For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் காவலில் அட்டாக் பாண்டி… பொட்டு கொலைக்கான காரணத்தை சொல்வரா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 'அட்டாக்' பாண்டியை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மதுரையில் சிறப்பு புலனாய்வு செல்லில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நான்கு நாள் விசாரணையில் பொட்டு சுரேஷ் கொலைக்கான காரணத்தை போலீசில் போட்டுக்கொடுப்பாரா அட்டாக் பாண்டி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டு சுரேஷ் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமாக இருந்தார். இவர் கடந்த 2013ல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட அட்டாக் பாண்டி கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

மும்பையில் பதுங்கி இருந்த அவர், கடந்த 21ம் தேதி தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். நேற்று முன்தினம் அவரை மதுரைக்கு கொண்டு வந்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும், 10 நாள் போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு அனுமதி கேட்டு போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர்.

போலீஸ் காவல்

போலீஸ் காவல்

அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த மனு, நீதிபதி பால் பாண்டி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டாக் பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காவல்துறை சார்பில் ஆஜரான சுப்பிரமணியபுரம் காவல்துறை ஆய்வாளர் கோட்டைசாமி, இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா? என்பதை அறிய, அட்டாக் பாண்டியை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரினார். மேலும் அவர், பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதான ஆரோக்கியபிரபு, ஜெயபாண்டி, சந்தானம் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில், அட்டாக் பாண்டியுடன் கூட்டு சதியில் ஈடுபட்டு பொட்டு சுரேஷை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

முன் விரோதம்

முன் விரோதம்

அட்டாக் பாண்டிக்கும், பொட்டு சுரேஷுக்கும் அரசியல் முன் விரோதம் இருந்தது. தான் வகித்துவந்த வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டதிலும், தனது ஜெயம் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் போலீசார் தலையிட்டதற்கும் பொட்டு சுரேஷ்தான் காரணம்' என்றும் அவரை தீர்த்து கட்டினால்தான் அரசியலில் நிரந்தரமாக நீடிக்க முடியும் எனவும் அட்டாக் பாண்டி தங்களிடம் கூறியதாக மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மும்பையில் கைது

மும்பையில் கைது

பொட்டு சுரேஷ் கொலையில் இவர்களைத் தவிர்த்து வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதம் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டியுள்ளது. அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்துகொண்டே சதி செய்து, ஆட்களை ஏவி பொட்டு சுரேஷை கொலை செய்தது உண்மை என்பது தெரியவந்துள்ளது. அவர், 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வட மாநிலங்களில் தங்கியுள்ளார். மும்பையில் அவரை கைது செய்தபோது 16 செல்போன்கள், 3 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

10 நாள் அனுமதி

10 நாள் அனுமதி

இந்த செல்போன்களை பயன் படுத்தி, யாரிடம் எல்லாம் பேசியுள்ளார், ஏடிஎம் கார்டு மூலம் எவ்வளவு பணபரிவர்த்தனை நடந் துள்ளது என விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே அவரை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

18 பேர் கைது

18 பேர் கைது

கூடுதல் அரசு வழக்கறிஞர் வி.கனிமொழி வாதிடும்போது, ‘பொட்டு சுரேஷ் கொலை நடந்த நாளிலிருந்தே அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்து வருகிறார். இவ்வழக்கில் ஏற்கெனவே 18 பேர் கைதாகி ஜாமீனில் உள்ளனர். அட்டாக் பாண்டி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

சென்னையில் சதி ஆலோசனை

சென்னையில் சதி ஆலோசனை

இதில் பொறாமையடைந்த பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி வகித்துவந்த வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவியை பறிக்க வும், அவர் நடத்திய நிதி நிறுவனத்தில் போலீஸ் தலையிடவும் செய் துள்ளார். இப்படி தொடர்ந்து இடையூறு செய்ததால் பொட்டு சுரேஷை கொலை செய்ய 12.1.2013ல் சென்னை தி.நகரிலுள்ள ஹோட்டலில் சதி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கொலைக்கு மூல காரணம்

கொலைக்கு மூல காரணம்

பொட்டு சுரேஷ் கொலை சதிக்கு மூல காரணம் அட்டாக் பாண்டிதான். இக்கொலையில் மேலும் பலருக்கு தொடர்பிருக்க வாய்ப்புள்ளது. அட்டாக் பாண்டியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மூலம் யாரிடம் பேசினார் என்பதை விசாரிக்க, அவரை மற்ற மாநிலங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டிவரும். எனவே, 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

