For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் சிலையை அகற்றுவதா? அரசு செலவில் நிறுவுக...: ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வேளாங்கண்ணி அருகே கோவிலில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் உருவச்சிலையை, அகற்றப்பட்ட இடத்தில் தனது சொந்த செலவில் அரசே மீண்டும் அமைத்துத் தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்திலுள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல்துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர். இதன் மூலம் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு அதன் தமிழர் விரோதப் போக்கை மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறது.

தெற்கு பொய்கை நல்லூரில் சேவூதராய அய்யனார் கோவில் அந்த ஊர் மக்களுக்கு சொந்தமான தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அக்கோவில் வளாகத்தில் ஊரையும், இனத்தையும் காத்த முன்னோரின் உருவச்சிலைகள் வைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி, அக்கோவில் வளாகத்தின் ஒரு புறத்தில் கருப்பன் சாமி சிலையையும், மறுபுறத்தில் குதிரையுடன் பிரபாகரன் இருக்கும் சிலையையும் அமைத்த மக்கள் அக்கோவிலுக்கு நேற்று முன்நாள் குடமுழுக்கு நடத்தினர்.

சிலை அகற்றம்

சிலை அகற்றம்

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபினவ் குமார் தலைமையில் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்திற்குச் சென்ற காவல்துறையினர், அந்த ஊரில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு பிரபாகரன் சிலையை மட்டும் அகற்றியுள்ளனர். குதிரை சிலை மட்டும் இருக்கும் நிலையில், பிரபாகரன் சிலை இருந்த இடத்தின் மீது வெள்ளை வர்ணம் பூசி அங்கு சிலை இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் அழித்துள்ளனர்.

போலீஸ் மிரட்டல் புகார்

போலீஸ் மிரட்டல் புகார்

அதுமட்டுமின்றி, கோவில் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர், கோவில் குடமுழுக்கு குழுவினர் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அழைத்த காவல்துறையினர், ‘பிரபாகரன் சிலை இங்கு இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் நாங்களே அகற்றி விட்டோம்' என்று எழுதி தர வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் அனைவர் மீதும் பொய்வழக்கு பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். பொதுமக்களும் மிரட்டலுக்கு பணிந்து அவ்வாறே எழுதிக் கொடுத்துள்ளனர். காவல்துறையின் இந்த அத்துமீறல் கடும் கண்டனத்துக்குரியது.

தமிழர்களின் குலசாமி

தமிழர்களின் குலசாமி

தெற்கு பொய்கை நல்லூரில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தான் பிரபாகரன் சிலை அமைக்கப்பட்டிருந்தது. தமிழ் இனத்தைக் காத்தவர் என்ற அடிப்படையில், மற்ற குலசாமிகளுக்கு எப்படி சிலை அமைக்கப்பட்டதோ, அதேபோல் பிரபாகரனுக்கு ஊர் மக்கள் சிலை அமைத்துள்ளனர். இது முழுக்க முழுக்க ஊர்மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். இதில் தமிழக அரசோ, காவல்துறையோ தலையிட எந்த உரிமையும் இல்லை. கோவில் வளாகத்தில் பிரபாகரன் சிலை அமைக்கப்படுவதால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அவ்வாறு இருக்கும்போது தமிழக காவல்துறையினர் ஏன் சட்டவிரோதிகளைப் போல நள்ளிரவில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு சென்று சிலையை அகற்றினார்கள் என்பது தெரியவில்லை.

உரிமையில்லையா?

உரிமையில்லையா?

தங்களது இனத்தைக் காத்ததாக, தங்களின் சொந்தமாக கருதுபவர்களின் சிலைகளை தங்களுக்குச் சொந்தமான இடத்தில் அமைத்து வழிபட மக்களுக்கு உரிமை உண்டு. இதை மதிக்காமல் காவல்துறை நடந்தது வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயல்.

முள்ளிவாய்க்கால் முற்றம்

முள்ளிவாய்க்கால் முற்றம்

இந்தியாவிலேயே மாநில மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்காமல் ஓர் அரசு செயல்படுமானால் அது தமிழக அரசு தான். 2001 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது சென்னை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலையை அகற்றிய ஜெயலலிதா, 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததும் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தின் வளாகத்தை இடித்தனர். அதைத் தொடர்ந்து இப்போது பிரபாகரன் சிலையை அகற்றியிருக்கிறார்கள்.

தமிழக அரசு அவமதிப்பு

தமிழக அரசு அவமதிப்பு

முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் இதேபோன்ற அணுகுமுறைகள் தான் கடைபிடிக்கப்பட்டன. இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் திட்டமிட்டு நசுக்கப்பட்டன. உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை தரையிறங்க அனுமதிக்காமல் வந்த விமானத்திலேயே மலேஷியாவுக்கு திருப்பி அனுப்பி தமிழக அரசு அவமதித்தது.

அரசு செலவில் சிலை

அரசு செலவில் சிலை

தமிழ் இனத்தையும், தமிழர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் இந்தப் போக்கை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தெற்கு பொய்கைநல்லூரில் அகற்றப்பட்ட பிரபாகரனின் சிலையை அகற்றப்பட்ட இடத்தில் தனது சொந்த செலவில் மீண்டும் அமைத்துத் தர அரசு முன்வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
Pattali Makkal Katchi president Dr.Ramadoss has condemned for TamilNadu government for removal for Prabhakaran statue from Village Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X