For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் தடியடியில் காயம் பட்ட வைகோ: அரசியல் தலைவர்கள் கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் மதுக் கடைக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை நடத்திய போராட்டத்தின் போது போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரிய பொதுமக்களின் போராட்டத்தில், காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு தடியடி நடத்தியுள்ளது.அதோடு, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலவரபூமியாக மாற்றியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அரசுக்கு எச்சரிக்கை

அரசுக்கு எச்சரிக்கை

அரசியல் கட்சிகள் அஹிம்சை முறையில் நடத்தும் போராட்டத்தைக்கூட வன்முறைக் களமாக மாற்றும் போக்கு தமிழகத்தில் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை எச்சரிக்கை செய்கிறேன். தமிழ்நாட்டில் மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தத் தேவையான நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் அறிக்கை

ஜி.கே.வாசன் அறிக்கை

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என நியாயமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் வைகோ. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. கடைகளை உடனடியாக மூடி அங்கிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் மீது அதிகாரத்தைக் காட்டி அடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கூடிய நிலையை தமிழக அரசு எடுக்க வேண்டும். குறிப்பாக, கல்வி நிலையங்கள், ஆலயங்கள், நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

வேல்முருகன் வலியுறுத்தல்

வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது அறிக்கையில், கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர்புகை குண்டுகளை வீசியிருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டிக்கிறது. இந்த அசம்பாவிதங்களைக் காவல்துறை நினைத்திருந்தால் நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். படிப்படியாக முழு மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தியாக வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படும் போராட்டங்களை அமைதியான வழியில்தான் காவல்துறை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முத்தரசன் கண்டனம்

முத்தரசன் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கலிங்கப்பட்டியில் மதுக் கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. மதுக் கடையை மூட வலியுறுத்தி வைகோ தலைமையில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் போலீஸார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். போலீஸாரின் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை

ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலிங்கப்பட்டி ஊர் மக்கள் அனைவரும் ஏகோபித்த குரலில் அந்தக் கிராமத்தில் உள்ள மதுக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வரும்போது, அந்தக் கடையை மூடியிருக்க வேண்டும். மாறாக, மறியல் போராட்டம் நடத்துவோர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி தாக்கியதோடு, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியுள்ளனர். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடியவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினரின் அத்துமீறிய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மணியரசன் கண்டனம்

மணியரசன் கண்டனம்

காவல்துறையின் வன்முறைச் செயலை, தமிழ்த் தேசியப்பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரன் கண்டித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் உணர்வை மதிக்கும் ஆட்சியாக செயலிலிதா ஆட்சி இருந்திருக்குமேயானால் கலிங்கப்பட்டி மதுக்கடையை வீம்புக்காக திறந்திருக்காது. சில நாட்கள் அந்தக் கடை மூடப்பட்டிருந்தால் அதனால் செயலலிதா அரசுக்கு எந்த அவமானமும் ஏற்பட்டிருக்காது. மதிப்புதான் ஏற்பட்டிருக்கும். மாறாக, இன்று அங்கு மதுகடையை மூட வலியுறுத்திப் போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவிவிட்ட செயல், "கேடுவரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே" என்ற பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது. இப்பொழுது கலிங்கப்பட்டியில் வைகோ ,திருமாவளவன் போன்ற தலைவர்களையும், மக்களையும்கைது செய்ய முனைவது சிக்கலை மேலும் தீவிரமாக்கும்.

சமூகத்தீங்கு

சமூகத்தீங்கு

தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா அவர்கள் தம்முடைய அடுத்த கட்ட நடவடிக்களை நிதானமாகத் திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டும் ஒழுக்கம்,அறம்,வாழ்க்கைப் பாதுகாப்பு ஆகியவற்றைச் சீர்குலைக்கும் மதுக்கடைகளைத் திறந்து வணிகம் செய்து ஆட்சி நடத்துவது சமூகத் தீங்கு என்பதை உணர்ந்தும் உடனடியாகத் தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

English summary
Various polititcal leaders have condemned the attack on MDMK cadres in Kalingapatti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X