For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூரிய வழிபாடும் பொங்கல் பண்டிகையும்...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் விழாவே ஒரு சூரியனுக்கு நன்றி சொல்லும் விழாதான். இந்திரனுக்கு ‘போகி' என்று பெயர் உண்டு. பொங்கலுக்கு முன்தினம் இந்திரன் பெயரால் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலன்று சூரியனை நாராயணராக கருதி வழிபாடு செய்கின்றனர். இதுவே சூரிய நாராயண பூஜையாகும். அன்று பொங்கலிட்டு வழிபாடு செய்வார்கள். இது முற்காலத்தில் சூரிய விழா என்றே அழைக்கப்பட்டது.

நம் நாட்டில் சூரிய வழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான் என்கின்றன, வேதங்கள் ! தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது. மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய் வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.

நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை. பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான். சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று மக்கள் நம்பினார்கள்.

சூரியனுக்காகக் கட்டிய புராதனக் கோயிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கோனார்க் கோயில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்கதேவன் (கி.பி 1238--64) இதைக் கட்டினான்.இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காண கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை. தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது.

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம்

சூரியனைப் பரம்பொருளாக ஆதித்திய ஹிருதயம் கூறுகிறது. மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் காயத்ரி சூரியனுக்கு உகந்த மந்திரம். சூரிய நமஸ்காரம் என்பது உடற்பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு. இன்று இது மேல்நாட்டிலும் பரவியுள்ளது.

சூரியனுக்கு ஆராதனைகள்

சூரியனுக்கு ஆராதனைகள்

சூரியன் வேத வடிவமானவன் என்று ஞானநூல்கள் சொல்கின்றன. காலை வேளையில் ரிக் வேதமாகவும், நண்பகலில் யஜுர் வேதமாகவும், மாலை நேரத்தில் சாமவேத சொரூபமாகவும் திகழ்கிறான். தட்சிணாயனத்தின் ஆறு மாதங்களில் பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் பல நோய்கள் , துன்பங்கள் உத்திராயண காலத் துவக்கத்தில் இறைவன் அருளால் நீங்குவதால், தை மாதம் முதல் தேதி சூரிய பகவானுக்கு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வத்தால் பயனில்லை. சுவரை வைத்துத் தானே சித்திரம் என்றும்கூட சொல்வதுண்டு. அதனால் மனிதவாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார்.

கண்கண்ட தெய்வம்

கண்கண்ட தெய்வம்

சூரியன் அனைத்து மதத்தினரும் வழிபடும் கண்கண்ட தெய்வம். சூரியன் கிழக்கில் உதயமாகி அருள்புரிகிறார். இவருடைய வழிபாடு பழங்காலத்தில் மக்கள் மத்தியில் சிறப்பாக இருந்தது. ஆனால், இப்போது கோயில்களில் பரிவார தெய்வங்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

முதல்நாள் ஞாயிறு ஆனது ஏன்?

முதல்நாள் ஞாயிறு ஆனது ஏன்?

உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளைச் செய்யவேண்டும். ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது. அதனால், வாரத்தின் முதல்நாளில் சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர்.

சூரிய குலம்

சூரிய குலம்

அயோத்தியை ஆண்ட வம்சம் சூரியவம்சம். நீதி நேர்மை தவறாமல் ஆட்சிபுரியும் நல்லமன்னர்கள் பிறந்த குலம் இது. எவ்வளவு துன்பம் நேர்ந்தபோதும், உண்மையிலிருந்து விலகாமல் சத்தியம் பேசிய அரிச்சந்திரன், சனிதோஷம் போக்கும் நளச்சக்கரவர்த்தி, பசுக்களுக்கு வாழ்வு தந்த திலீபச்சக்கரவர்த்தி, தசாவதாரங்களில் ஒருவராக வணங்கப்படும் ராமபிரான் ஆகியோர் சூரியகுலத்தில் தோன்றியவர்கள். கொடை வள்ளல் கர்ணனும் சூரியனின் பிள்ளையே. சூரியனை வழிபட்டவர்கள் சூரியகுலத் தோன்றல் களான இந்த மன்னர்களின் நல்லாசியையும் பெறுவர் என்பது உறுதி.

நன்றி காட்டும் நல்லநாள்

நன்றி காட்டும் நல்லநாள்

உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில், விவசாயத்திற்கு துணைபுரிந்த சூரியன், பணியாட்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா பொங்கல் விழா. சூரியன் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார். கடல்நீரை ஆவியாக்கி மழை பொழியச் செய்கிறார். கிருமிகளை அழித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார். மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார். அவருக்குரியதாக இந்த நாள் அமைந்துள்ளது. சூரியனுக்குரிய நாளாக தைப்பொங்கலும், கால்நடைகளுக்குரிய நாளாக மாட்டுப்பொங்கலும், உறவினர்,நண்பர்கள், வேலையாட்களைப் பாராட்டும்விதத்தில் காணும்பொங்கலும் அமைந்துள்ளன.

பொங்கலுக்கு விதிமுறைகள்

பொங்கலுக்கு விதிமுறைகள்

பொங்கலிடுவதிலும் சில விதிமுறைகள், வரைமுறைகள் இருக்கின்றன. பொங்கல் பண்டிகையின் போது பெண்கள் சூரியன் உதிப்பதற்கு 5 நாழிகைக்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு, வீட்டு முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டின் முற்றத்தில் ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். அரக்கு நிறம் துர்க்கா தேவிக்குரியது. துன்பங்கள் விலகி மங்கல வாழ்வும், இன்பமும் நிலைக்க காவி பூசப்படுகிறது. அந்த பகுதியை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரித்து, பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கல பொருட்களையும் படைக்க வேண்டும்.

விநாயகர் பூஜை

விநாயகர் பூஜை

விநாயகரை முதலில் மனதில் நினைத்து, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை, மாவிலை கட்ட வேண்டும். பானையின் மேல்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி, சந்தனம், குங்குமத்தால் திலகமிடவேண்டும்.

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்டி, கற்பூரதீபத்தினால் அடுப்பில் நெருப்பை உண்டாக்கி பற்ற வைக்க வேண்டும். பின்னர் கணவரும், மனைவியும் சூரியனை வணங்கி, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்து பானையை பக்குவமாக, தம் கைகளால் பற்றி பிடித்து தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று உரத்தக் குரல் எழுப்பிக்கொண்டே பச்சரிசியை இருகைகளாலும் அள்ளி சூரியபகவானை வணங்கியபடி பானையின் வாய்விளம்பினை 3 முறை சுற்றி பானையில் இடவேண்டும்.

சூரியனுக்கு படையல்

சூரியனுக்கு படையல்

பொங்கிய பொங்கலை 3 தலைவாழை இலையில் இட்டு படைத்து பழங்கள், கரும்பு, முதலியவற்றை கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். தீபாராதனை காட்டும் போது குலதெய்வத்தையும், மூதாதையர்களையும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

English summary
The second day of Pongal is known as 'Surya Pongal' and is dedicated to the Sun God. It is the day on which the celebration actually begins and is also the first day of the Tamil month Thai. On this day the granaries are full, the sun shines brightly, trees are in full bloom, bird-songs resound in the air and hearts overflow with happiness that get translated into colorful and joyous celebrations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X