For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை

கருணாநிதிக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "காலத்தை வென்று நிற்பார் கலைஞர்" என்று கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மீது அளவு கடந்த பாசமும், மரியாதையும், காதலும் வைத்திருப்பவர் வைரமுத்து. கருணாநிதியின் தமிழை வைரமுத்து நேசித்ததைவிட சுவாசித்ததே அதிகம் என்று சொல்லலாம். பல காவியம் படைத்த கருணாநிதிக்காக தன் கைப்பட நிறைய பாடல்களையும், கவிதைகளையும் ஆசை தீர எழுதியவர் வைரமுத்து.

கடந்த மார்ச் 4-ம் தேதி அன்றுகூட, உடல்நலம் குன்றியிருந்த கருணாநிதியை நேரில் சந்தித்த வைரமுத்து, "பிடர்கொண்ட சிங்கமே பேசு" என்ற தலைப்பில் கவிதையை எழுதி... அதை கருணாநிதியிடமே படித்து காட்ட.. வைரமுத்து படிக்க படிக்க.. கருணாநிதியின் முகம் மலர்ந்து சென்றது. தான் நேசித்த கருணாநிதியின் மரண செய்தியை கேட்டு கண்ணீர் மல்க இரங்கல் குறிப்பை பதிவிட்டு இருக்கிறார் வைரமுத்து.

Poet Vairamuthu condoles death of DMK President Karunanidhi

அந்த இரங்கல் குறிப்பில் உள்ளதாவது:

கலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கமுடியுமென்றால் அதன்பேர் கலைஞர். ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது. இந்திய தேசப்படம் யோசித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவை ஆளும் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆற்றலாக வளர்ந்த அதிசயம் அவர். மெய்யான திராவிட இயக்கக் கொள்கைகளை 80 ஆண்டுகள் ஏந்தி நடந்தவர்.

அவர் கல்லூரிக் கல்வி காணவில்லை; ஆனால் பல்கலைக்கழகங்களைப் படைத்தளித்தார். மின்சாரம் இல்லாத ஊரில் பிறந்தார்; தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பரிசளித்தார். இசைத்தமிழ் வளர்க்கும் குடும்பத்தில் பிறந்தார்; ஆனால் முத்தமிழுக்கும் பங்களிப்புச் செய்தார். பேராசிரியரையும் நாவலரையும் அழைத்துக் கூட்டம் போடுவதற்கு வீட்டு வெள்ளிக் கிண்ணத்தை அடமானம் வைத்தார்; ஆனால் ஆண்டாண்டு காலமாக அடமானம் கிடந்த தமிழர்களின் மானத்தை மீட்டெடுத்தார். வீழ்த்தப்பட்டவர்களுக்காகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் இவர் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை இந்தியாவின் எல்லாத் திசைகளுக்கும் நீட்டித்தார்.

எழுத்தாளர் - கவிஞர் - நாடக ஆசிரியர் - பத்திரிகையாளர் - கட்சித் தலைவர் - ஆட்சித் தலைவர் - உறங்காத படைப்பாளி - ஓயாத போராளி என்று எத்துறை தொட்டாலும் அத்துறையில் வித்தகம் காட்டிய வித்தகர் இந்திய அளவில் இவர் மட்டும்தான். கட்சித் தலைவன் போய்விட்டான் என்று தொண்டர்கள் கதறுகிறார்கள். எங்கள் கவியரங்கத் தலைவன் போய்விட்டான் என்று கவிஞர்கள் கதறுகிறோம்.

பெரியார் ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தார். காலம் அண்ணாவுக்கு ஆயுளை மறுத்திருந்தது. ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே பெற்று இத்தனை ஆண்டுகள் கலைஞர் இயங்கியதால்தான் பெரியார், அண்ணா என்ற தத்துவங்கள் கணிப்பொறித் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன. இந்த ஒரு பெரும்பணிக்காகவே காலம் கலைஞரை நினைவு கூரும்.

தொல்காப்பியப் பூங்கா - குறளோவியம் - சங்கத்தமிழ் - சிலப்பதிகார நாடகம் - ரோமபுரிப் பாண்டியன் - தென்பாண்டிச் சிங்கம் - திருக்குறள் உரை போன்ற படைப்புகளால் கலைஞர் காலத்தை வென்று நிற்பார்.

மகாகவி தாகூர் மரித்த நாளில் கலைஞர் மறைந்திருக்கிறார். ஓ! கலைஞரின் மரணம்கூட கம்பீரமானது. மரணத்தால் கலைஞர் மரிப்பதில்லை. அவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் அவர் புரிந்த ஒவ்வொரு செயலும் மரணத்தை முறியடிக்கும் ஏற்பாடுதான். என் ஒவ்வோர் எழுத்தையும் வாசித்து நேசித்து உரையாடுவார். இதோ இந்த இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே என்று அழுகிறேன். அவர் புகழுடம்பு வாழும் திசை நோக்கித் தொழுகிறேன். இவ்வாறு அந்த இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Poet Vairamuthu condoles death of DMK President Karunanidhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X