For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருத்துக் கணிப்புகள்– கண்டதும், கேட்டதும்!

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர்.மணி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல்கள் பற்றிய கருத்துக் கணிப்புகள் வர ஆரம்பித்து விட்டன. ஏப்ரல் 1 ம் தேதி ‘'டைம்ஸ் நவ்'' தொலைக் காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பின் படி தமிழ் நாட்டில் அஇஅதிமுக வுக்கு 130 தொகுதிகளும், திமுக வுக்கு 70 தொகுதிகளும் மற்றவர்களுக்கு 34 தொகுதிகளும் என்று வந்திருக்கிறது.

தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கி விட்டது. தொலைக் காட்சிகளில் மட்டுமல்ல, தெரு முனைகளிலும் கூட ரோமங்களைப் பிளக்கும் விவாதங்களில் கட்சிப் பிரமுகர்களும், பத்திரிகையாளர்களும், அறிவு ஜீவிகளும், பொது மக்களும் ஈடுபடத் துவங்கி விட்டனர். இந்தக் கருத்துக் கணிப்புகள் சரியா, தவறா, ஓரளவுக்கு சரியா என்றெல்லாம் நாடி, நரம்புகள் புடைக்க விவாதங்கள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.

மே மாதம் 16 ம் தேதி தான் தமிழ் நாட்டில் வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மேல் இருக்கிறது வாக்குப் பதிவுக்கு ... தேர்தல் களம் இன்னமும் சூடு பிடிக்கத் துவங்கவே இல்லை. அதற்குள் முதல் கருத்துக் கணிப்பு வந்திருக்கிறது. வழக்கமாக இது போன்று நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளில் ‘'சாம்பிள் சைஸ்'' எனப்படும் கருத்துக் கேட்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கொடுக்கப்படும்.

Polls and Opinionated polls

மேலும், இவ்வாறு கருத்துக் கேட்கப் பட்டவர்களின் பின்புலமும் தெரிவிக்கப்படும். அதாவது அவர்கள் நகர்ப்புறங்களை சார்ந்தவர்களா அல்லது கிராமப் புறங்களை சார்ந்தவர்களா, மேலும் அவர்களது பாலினம், கல்வித் தகுதி ஆகியவையும் தெளிவாக அறிவிக்கப்படும். இது போன்ற எதுவும் தற்போதய கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஏப்ரல் 4 ம் தேதி ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முதல் கட்டம் துவங்குகிறது. அஸ்ஸாமிலும், மேற்கு வங்கத்திலும் வாக்குப் பதிவு துவங்குகிறது. தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகளின் படி 4 ம் தேதி முதல் 16 ம் தேதி மாலை வரையில் கருத்துக் கணிப்புகள் நடத்த முடியாது. ஆகவே இந்தக் கருத்து கணிப்பு ஏப்ரல் 1 ம் தேதியே வெளியிடப்பட்டிருக்கிறது.

‘'சாம்பிள் சைஸ்'' விஷயத்துக்கு வருவோம். இதுதான் எந்த கணிப்புகளுக்கும், தேர்தல் கணிப்புகளாக இருக்கட்டும் அல்லது வேறெந்த கணிப்புகளாக இருக்கட்டும் அடி நாதமாக இருக்கின்றது. எவ்வளவு பேரிடம் நாம் கருத்துகளைக் கேட்க வேண்டும். எவ்வளவு பேரிடம் நாம் கருத்துகளைக் கேட்டால் அது துல்லியமானதாக இருக்கும் ... அதாவது துல்லியமான முடிவை கொடுக்கும்? ‘'234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கருத்துக் கணிப்புகள் நடத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் ஒரு பகுதியினரை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பல தரப்பட்ட கருத்துக்களையும் பிரதிநிதித்துவபடுத்துபவர்களாக இருக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் ரேண்டம் சர்வே ... ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.

அந்த ஒரு சோறு என்பது தரமான சோறா அதாவது இந்த விஷயத்தை பொறுத்த வரையில் பல தரப்பட்ட கருத்துக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துக் கூடிய சோறா என்பதுதான் முக்கியமானது'' என்று கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுனரும், புள்ளியியல் மற்றும் கருத்துக் கணிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடும், ஆழமான அறிவும் மிக்கவரான டாக்டர் வைஷ்ணவி சங்கர்.

