For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக். 17க்குள் பிடிக்கணும்... ஹைகோர்ட் பெஞ்ச் கடும் எச்சரிக்கை... சிக்குவாரா ராமஜெயம் கொலையாளி?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: ராமஜெயம் கொலை வழக்கில் கொலையாளிகளை கண்டுபிடிக்க அக்டோபர் 17ம் தேதி இறுதிக் கெடு என்ற எச்சரிக்கையுடன் நீதிபதி தேவதாஸ் 2 மாத கால அவகாசம் அளித்துள்ளார்.

நீதிபதி ஓய்வு, விசாரணை அதிகாரி ஓய்வு, அரசு வழக்கறிஞர் ராஜினாமா என அடுத்தடுத்து ஏற்படும் மாற்றங்களால் சிபிசிஐடி போலீசும் அடுத்தடுத்து அவகாசம் கேட்டு தப்பித்துக் கொள்கிறது.

கன்னித்தீவு கதையாக நீளும் ராமஜெயம் கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக கொலையாளிகளை பிடிக்க முடியாத சிபிசிஐடி போலீஸ் 2 மாதத்தில் கொலையாளிகளை கண்டுபிடித்து விடுமா என்ற கேள்வி திருச்சிவாசிகளிடையே எழுந்துள்ளது.

ராமஜெயம் படுகொலை

ராமஜெயம் படுகொலை

முன்னாள் திமுக அமைச்சரும் திருச்சி எம்.எல்.ஏவுமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு, மார்ச் 29ஆம் தேதி திருச்சி புறநகர் பகுதியில் முகம் அடையாளம் தெரியாத அளவுக்குப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி விசாரணை

ராமஜெயம் கொலை செய்யப்பட்டு நான்காண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சந்தேகப்படுவோர் என்ற அடிப்படையில், சிபிசிஐடி பலரிடம் விசாரணையை நடத்தியது. இருப்பினும் கொலை வழக்கில் சிறு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

இதையடுத்து, கே.என்.ராமஜெயத்தின் மனைவி லதா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சிபிசிஐடி விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

நீதிபதி நாகமுத்து

நீதிபதி நாகமுத்து

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கிய நிலையில், ‘குற்றவாளிகளை கைது செய்யாததால், ஏன் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கூடாது என்று நீதிபதி நாகமுத்து கேள்வியெழுப்பியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், விசாரணை என்ற பெயரில் நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன என்று கண்டித்தார்.

கண்டித்த நீதிபதி

கண்டித்த நீதிபதி

ஒன்று எங்களால் முடியவில்லை என்று கூறி, வேறு விசாரணை அமைப்புக்கு வழிவிடுங்கள். இல்லையெனில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க உறுதியான ஆதாரம் இருந்தால் கூறுங்கள். அதை விடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. சாத்தியக் கூறுகள் உள்ளது என்று சொன்னதையே சொல்லாதீர்கள் என்று கடந்த ஆண்டு ஜுன் 13ஆம் தேதி வழக்கு விசாரணையின்போது, நீதிபதி நாகமுத்து கண்டிப்புடன் தெரிவித்தார்.

ரகசிய அறிக்கைகள்

ரகசிய அறிக்கைகள்

ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை தொடர்பாக இதுவரை 7 ரகசிய அறிக்கைகளை உயர் நீதிமன்ற கிளையில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூன் 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

கடும் எச்சரிக்கை

கடும் எச்சரிக்கை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், சி.பி.சி.ஐ.டி போலீஸார் பலமுறை அவகாசம் வாங்கிவிட்டனர். மேலும் 6 வாரங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் கண்டுபிடிக்கவில்லை என்றால் சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டியிருக்கும் என எச்சரித்தார். ஆனால், அந்த எச்சரிக்கைக்குப் பலன் இல்லாமல் போய்விட்டது.

8வது ரகசிய அறிக்கை

8வது ரகசிய அறிக்கை

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி தேவதாஸ் முன் முன்பு கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் கந்தசாமி, சிபிசிஐடி போலீஸாரின் 8வது ரகசிய அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் நீதிபதியிடம் வழங்கினார்.

அவகாசம் கேட்ட சிபிசிஐடி

அவகாசம் கேட்ட சிபிசிஐடி

அந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி, தேவதாஸ், ராமஜெயம் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் கேட்டுள்ளனர் என்றார்.

நம்பிக்கை கிடையாது

நம்பிக்கை கிடையாது

இதற்கு மனுதாரர் வழக்கறிஞர் எஸ்.ரவி ஆட்சேபம் தெரிவித்தார். சிபிசிஐடி போலீசார் மீதான நம்பிக்கை போய்விட்டது. இதனால் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.