கொலை செய்ய திட்டம்

கொலை செய்ய திட்டம்

அட்டாக் பாண்டி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜா, இந்த வழக்கில் ஆரம்பம் முதலே போலி என்கவுண் டர் மூலம் அட்டாக் பாண்டியை கொலை செய்ய போலீஸார் திட்ட மிட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகிறோம். அட்டாக் பாண்டி கைதான போது அவரிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. சிம்கார்டுகள் மட்டுமே பறிமுதல் செய்துள்ளனர். இதன்மூலம் யாரிடம் பேசியுள்ளார் என்ற விவரங்களை சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் மூலம் பெறலாம்.

மதுரையில் விசாரிக்கலாம்

மதுரையில் விசாரிக்கலாம்

இதற்காக வட மாநிலங்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிற மாநிலங் களுக்கு அழைத்துச் செல்லும் போது அவர் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்படலாம் என அஞ்சுகிறோம். மும்பை நீதிமன்றம் 4 நாள் அவகாசம் அளித்தும் அப்போது விசாரிக்காமல் உடனே மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு, தற்போது 10 நாள் கேட்பது சரியல்ல. குறுகிய காலத்துக்கு மதுரையில் வைத்து விசாரிக்கலாம்' என்றார்.

4 நாள் காவல்

4 நாள் காவல்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பால் பாண்டி பிறப்பித்த உத்தரவில், ‘நாளை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமைவரை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். மதுரையில் இருக்கும் நாளில் தினமும் மாலை 5 மணி முதல் 5.15 வரை வழக்கறிஞர் அட்டாக் பாண்டியை சந்தித்து பேசலாம்' என உத்தரவிட்டார்.

அட்டாக் பாண்டி கூட்டாளிகள்

அட்டாக் பாண்டி கூட்டாளிகள்

இதனிடையே பொட்டு சுரேஷ் வழக்கில் கைதான அனைவரும் ஜாமினில் வந்து, வெளியூர்களிலும், உள்ளூரிலும் வசித்து வருகின்றனர். மும்பையில் பாண்டி பதுங்கியிருந்ததால், அவரை தொடர்பு கொள்வதில் கூட்டாளிகளுக்கு சிரமம் இருந்தது. தற்போது கைதான நிலையில் நீதிமன்ற விசாரணைக்கு பாண்டி வரும் போதும், சிறையில் இருக்கும்போதும் அவரை சந்திக்கும் முயற்சியில் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளனர். இதை பயன்படுத்தி, ஏதாவது சதித்திட்டம் தீட்டலாம் என போலீசார் கருதுகின்றனர். இதனால் கூட்டாளிகளை கைது செய்து, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

ராமஜெயம் பற்றி விசாரணை

ராமஜெயம் பற்றி விசாரணை

இதனிடையே நேற்று முன்தினம் மதுரை எஸ்.ஐ.சி., அலுவலகத்தில், 'அட்டாக்' பாண்டியிடம் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., அன்பு மற்றும் அதிகாரிகள் விசாரித்தனர். திருச்சி ராமஜெயம் கொலை குறித்து அவர்கள் விசாரித்து இருக்கலாம் என தகவல் வெளியானது. ராமஜெயம் கொலையில் பாண்டியின் கூட்டாளிகளுக்கு தொடர்பு உண்டா அல்லது அவருக்கு தெரிந்த நபர்கள் ஈடுபட்டார்களா என விசாரிப்பதற்குள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேரமாகிவிட்டது என அழைத்துச் சென்றுவிட்டனர். பாண்டியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, நாங்கள் விசாரிப்போம். முடியாதபட்சத்தில், நீதிமன்றம் அனுமதியுடன் காவலுக்கு எடுத்து விசாரிப்போம், என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் கூறியுள்ளனர்.

பரபரப்பு அதிகரிப்பு

பரபரப்பு அதிகரிப்பு

பொட்டு சுரேஷ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டி போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருதால் கொலைக்கான மூலகாரணம் பற்றியும், யாருடைய உத்தரவின் பேரில் இந்த கொலை செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவரும். இதனால் மதுரைவட்டாரங்களில் மட்டுமல்லாது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
A city court on Wednesday granted four days police custody of ‘Attack’ Pandi, the prime accused in 2013 murder of ‘Pottu’ Suresh, the close friend of former Union Minister, M.K. Alagiri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X