நேஷனல் சாம்பிள் சர்வே (என்எஸ்எஸ்) என்ற அகில இந்திய அமைப்பு எந்தவோர் விஷயத்துக்கும் - கல்வி, மருத்துவம், தொழில்கள் - போன்ற எந்தவோர் விஷயத்துக்குமான கொள்கை வகுப்புக்குத் தேவையான கருத்துருவாக்கங்களை உருவாக்கும் போதும் சாதாரணமாக 30 பேரிடம் தான் கருத்துக்களை கேட்கின்றது. 30 பேரிடம் கருத்துக்களை கேட்பது என்பதே அதிகமான சாம்பிள் என்ற விஞ்ஞான கருத்துருதான் இதற்கு அடிப்படை. ‘'எண்ணிக்கை முக்கியமில்லை. அது முப்பதாகவும் இருக்கலாம். சில ஆயிரக் கணக்கிலும் இருக்கலாம். ஆனால் அது என்ன மாதிரியான சாம்பிள் என்பதுதான் முக்கியமானது'' என்று கூறுகிறார் டாக்டர் வைஷ்ணவி.

பல ஜாதிகள், மதங்கள், இனங்கள், வித வித மான பிரச்சனைகளைக் கொண்ட தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதென்பது மிக, மிக கடினமான காரியம்தான். அதுவும், முக்கிய இரண்டு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை இன்னமும் வெளியிடவில்லை. வேட்பாளர் பட்டியல்களை வெளியிடவில்லை. மேலும் தங்களது கருத்துக்களை அஞ்சாமல், எந்தளவுக்கு மக்கள் வெளியில் சொல்லுகிறார்கள் என்பதும் இதில் மிகவும் முக்கியமானது.

இன்றைய தேதியில் பலரும் தாங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிக்குப் போகும் போது யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள். வாக்குச் சாவடிக்குள் போய் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

தேர்தல் கருத்துக் கணிப்புகள் இந்தியாவில் பிரபலமானது 1989 நவம்பர் மக்களைவைத் தேர்தலின் போதுதான். 1984 ல் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் பிரதமரானார் ராஜீவ் காந்தி. அந்தாண்டு தேர்தலில் காங்கிரசுக்கு 400 க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்தது. 1989 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போனது. காங்கிரசுக்கு 195 இடங்கள் கிடைத்தது. ஆனால் ஆட்சியில் அமர முடியவில்லை. 140 இடங்களை வென்ற ஜனதா தள த்தின் விபி சிங், பாஜக மற்றும் இடது சாரிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த தால் பிரதமரானார். ராஜீவ் காந்தி எதிர்கட்சித் தலைவரானார்.

அப்போது காங்கிரஸ் கட்சி 195 இடங்களை வெல்லும் என்று துல்லியமாக கணித்துச் சொன்னது என்டிடிவி. அப்போது அவர்கள் தூர்தர்ஷனுக்காக நடத்திய தேர்தல் கணிப்பில் தான் இந்த கணிப்பு வந்தது. என்டிடிவி யின் தலைவர் பிரணாய் ராய் இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தான் மிகவும் புகழ் பெற்றவரானார். ஆனால் அதன் பிறகு நடைபெற்ற பல தேர்தல்களில் என்டிடிவியின் கருத்துக் கணிப்புகள் தவறாக முடிந்திருக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தல்களை பொறுத்த வரையில் என்டிடிவி மட்டுமல்லாது வேறு சிலரது கருத்துக் கணிப்புகளும் 1996, 1998 மற்றும் 1999 ல் சரியாக அமைந்திருக்கின்றன. 2004 மற்றும் 2009 தேர்தல்களில் தவறாக போயிருக்கின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்த வரையில் 2011 ல் இழுபறி வருமென்று பல கருத்துக் கணிப்புகள் சொல்லின. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் ஜெயலலிதா வெற்றிப் பெற்றார்.