6வது நீதிபதி விசாரணை

6வது நீதிபதி விசாரணை

ராமஜெயம் தரப்பில், இந்த வழக்கை இப்போது 6வது நீதிபதி விசாரிக்கிறார். இப்படி நீதிபதிகள் மாற்றத்தால் அதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சி.பி.சி.ஐ.டி தரப்பு 8வது முறையாக அவகாசம் வாங்கியுள்ளார்கள்.

இழுத்தடிக்கும் சிபிசிஐடி

இழுத்தடிக்கும் சிபிசிஐடி

இந்த வழக்கை முடிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. சீல் இடப்பட்ட கவரில் 15 பக்கம் அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டு அவகாசம் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்த வழக்கு விசாரணையில் ராமஜெயம் குடும்பத்தார் ஒத்துழைப்புத் தர மறுக்கிறார்கள் என்று போலீஸ் தரப்பு கூறுவது உண்மையல்ல.

நீதிமன்ற மேற்பார்வை

நீதிமன்ற மேற்பார்வை

போலீசாருக்கு எங்கள் தரப்பில் அனைத்து விவரங்களையும் கொடுத்துவிட்டோம். ஆனால், நெருங்கிய வட்டாரங்களைத் தாண்டி விசாரணை போகவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் அல்லது நீதிமன்ற மேற்பார்வையில் நடத்தினால் உண்மை தெரியவரும் என்கின்றனர் லதா தரப்பினர்.

என்ன தேவை

என்ன தேவை

இந்த வழக்கில் கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கை முடிக்க என்ன தேவை எனச் சொல்லுங்கள். இந்தக் கொலை நடந்து நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. அவரது மனைவி உங்கள் விசாரணையில் நம்பிக்கையில்லை என நீதிமன்றத்தை நாடி, ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது.

குற்றவாளி யார்

குற்றவாளி யார்

ஆனால், நீங்கள் ஒவ்வொரு முறையும் ராமஜெயம் உயிரோடு இருந்தபோது அதைச்செய்தார், இதைச்செய்தார் என அறிக்கை தாக்கல் செய்கிறீர்களே தவிர, அவர் கொலை செய்யப்பட்டதற்கு என்ன காரணம், குற்றவாளி யார் என்பது குறித்து எதையும் சொல்லவில்லை.

சரியான பாதையா?

சரியான பாதையா?

ராமஜெயம் உயிரோடு இருந்தபோது, என்ன செய்து இருந்தால் என்ன? நீங்கள் தாக்கல் செய்த அறிக்கைகள்படி பார்த்தாலே இந்த வழக்கு சரியான பாதையில் போகவில்லையோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இதுதான் கடைசி வாய்ப்பு என கடந்த முறையே எச்சரித்தேன். ஆனால், நீங்கள் மீண்டும் அவகாசம் கேட்டு நிற்கிறீர்கள். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா, முடியாதா? அக்டோபர் மாதம் 17ம் தேதிவரைதான் உங்களுக்கு அவகாசம். ராமஜெயம் கொலை எப்படி நடந்தது, இந்தக் கொலை விசாரணை எப்படிப் போனது என்ற விவரங்கள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டார்.

டிஎஸ்பி ஓய்வு

டிஎஸ்பி ஓய்வு

இதனிடையே டி.எஸ்.பி மலைச்சாமிக்கு ராமஜெயம் கொலைவழக்கில் உள்ள ஆவணங்கள், விசாரணைக்கு உட்பட்டவர்கள் என அனைத்தும் முழுமையாகத் தெரியும். கடந்த 4 வருடங்களாக விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி மலைச்சாமி கடந்த 30ம் தேதியோடு ஓய்வு பெற்றுவிட்டார்.

அரசு வழக்கறிஞர் ராஜினாமா

அரசு வழக்கறிஞர் ராஜினாமா

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்த பலர், தங்கள் பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்துவிட்டனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்த கே.செல்லப்பாண்டியனுக்குப் பதிலாக, அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த பி.புகழேந்தி அந்த இடத்துக்கு, கடந்த 2ம் தேதி முதல் பொறுப்பேற்றுக்கொண்டார்.

காத்திருப்போம்

காத்திருப்போம்

விசாரணை அதிகாரி ஓய்வு ஒருபுறம் இருக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டதால் இப்போது, புதிதாக வழக்கில் மீண்டும் வாதாடும் நிலைவரும். இதனால், ராமஜெயம் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கில் நீதிமன்ற கொடுத்துள்ள கெடு தேதியான அக்டோபர் 17க்குள் கொலையாளி சிக்குவானா? அல்லது மீண்டும் சீலிடப்பட்ட கவரை சிபிசிஐடி தாக்கல் செய்யுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
CBCID police have got more time till October 17 to arrest the Ramajayam killer
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X