For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் பயணம்: பஸ், ரயில் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்ய இயலாதவர்கள் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் மொத்தம் 12 ஆயிரத்து 624 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 9ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகள் படையெடுப்பால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருடர்கள் யாராவது நடமாடுகிறார்களா? என்பதை கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், மாறுவேடத்தில் பயணிகளோடு பயணிகளாகவும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Pongal festival Minister Thangamani inspects arrangements at Koyambedu

பொங்கல் கொண்டாட பயணம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள், தொழில், வேலை, படிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் தங்கியுள்ளனர். இவர்கள், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

ரயில்களில் கூட்டம்

ஊருக்கு செல்வதற்காக 60 நாட்களுக்கு முன்னர் பஸ், ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால், ரயில் மற்றும் பஸ் முன்பதிவு தொடங்கிய அன்றே டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான டிக்கெட்களும் ஒரு சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன. ஒவ்வொரு ரயில்களில் 200 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றனர். சிறப்பு ரயிலிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அலைமோதிய பயணிகள்

பொங்கல் பண்டிகையொட்டி இன்று முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், எப்படியாவது ஊர்களுக்கு சென்று விட வேண்டும் என கடும் நெரிசலையும் பொருட்படுத்தாமல் பஸ், ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்ய முடியாத நிலையில், நேற்று மாலையில் இருந்தே ரயில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்ததை காண முடிந்தது. நேற்று இரவில் செல்ல முடியாதவர்கள் இன்று பகலில் செல்லும் ரயில்களில் பயணம் செய்தனர். இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நடக்க முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது.

கோயம்பேடு பேருந்து நிலையம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு தமிழக அரசு கடந்த 2 தினங்களாக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று மாலை 6 மணி முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். எந்தேந்த பேருந்து எங்கு நிற்கும் என்ற முறையான அறிவிப்பு இல்லாததால் குடும்பத்தினருடன் பேருந்து நிலையம் வந்த பயணிகள் அங்கும் இங்குமாக பல மணிநேரம் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆம்னி பேருந்துகள்

வழக்கமான நாட்களில் சராசரி பயண கட்டணங்களை வசூலிக்கும் ஆம்னி பஸ்கள், பண்டிகை காலங்களின் போது பயணங்களின் கூட்ட நெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இருமடங்காக கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். பெரும்பாலான பயணிகள் சொந்த ஊருக்கு சென்றால் போதும் என்ற மனநிலையில் ஆம்னி பேருந்துகள் கேட்கும் அதிக கட்டணத்தை செலுத்தி பயணம் மேற்கொள்கின்றனர்.

புகார் தெரிவிக்க எண்கள்

இந்தநிலையில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை கண்காணிக்கும் பணியில் கோயம்பேடு ஆம்னி பஸ்நிலையம், எழும்பூர், பெருங்களத்தூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு சுங்கச்சாவடி ஆகிய 6 இடங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் குறித்து, 044-24794709- என்ற தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Transport minister Thangamani inspected the arrangements made for passengers travelling for the Pongal holidays. According to reports there had been a great rush of travellers at Koyambedu bus depot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X