• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாடர்ன் மானசாவும்... மணக்க, மணக்க கிராமத்து பொங்கலும்

|

சென்னை: மானசாவிற்கு அன்று காலை எழும்போதே பதட்டம் நெஞ்சு முழுவதும் நிறைந்திருந்தது. காரணம் மறுநாள் விடிந்தால் "பொங்கல் பண்டிகை".

தமிழக வம்சாவளி பெற்றோர் என்றாலும் முழுக்க, முழுக்க அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்தவள் மானசா. சிறுவயதில் இருந்தே பெற்றோர் எந்த பண்டிகையும் கொண்டாடுவதில்லை. அமெரிக்க வாழ்வியல் முறையில் இருவருமே ஊறிப் போய்விட்டனர்.

அதனால், கலாச்சாரம், பண்பாடு எல்லாம் நிறைந்து தமிழனாய் தன்னுடைய அலுவகத்தில் வந்து சேர்ந்த கல்யாண் என்னும் கல்யாண் குமாரையே சுற்றி, சுற்றி காதலித்து திருமணம் செய்து கொண்டாயிற்று.

Pongal special short story

அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்திலேயே தனிக்குடித்தனமும் வந்து ஆறேழு மாதங்கள் ஓடிவிட்டன. இதோ இருவருக்கும் "தலைப்பொங்கல்". கல்யாணின் அம்மா தமிழகத்தில்தான் கொண்டாட வேண்டும் என்று அடம் பிடித்ததாலும், அதனை மருமகள் மானசா வழிமொழிந்ததாலும் கல்யாணும் அவளை அவனது சொந்த கிராமமான இலவட்டங்குறிச்சிக்கே கூட்டியும் வந்துவிட்டான்.

வந்த நாள் முதலே பொங்கலை பாரம்பரிய முறைப்படிதான் கொண்டாடனும் என்று மாமியாருடன் சேர்ந்து கணவனிடம் மல்லுக்கு நின்ற மானசாவிற்கு முதல்நாள் காலை எழுந்தவுடன் வயிற்றில் பயப்பந்து உருண்ட காரணம் சேலையும், பொங்கல் நடைமுறைகளும்தான்.

எப்போதும் ஒரு ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் மட்டுமே போதுமானது மானசாவிற்கு. கிராமத்திற்கு வந்ததால் ராஜஸ்தானி டைப் ஸ்கர்ட்டும், சட்டையும் போட்டுக் கொண்டு திரிந்தாலும், பொங்கலன்று புடவை கட்டுவதே முதல் ரூல் என்றதும் அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது. சரி யாரையாவது கட்டிவிடச் சொல்லலாம் என்று கேட்கலாம் என்றாலும் மாமியார் பின் கொசுவம் வைத்து கட்டிக் கொள்ளச் சொல்லிவிட்டார். அந்த ஊரில் அப்படி சேலை கட்டுவது வழக்கொழிந்து போய் பல நாட்களாவிட்டது பாவம்.

சரியென்று கல்யாணிடம் சென்று கேட்டால் அவனோ எனக்கே வேட்டி கட்ட ஒழுங்காக வராது...இதில் உனக்கு நான் புடவை கட்டிவிட்டு... அது அவிழ்ந்து வேற விழணுமா என்று எஸ்கேப் ஆகிவிட்டான். என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்தபோதுதான் கல்யாணின் பாட்டி மீனாம்பாள் வந்து சேர்ந்தார்.

பாட்டி அந்தக் காலத்து எம்.ஏ பட்டதாரி. அவ்வளவுதான் பாட்டியையே பிடித்துக் கொண்டாள் மானசா. பாட்டி..பாட்டி பொங்கல் பெஸ்டிவல் சாரிதான் கட்டணுமாம்..அதைக் கட்டக் கத்துக் கொடுங்களேன் ப்ளீஸ்..அப்படியே பொங்கல் கொண்டாட என்ன ரூல்ஸுனும் சொல்லிக் கொடுங்க என்றவளை நெட்டி முறித்துக் கொஞ்சிய பாட்டி, அடி என் தங்கமே அமெரிக்காவில் இருந்து வந்து நம்ம கலாச்சாரம் பத்தி கேட்கறியே என்று சந்தோசத்துடன் சொல்ல ஆரம்பித்தார் மீனா பாட்டி.

"பொங்கல் பண்டிகை அப்டிங்கறது விவசாயிகள் பெரும்பான்மையா நிறைஞ்சிருந்த காலத்தில் ஆரம்பிச்ச பண்டிகை. தமிழனுக்கு மட்டுமில்ல, ஆதிக்காலத்தில் தோன்றிய மனிதர்களுக்கும் சொந்தமான பண்டிகை இது. பொங்கல் அப்டினா பொங்கி வழியறதுனு அர்த்தம். நம்மளோட விளைச்சலும், வருமானமும் அமோகமா பொங்கி வழியறப்போ அதுக்கு காரணமான சூரியனுக்கு நம்முடைய நன்றியைத் தெரிவிக்கிற விதமா தோன்றினதுதான் பொங்கல் பண்டிகை.

பொங்கல் அன்னைக்கு எல்லாரும் காலையிலேயே எழுந்து குளிச்சு, புதுத்துணி கட்டி, வாசலில் சூரியன் உதிக்கிற பக்கமா மண் அடுப்பை மஞ்சள், குங்குமம் வைச்சு, மஞ்சள் கொத்து கட்டி வைக்கணும். மஞ்சள் கொத்து எதுக்குனா இதே மாதிரி வருஷா, வருஷம் அமோக விளைச்சளோட வாழ்க்கை மங்களகரமா இருக்கணும் அப்டிங்கறதுக்காக.

அப்புறம், புதுசா வாங்கின மண் பானையில மஞ்சள் கொத்து கட்டி அடுப்பில் வச்சு பொங்கலுக்கான பால், அரிசி,வெல்லம் எல்லாம் போட்டு பால் பொங்கல் கிழக்குப்பக்கமா பொங்கி வரப்போ குலைவை போடணும். அப்புறம் சூரியனுக்கு கரும்பு, அரிசி, பழங்கள், பூவோட பொங்கலையும் வச்சு படைக்கணும்" பாட்டி சொல்லச் சொல்ல மானசாவிற்கு பொங்கல் பற்றிய பயம் போய் ஆசை அதிகமானது.

மறுநாள் பாட்டி உதவியுடன் புடவை கட்டி, பொங்கல் வைத்து படைத்து குடும்பத்துடன் மகிழ்ந்தாள் மானசா. அடுத்த வருடம் அமெரிக்காவில் கேஸ் அடுப்பிலேயே, வெங்கலப் பானையில் மஞ்சள் கட்டி, வெட்டி வைத்து ஜிப்லாக் பையில் அடைத்த கரும்புடன் பொங்கல் கொண்டாடினாலும் அந்த கிராமத்துப் பொங்கலின் மணம்தான் அவள் மனம் முழுவதும் நிறைந்திருந்தது....

 
 
 
English summary
Manasa a fashionable girl married in Tamil nadu and celebrates pongal - a Short story.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X