For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் கண்ணீருக்கு பதில் என்ன?.. 7 பேர் விடுதலையை எதிர்க்கும் பெண் போலீஸ் அதிகாரி

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிர் தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேல் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தனு, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் தண்டனையை அனுபவித்துவிட்டனர்.

இந்நிலையில் இவர்களை விடுவிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அமைச்சரவை கூடி 7 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை ஆளுநருக்கு அளித்துள்ளது.

 பணி ஓய்வு

பணி ஓய்வு

ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு பிரச்சாரத்துக்கு வந்த போது குண்டுவெடித்ததில் போலீஸ் அதிகாரிகளும் பலியாகினர். இந்த சம்பவத்தின் போது ராஜீவ் காந்தி அருகே பாதுகாப்பு அதிகாரியாக காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. அனுசுயா டெய்சி படுகாயம் அடைந்து உயிர் தப்பினார். அவர் விழுப்புரம் மாவட்டத்தின் கூடுதல் எஸ்பியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

கருப்பு நாள்

கருப்பு நாள்

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று அனுசுயா டெய்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தினத்தந்தி நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் 1991-ம் ஆண்டு மே 21-ஆம் தேதி என் வாழ்நாளின் மிகப்பெரிய கருப்பு நாள் ஆகும்.

பெண்கள் கூட்டம்

பெண்கள் கூட்டம்

அன்றைய தினம், முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தார். அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து, குறிப்பாக பெண்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் என்னை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்திருந்தனர். என் தலைமையில் 10 பெண் போலீஸார் ராஜீவ்காந்தியை பெண்கள் கூட்டம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டு இருந்தோம். நான் ராஜீவ்காந்திக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தேன்.

உன்னிப்பாக கேட்ட ராஜீவ்

உன்னிப்பாக கேட்ட ராஜீவ்

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒருகட்டத்தில் நான் தடுமாறி விழப்போனேன். அப்போது ராஜீவ்காந்தி என்னை பார்த்து, ‘பீ ரிலாக்ஸ்' என்று கூறினார். நான் புன்னகைத்தேன். அப்போது ஒரு சிறுமி இந்தியில் ஏதோ அவரிடம் பேச, அதை ராஜீவ்காந்தி உன்னிப்பாக கேட்டுக்கொண்டு இருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

அந்தசமயம் திடீரென்று ஒரு பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த நொடி என் உடம்பில் எதேதோ துளைத்துக்கொண்டு போனது. அதேவேகத்தில் நான் தூக்கி எறியப்பட்டேன். என் உடலின் இடதுபுறம் முழுவதும் சிதைந்தன. என் கையில் 3 விரல்கள் காணவில்லை. முடிகள் அனைத்துமே கருகிவிட்டன. வெடிகுண்டு வெடித்ததில் அதன் ரவைகள் என் உடலை துளைத்து சிதைத்திருந்தன. ஆனாலும் என் உயிர் என்னை விட்டு பிரியாமல் இருந்தது. அப்போது என்னை சிலர் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். மயக்கம் அடைந்த நான், கண்விழித்தபோது மருத்துவமனையில் இருந்தேன்.

கரித் துண்டாய் மாறினேன்

கரித் துண்டாய் மாறினேன்

அவ்வப்போது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு என் உடலில் இருந்த குண்டின் ரவைகள் அகற்றப்பட்டன. என் மார்பு பகுதி முழுவதும் கரித்துண்டாய் மாறிப்போனதை நினைத்து நினைத்து அழுதேன்.

காவல் பணி

காவல் பணி

சுமார் 3 மாதம் வரை சிகிச்சையில் இருந்தேன். சிகிச்சைக்கு பிறகும் வலி என்னை பாடாய் படுத்தியது. இருந்தாலும் நான் நேசித்த காவல் பணி என்னை விட்டு போகக்கூடாது என்பதால், மீண்டும் காவல் பணிக்கு உடனடியாக திரும்பினேன். விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரணை பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றேன்.

நியாயமான காரணம் இருக்கா

நியாயமான காரணம் இருக்கா

தற்போது நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு துடிப்பதையும், அரசியல் கட்சிகள் போராடுவதையும் பார்க்கும்போது என் நெஞ்சு கொதிக்கிறது. இவர்களை விடுதலை செய்ய நியாயமான காரணத்தை யாராவது சொல்ல முடியுமா? ‘இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டார்கள், பாவம்', என்று பேசுபவர்கள், என்னை போன்றோர் நடைபிணங்களாய் வாழ்வதை நினைத்து பார்க்காதது ஏன்?

நீதி ஆகாது

நீதி ஆகாது

இவர்களை விடுவிக்கட்டும், ஆனால் இவர்களால் செத்துமடிந்த அத்தனை பேருக்கும் உயிர் கொடுத்து எழுப்பிட முடியுமா? என் கை திரும்ப எனக்கு கிடைக்குமா? இந்த நாட்டில் பிறந்ததற்கு, நேர்மையான காவல் பணி செய்ததற்கு இதுபோன்ற வருத்தம் நிறைந்த பரிசுகள் கிடைக்க வேண்டுமா? ஒரு தேச தலைவரை, அப்பாவி மக்களை குண்டு வைத்து கொன்ற பாவிகளை விடுதலை செய்து நடமாட வைக்க இந்த அரசு நினைக்கிறதா? இதற்கு மக்கள் துணைபோகிறார்களா? குற்றவாளிகளுக்கு பரிதாபமும், சாதகமான தீர்ப்பும் கிடைத்துவிட்டால் அது நீதி ஆகாது.

கண்ணீருக்கு பதில்

கண்ணீருக்கு பதில்

தற்போது அரசியலுக்காக யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம். ஆனால் காயத்தின் சுவட்டை இன்னமும் சுமந்து கொண்டிருக்கும் என் போன்றோரின் கண்ணீருக்கு யாருமே பதில் சொல்லிவிட முடியாது. குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும். செய்த தவறை நினைத்து நினைத்து சம்பந்தப்பட்டோர் வருந்தவேண்டும்.

விடுதலை கூடாது

விடுதலை கூடாது

இதற்கு முன்பு நான் அரசு பணியில் இருந்தேன். அதனால் என் கடமைக்கு கட்டுப்பட்டு நான் எதுவும் பேசவில்லை. இப்போது நான் பணியில் இல்லை. எனவே என் வேதனையை தெரிவிக்கிறேன். நளினி உள்பட அந்த 7 குற்றவாளிகள் வெளியே வரக்கூடாது. அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்றார் அனுசுயா டெய்ஸி.

English summary
Police officer who escapes from Rajiv Gandhi assasination objects to release 7 tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X