இதில் மற்றோர் முக்கியமான விஷயம் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை நடத்தும் பல பெரிய ஊடக நிறுவனங்களுக்கு இருக்கும் பிரத்தியேகமானதோர் அஜெண்டா. தெளிவாகவே தெரிந்தும், சில நேரங்களில் தங்களது கருத்துக் கணிப்புகளை இவர்கள் மாற்றி வெளியிட்டதற்கு - திரித்து என்று சொல்ல முடியாது - மாற்றி வெளியிட்டதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

இந்த விஷயத்தில் இந்தக் கட்டுரையாளருக்கு ஏற்பட்ட நேரடியான அனுபவம் சுவாரஸ்யமானது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது இந்த அனுபவம் ஏற்பட்டது. அகில இந்திய அளவில் புகழ் பெற்ற அந்த வார இதழ் குழுமத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அந்த குழுமத்தின் குரூப் எடிட்டர் 2011, ஏப்ரல் 26 ம் தேதி சென்னை வந்தார். ஏப்ரல் 13 ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் வாக்கெண்ணிக்கை மே 13 ம் தேதிதான் நடைபெற்றது.

அவர் தமிழ்ப் பதிப்பு எடிட்டோரியல் செய்தியாளர்களை அழைத்துப் பேசும் போது யார் வெல்லப் போகிறார்கள் என்று கேட்டார். ‘'இழுபறியாகப் போகிறது'' என்று செய்தியாளர்கள் பதில் அளித்தனர். அதற்கு அவரது பதில் ...''முட்டாள்தனமாக பேசாதீர்கள் ... ஜெயலலிதா அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதுதான் எனக்கு டில்லியிலிருந்து கிடைத்த தகவல்''. இவ்வாறு சொல்லி விட்டுச் டில்லி சென்ற அவர் மறுநாள் மாலையில் அந்தக் குழுமத்துக்கு சொந்தமான ஆங்கில செய்திச் சேனலில் அமர்ந்து கொண்டு இவ்வாறு பேசினார் ‘'தமிழ் நாட்டில் நிச்சயம் இந்த முறை யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கப் போவதில்லை .... இழுபறியான நிலைதான் தோன்றப் போகிறது''.

2001 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தமிழ் நாட்டின் முன்னணி தமிழ் நாளிதழ் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அப்போது திமுக ஆட்சி. ஆனால் வந்த முடிவு, ஜெயலலிதாவுக்குச் சாதகமாக வந்தது. விஷயம் நாளிதழ் அதிபருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் மீண்டும் ஒரு முறை மற்றுமோர் நிறுவனத்தை வைத்து - முதலில் கருத்துக் கணிப்பை மேற்கொண்டது ஒரு அமெரிக்க நிறுவனம், பின்னது ஒரு இந்திய நிறுவனம் - கருத்துக் கணிப்பை நடத்தினார். அதிலும் முடிவுகள் ஏறத்தாழ ஜெயலலிதாவுக்கு சாதகமாகவே வந்தன. இரண்டு கருத்துக் கணிப்புகளும் அந்த நாளிதழில் வெளியிடப்படவில்லை. இந்த விஷயம் அம்மாவுக்கும் தெரியும், ஐயாவுக்கும் கூட அப்போதே தெரியும்.

தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு முன்னணி தமிழ் ஊடக நிறுவனம் கருத்துக் கணிப்பை நடத்தியது.. வந்த முடிவுகள் திமுக வுக்குச் சாதகமாக வந்தது. இரண்டாவது முறையாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ஜெயலலிதா வுக்கு ஆதரவாக முடிவுகள் வரும்படி புள்ளிவிவரங்கள், மிகவும் சாதுர்யமாக திரிக்கப்பட்டன. இரண்டாவது கருத்துக் கணிப்பை வெளியிட்டது அந்நிறுவனம். முதலாவது கருத்துக் கணிப்பை ஏன் வெளியிடவில்லை என்று பரவலாக விவரமறிந்தவர்கள் மத்தியில் பேசப்பட்ட போது அந்த நிறுவனம் சம்மந்தப்பட்ட வர்களுக்குச் சொன்ன காரணம் தான் சுவாரஸ்யமானது;

‘'முதல் கருத்துக் கணிப்பில் ஜெயலலிதா வுக்கு மிகவும் ஆதரவாக முடிவுகள் வந்தன. அதனை வெளியிட்டால் நாங்கள் அம்மாவுக்கு ஜால்ரா போடுவதாக சொல்லி விடுவார்கள். அதனால் தான் நாங்கள் இரண்டாவது கருத்துக் கணிப்பை நடத்தினோம். அதிலும் அதிமுகவுக்கு ஆதரவாக வந்த தால் தான் வெளியிடுகிறோம்.'' என்று மிக அழகாக சமாளித்தது. இதுவும், அம்மாவுக்கும் ஐயாவுக்கும் தெரியும்.

