For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டணமெல்லாம் ஏற்றியது சரி.. நஷ்டத்திலிருந்து மீண்டுவிட்டதா போக்குவரத்துத்துறை?

Google Oneindia Tamil News

- ராஜாளி

சென்னை: கடந்த ஜனவரி மாதம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடி முடித்த கையோடு தமிழர்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக பேருந்துக் கட்டண உயர்வை அறிவித்தது தமிழக அரசு. கட்டண உயர்வு 50% முதல் 60% வரை இருக்கும் எனவும் அறிவித்தது அரசு. ஆனால் சென்னை உட்பட பல இடங்களில் 100% கட்டண உயர்வு இருந்தது.

தமிழகம் முழுவதும் 22 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகளில் தினமும் சராசரியாக 2.10 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர். ரயில் கட்டணங்களை விட 3 மடங்கு 4 மடங்கு என கட்டண உயர்வு இருந்தது. சாதாரணப் பேருந்துகள் முதல் சொகுசுப் பேருந்துகள், குளிர்சாதன வசதிகொண்ட பேருந்துகள் என அனைத்திலும் கடும் கட்டண உயர்வு அமல்படுத்தப் பட்டது. உயர்த்தப்பட்ட கட்டணம் மெட்ரோ ரெயில் கட்டணங்களுக்கு சமமாக இருந்ததால் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் மட்டும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். இதனால் நடுத்தர, மற்றும் கீழ் நடுத்தர வருவாய் கொண்ட மக்களும் குறைந்த வருவாய் கொண்ட மக்களும் கடும் இன்னலுக்குள்ளாகினர். தங்களது மாத வருவாயில் கிட்டத்தட்ட 50% முதல் 60% வரை அரசுப் பேருந்துகளுக்கே கட்டணமாக அழுதுவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

present status of transport department

போராட்டங்கள்

இந்த கட்டண உயர்வை எதிர்த்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து வர்க்கத்தினரும் போராட்டத்தில் குதித்தனர். பிரதான எதிர்க்கட்சியான திமுக தொடங்கி லெட்டர்பேட் கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தது. கட்டண உயர்வு அமல்படுத்தப் பட்ட ஜனவரி 20 முதல் தமிழகம் முழுவதும் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி பெரும்போராட்டங்கள் நடைபெற்றன. வழக்கம்போல தமிழக அரசும் இந்த மக்கள் போராட்டங்களையும் அரசியல் கட்சிகளின் போராட்டங்களையும் கண்டு கொள்ளவில்லை.

அமைச்சர் பதில்

உயர்த்தப்பட்ட கடும் கட்டண உயர்வை நியாயப்படுத்தி பேசினார் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர். போக்குவரத்து துறை தினம்தோறும் 9 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வந்தது அது தற்போது ஊழியர்களுக்கான 13- வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்திய பிறகு 12 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது என்று அறிவித்தார். அதோடு டீசல் விலை உயர்வு, உதிரிப் பாகங்கள் விலை உயர்வு, ஆகியவற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.4,657 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. 2,500 கோடி ரூபாய் 60,000 ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ஆகவே மிஸ்டர் பொது ஜனம் இதை முழுமையாக பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அப்போது அறிவித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால் போராட்டங்கள் தீவிரமடைய ரூபாய்களில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை 2 காசுகள், 4 காசுகள் என்று குறைத்தது அரசு. இப்படியாக இழப்பை சரிகட்ட அரசு கட்டணங்களை உயர்த்தி ஆறுதல் கொண்டது.

சரி கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பிறகு இழப்பிலிருந்து மீண்டுவிட்டதா போக்குவரத்து துறை என்பது குறித்து சிஐடியூ மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகநயினாரிடம் கேட்டபோது முதலில் இழப்பு என்ற வார்த்தையே தவறு என்று பேச ஆரம்பித்தவர் தொழில் செய்தால் மட்டுமே இழப்பு அல்லது லாபம் என்று இருக்கும் ஆனால் ஆங்கிலேயர் காலத்திலிருந்தே போக்குவரத்து துறை சேவைத்துறையாக கருதப்பட்டது.

இந்தியாவிலேயே கிராமங்களுக்கு அதிக அளவில் பேருந்துகளை இயக்குவது தமிழ்நாட்டில் மட்டும்தான், இப்போதைய நிலவரப்படி lost mile connectivity அதாவது எங்கெல்லாம் சாலை இருக்கிறதோ அங்கெல்லாம் பேருந்துகளை இயக்குவது என்ற நிலையில் பேருந்துகள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற அளவுக்கு தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்கி வருகிறது தமிழக அரசு. இப்படி சேவை கருதி பேருந்துகள் ஓட்டப்படுவதால் இந்தத் துறையில் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இந்தப் பற்றாக்குறை காரணமாக இப்போதைய ஆளும் அரசு 1 கோடி கிலோமீட்டர்கள் ஓடிக்கொண்டிருந்த பேருந்துகளை இப்போது 85 லட்சம் கிலோமீட்டர்களாக குறைத்துள்ளது. இதில் ஒரு கிலோமீட்டருக்கு கிட்டத்தட்ட ரூ.32 வருமானமாக வருகிறது. தொழிலாளர்களின் ஊதியம், டீசல் இன்னபிற செலவுகள் உட்பட ரூ.40 முதல் ரூ.42 வரை செலவாகிறது. புறநகர் பேருந்துகளில் ரூ.60 வரை கூட வர வாய்ப்புள்ளது. இப்படியாக சராசரியாக ஒரு கிலோமீட்டருக்கு ரூ.9 பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்தப் பற்றாக்குறையை அரசு போக்குவரத்து துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றார் நயினார். வருடத்திற்கு ரூ. 3 ஆயிரம் கோடி முதல் ரூ. 4 ஆயிரம் கோடி வரை செலவாகும் தொகையை மானியமாக மக்களுக்கு போக்குவரத்து துறை மூலமாக அரசு வழங்கவேண்டும்.

