூன்று மணி நேரம் பேசி எல்லோரையும் ஆச்சரியப்ட வைத்தார். அந்த விழாவில்தான் காமராசர் முதன் முதலில் தேவரைச் சந்திக்கிறார். தேவரும் அப்போதுதான் காமராசரைப் பார்க்கிறார்.

Poet Muthulingam urges Bharath Ratna for Thevar

இப்படிப்பட்ட பேச்சை இதுவரை கேட்டதில்லையென்று காமராசர் மற்றவர்களிடம் பாராட்டிப் பேசியதோடு, இப்படிப்பட்ட தேவர் காங்கிரஸ் கட்சிக்கு பேச்சாளராக இருந்தால் கட்சி வெற்றி பெறும் என்று தன் விருப்பத்தை தெரிவித்தாராம்.

1936 ல் நடந்த ஜில்லா போர்டு உறுப்பினர் தேர்தலில் முதுகுளத்தூர் பகுதியில் நின்று மிகப் பெரிய வெற்றியை பெற்றார் தேவர். அதுதான் அரசியலில் அவருக்கு முதல் நுழைவு. விருது நகர் நகராட்சியில் முதன் முதல் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு காமராசரை நிறுத்தி வெற்றி பெற வைத்ததும் தேவர்தான்.

1937 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் காமராசர் ஜெயித்ததற்கு தேவர்தான் காரணம். அதுமட்டுமல்ல நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்களால் காமராசருக்கு ஏற்படவிருந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தியதும் தேவருடைய பேச்சுதான். தென் மாவட்டங்களில் நீதிக் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததற்கும் தேவர்தான் காரணம்.

இதை ராஜாஜியே சொல்லியிருக்கிறார். 'தென் புலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு என்னைப் 'பார்த்தனெ'ன்று (அர்ஜுனன்) சொல்கிறார்கள். நான் 'பார்த்தன்' என்றால் எனக்கு சாரதியாக இருந்து வெற்றி தேடித் தந்தது இருபத்தொன்பது வயதே ஆன பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்கிற வாலிபர்தான்' என்று மனம் திறந்து பாராட்டினார் ராஜாஜி.

அந்த நேரத்தில் நீதிக் கட்சியை சேர்ந்த ராமநாதபுரம் அரசரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் தேவர். இது அந்தக் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அன்றைக்கு ராமநாதபுரம் தொகுதியென்பது ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் தாலுகா அடங்கிய பெரிய தொகுதி.

பதவியில் இருப்பவன் தாமரை இலைத் தண்ணீரைப் போல ஒட்டியும் ஒட்டாமலும் பட்டும் படாமலும் இருக்க வேண்டும் என்றார் தேவர். அப்படி இருந்தாலும் கூட இருப்பவர்கள் இருக்க விடமாட்டார்கள் என்பதால்தான் தன்னைத் தேடி வந்த மாநில அமைச்சர் பதவி, மத்திய அமைச்சர் பதவியை வேண்டாம் என்று மறுத்தார்.

உங்கள் பார்வேர்டு கட்சியை காங்கிரஸில் இணைத்துவிட்டு மத்திய அமச்சர் பதவியில் உங்களுக்கு எந்த இலாகா வேண்டுமோ அந்த இலாகவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நேரு கேட்டபோது, ‘நான் நேதாஜியை தலைவராக ஏற்றுக் கொண்டவன். உங்களைத் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது,' என்று நேருவிடம் பகிரங்கமாகவும். வெளிப்படையாகவும் சொன்னவர் தேவர்.

இதனால் வங்க மக்கள் தென்னாட்டு போஸ் என்று அடைமொழி கொடுத்து அழைத்துச் சிறப்பித்தார்கள். தேவரைப் போல துணிச்சல் மிகுந்த தலைவர்கள் அன்றைக்கு எவரும் இல்லை.

அரசியல் மேடையில் ஆன்மீகம் பேசமாட்டார். ஆன்மீக மேடையில் அரசியல் பேசமாட்டார். இன்றைக்கு திருமண மேடையில் கூட அரசியல் பேசி மேடையை அலங்கோலப் படுத்துபவர்கள்தான் அதிகம்.

தேவரது அரசியல் பேச்சில் அனல் பறக்கும். ஆன்மீக பேச்சில் ஞான ஊற்றுச் சுரக்கும். 1938ம் ஆண்டு மதுரையில் வைத்தியநாத ஐயர் தலைமையில் அரிசனங்கள் ஆலயப் பிரவேசம் செய்ததற்கு முத்துராமலிங்கத் தேவர்தான் பெருங்காரணம். இதை மூடி மறைத்துப் பலர் பேசுகிறார்கள்.

வாய்மை, தூய்மை, உண்மை, மெய்ம்மை, நேர்மை, துணிவுடைமை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் தேவர். எல்லாருக்கும் நெருக்கமான தலைவர்கள் இருக்கலாம். இணக்கமான தலைவர்கள் இருக்கலாம். ஆனால் தேவரைப் போல ஒழுக்கமான தலைவர்கள் எவருமே கிடையாது.

காமராசர், எம்.ஜி.,ஆர். ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது போல், தேவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும். அப்படிச் சிறப்பித்தால் அது தேவருக்கு மட்டும் பெருமையாக இருக்காது. மத்திய அரசுக்கும் பெருமையாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். அரசியலில் இருந்தபோதுதான் தேவருடைய பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடினார். தேவருடைய படத்தை சட்டமன்றத்திலே திறந்து வைத்து தேவருக்குப் பெருமை சேர்ந்ததும் எம்.ஜி.ஆர்.தான். தேவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பாடப் புத்தகத்தில் இடம்பெறச்செய்து மாணாக்கச் செல்வங்களும் அவருடைய பெருமையை அறியும்படி செய்தவரும் எம்.ஜி.,ஆர்.தான்.

எம்.ஜி.ஆர் வழியில் சென்னை நந்தனம் பகுதியில் தேவருக்குச் சிலை வைத்து அந்தச் சாலைக்கே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை என்று பெயரிட்டுச் சிறப்பித்தவர் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாதான்.

அதுமட்டுமல்ல பசும்பொன் கிராமத்தில் அவர் நினைவிடத்தில் அமைந்துள்ள மார்பளவுச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்துச் சிறப்பித்தவரும் அம்மாதான். தேவரிடம் இருந்த துணிச்சல் இன்று அம்மா ஒருவரிடம் மட்டுமே இருக்கிறது. தேவர் இருந்திருந்தால் அம்மாவை வாழ்த்தியிருப்பார்," என்று பேசினார் முத்துலிங்கம்.

நிகழ்ச்சியில் கவிஞர் ஜீவபாரதி, மேடைமணி நடராசன், கவிஞர் இதயகீதம் ராமனுஜம், ராஜராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

English summary
Poet Muthulingam requested the Union Govt to honour late leader Muthuramalinga Thevar with Bharath Ratna.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X