இந்த தகவல்களை சொல்லுவதால், சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்தக் கணிப்புகளில் உண்மை இல்லை என்று நாம் சொல்லவில்லை. அந்தக் கணிப்புகளின் நம்பகத் தன்மை பற்றியும் கூட நாம் சொல்ல வரவில்லை. அவற்றில் உண்மை இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் நம்பகத்தன்மை மிக்க அந்த கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதிலும், வெளியிடாமல் இருப்பதிலும் இருக்கும் சம்மந்தப்பட்ட ஊடகங்களின் ஆழமான, வலுவான உள்நோக்கங்கள் தான் இங்கு நாம் கவலைப் பட வேண்டிய விஷயமாகும்.

இதுதான் நாட்டின் பெரும்பாலான ஊடகங்களின் உண்மையான முகம். இதற்கு இந்தக் கட்டுரையாளரே கள சாட்சியாகும். ஆகவே இந்த மாதிரியான கருத்துக் கணிப்புகளை நாம் ஒரு விதமான வலுவான ஐயப்பாட்டுடன் தான், ஆங்கிலத்தில் சொல்லுவதானால் ‘'வித் எ பிஞ்ச் ஆஃப் சால்ட்'' தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்று தேர்தல் காலங்களில் கருத்துக் கணிப்புகளை நடத்துவதென்பது மிகப் பெரிய லாபம் தரும் வியாபாரமாக மாறியிருக்கிறது. இதில் பொய்யும், பச்சைப் பொய்யும், உண்மையும் நேரத்துக்கு ஏற்ப விகிதாசாரம் மாறிக் கலந்து அது கருத்துக் கணிப்பு முடிவுகளாய் வெளியில் வருகிறது. கடந்த காலங்களை விட தற்போது ஊடகங்கள் மிக அதிக அளவில் அரசியல் மயமாகிக் கிடக்கின்றன. இதனால் கருத்துக் கணிப்புகள் நடத்தப் படுவதும், அது வெளியிடப் படுவதும் மிகப் பெரியதோர் அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலும் கூட பல சமயங்களில் தீர்மானிக்ப் படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல்களை பற்றி பயிலும் விஞ்ஞானத்திற்கு ‘'ஸெஃபாலஜி'' என்று பெயர். இது ஒரு நவீன விஞ்ஞானம். வளர்ந்த நாடுகளில் நடத்தப் படும் கருத்துக் கணிப்புகள் வேறு விதம். அங்கும் கூட இவை சில நேரங்களில் தவறாக முடிந்திருக்கின்றன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் தற்போது காணக் கிடப்பது போன்று அவை உள்நோக்கத்துடன், முற்றிலுமாக அரசியல் மயமாகி சீரழிந்து போகவில்லை. மக்களின் வாக்களிக்கும் முறை, அவர்களது எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை பிரதிபலிப்பது தான் கருத்துக் கணிப்புகளின் நோக்கமாக உலகம் பூராவும் இருக்கின்றது. ஆனால் இந்தியாவில் இது எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்று குறுகிப் போய் விட்டது.

மற்றுமோர் நவீன விஞ்ஞானத்தை வெற்றிகரமாக இந்தியர்களாகிய நாம் சிதைக்கத் துவங்கி விட்டோம். வரும் நாட்களில் இந்தச் சிதைவுப் பணி மேலும், மேலும் வளர்ந்தோங்கும் என்றே நாம் உறுதியாக நம்பலாம் ........

English summary
Opinion polls are famous during the elections, says R Mani and here is his say on the opinion polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X