தினம்தோறும் 30 லட்சம் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இதில் ஒரு மாணவருக்கு ஒரு ரூபாய் செலவாகிறது என்றால் அதில் 56 காசுகளை அரசு போக்குவரத்து துறைக்கு வழங்கவேண்டும். மீதமுள்ள 44 காசுகளை போக்குவரத்து துறை சமூக பொறுப்புணர்வு என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் இந்த 56 காசுகளைக் கூட அரசு கொடுப்பதில்லை என்பதுதான் பிரச்சனையே. அதோடு இலவசமாக பல்வேறு பிரிவினர் பயணிக்கின்றனர். அவர்களுக்கான செலவுத் தொகையையும் அரசு வழங்குவதில்லை. சென்னையில் வெள்ளம் வந்தபோது அரசு 3 நாட்களுக்கு இலவசமாக பேருந்துகளை இயக்கக் கூறியது. ஆனால் அதற்கான தொகையை துறைக்கு அரசு வழங்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் இழப்பீடுகளை வழங்கிய அரசு போக்குவரத்து துறைக்கு எவ்வித இழப்பீடுகளும் வழங்கவில்லை.

இந்நிலையில் அரசு பயணக் கட்டணத்தை உயர்த்தியது. அப்போதே நாங்கள் இவ்வளவு அதிகரிக்காதீர்கள் என்று கூறினோம். பயணக் கட்டணம் அதிகரித்ததால் தினமும் 25 லட்சம் பயணிகள் குறைந்து இப்போது 1 கோடியே 75 லட்சம் பேர் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 25 லட்சம் பயணிகள் ஒரு நாளைக்கு 10 ரூபாய்க்கு டிக்கட் வாங்கினாலே ஒருநாள் வசூல் 2.5 கோடிகள். கடந்த 8 மாதங்களில் ஏறத்தாழ 1000 கோடி ரூபாய் வசூல் பயணக் கட்டணம் அதிகரித்ததன் விளைவாக குறைந்துள்ளது.

சில இடங்களில் அரசுப் பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் கட்டணம் குறைவாக உள்ளது. மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு தனியார் பேருந்துகளில் ரூ. 44 ம் அரசுப் பேருந்துகளில் ரூ.56- ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசுப் பேருந்துகளுக்கு ஒருநாள் 18 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. ஆக ஒரு லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்தால் உடனடியாக 9 லட்சம் ரூபாய் அதிகப்படியாக செலவாகிறது. இப்படி ஒருபக்கம் பயணிகளின் வருகை குறைவு, டீசல் கட்டணம் அதிகரிப்பு, தொழிலாளர்களின் ஊதியம் இவற்றின் காரணமாக போக்குவரத்து துறை தொடர்ந்து பற்றாகுறையிலேயே நடந்து வருகிறது. இந்தியா முழுமைக்கும் ஒருலட்சம் பேருந்துகள் இயக்கப்படுகிறது இதில் தென்மாநிலங்களில் மட்டும் 80 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 22ஆயிரம் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுவதன் காரணமாக இன்று கிராமங்கள் நகரங்களோடு இணைக்கப்பட்டு பெருவளர்ச்சி கண்டுள்ளது. ஆக இந்த துறையில் லாப நட்ட கணக்குகள் பார்க்க முடியாது, இழப்புகள் என்று பார்க்கவும் கூடாது.

ஆகஸ்ட் 31 –ம் தேதி கணக்குப் படி 24 கோடி பயணக் கட்டணம் மூலமாக வசூலாகியுள்ளது. சராசரியாக 25 கோடிகள் முதல் 32 கோடிகள் வரை வசூலாகிறது. இதில் தினமும் 10 கோடி ரூபாய் பற்றாக்குறையாக இருந்து நீடிக்கிறது. காரணம் வசூலே இல்லாத வழித்தடங்களில், மலைப்பாதைகளில் போக்குவரத்து இயக்கப்படுவதால் பெருமளவு பற்றாக்குறை ஏற்படுகிறது. பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப் படுவதற்கு முந்தைய வசூலை கணக்கிடுவதானால் கடந்த வருடம் ஆகஸ்ட் 31 –ம் தேதி 20 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது என்றவர் நிறைவாக ஒன்றைக் கூறினார் அதீத கட்டண உயர்வின் காரணமாக 25 லட்சம் பயணிகள் குறைந்துவிட்டனர் இதனால் 1000 கோடி ரூபாய்க்கு மேல் போக்குவரத்து துறைக்கு வருவாய் குறைந்துள்ளது என்று ஆதங்கப்பட்டார் ஆறுமுக நயினார்.

English summary
Has Transport department Recovered its losses After fare Increase?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X