For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

21 திமுக எம்.எல்.ஏக்கள் விவகாரம்.. சட்டசபை உரிமைக் குழுவும், தமிழக அரசியலும்

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர். மணி

சென்னையில் ஆகஸ்ட் 28ம் தேதி கூடிய தமிழக சட்டமன்றத்தின் உரிமைக் குழு, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏ க்களுக்கு ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு கோரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. எதற்கு தெரியுமா? ஜூலை 19 ம் தேதி ஸ்டாலினும் மற்ற 20 திமுக எம்எல்ஏ க்களும் சட்டமன்றத்திற்குள் தடை செய்யப் பட்ட போதை தரும் பொருளான குட்காவை சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்து காட்டியதற்காகத் தான் இந்த நோட்டீஸ்.

''சென்னையில் குட்கா பெரியளவில் விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. சென்னையில் எவர் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பிய நேரத்தில் குட்காவை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு தடை செய்யப்பட்ட இந்த பொருள் கிடைக்கிறது. சென்னையில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சரியான ஆதாரம்'' என்று பேசினார் ஸ்டாலின்''. திமுக வின் வேறு சில எம்எல்ஏ க்களும் தாங்கள் கொண்டு வந்திருந்த குட்காவை இதே போல சபையில் எடுத்துக்காட்டினார்.

ஆளும் அஇஅதிமுக எம்எல்ஏக்கள் இதற்காக, அதாவது, தடை செய்யப் பட்ட குட்காவை சட்டமன்றத்திற்கே எடுத்துக் கொண்டு வந்து காட்டியது சபையின் உரிமையை மீறும் செயலாகும். எனவே ஸ்டாலின் மற்றும் சம்மந்தப்பட்ட திமுக எம்எல்ஏ க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தனர். உடனடியாக விவகாரத்தை தமிழக சட்டமன்றத்தின் உரிமைக் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் தனபால் அறிவித்து விட்டார்.

Privilege Committee politics in Tamil Nadu assembly

உரிமைக் குழுவில் மொத்தம் 17 எம்எல்ஏ க்கள் இருக்கின்றனர். அஇஅதிமுக சார்பில் 10, திமுக சார்பில் 5, காங்கிரஸ் சார்பில் ஒருவர் இதன் உறுப்பினர்கள். திமுக உறுப்பினர்களில் மு.க. ஸ்டாலினும் ஒருவர். உரிமைக் குழுவின் தலைவர் சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். இந்த விவகாரத்தை உரிமைக் குழு விசாரணைக்கு எடுத்த போது ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. காரணம் அவர் மீதும் உரிமை மீறல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டிருந்தது தான் என்கிறது ஆளும் தரப்பு.

இந்த நோட்டீஸூக்கு திமுக தரப்பு அளிக்கப் போகும் பதிலை பொறுத்து அடுத்த நடவடிக்கை அமையும். திமுகவின் 21 எம்எல்ஏ க்களை எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் சஸ்பெண்ட் செய்து, அதாவது சட்டமன்றத்திற்குள் வர அவர்களுக்கு தடை விதிக்கலாம். சிறை தண்டனை கொடுத்து சிறைச் சாலைகளுக்கு அனுப்பலாம். அவர்களுடயை எம்எல்ஏ பதவிகளை பறிக்கலாம். இவை எல்லாம் நடக்க சாத்தியமுள்ள விஷயங்கள்.

உரிமைக் குழு தன்னுடைய இறுதி அறிக்கையை சபாநாயகருக்கு அனுப்பும். அந்த அறிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டு அதன் பின்னர் தண்டனை அறிவிக்கப் படும். ஆனால் உரிமை மீறல் குழுவின் மீது சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுத்தாலும், அதனை எதிர்த்து பாதிக்கப் பட்ட தரப்பு உடனடியாக உயர்நீதி மன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ நாடலாம். உயர்நீதி மன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ உரிமைக் குழுவின் தீர்ப்புக்கு உடனடியாகவோ அல்லது சற்று காலந் தாழ்த்தியோ தடை விதிக்கலாம்.

உரிமைக் குழுவின் தீர்ப்பை முற்றிலுமாக ரத்து செய்யலாம். கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற எத்தனையோ சம்பவங்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடந்திருக்கின்றன. பல உயர்நீதி மன்றங்களும், சில வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உரிமைக் குழுவின் முடிவுக்கு தாற்காலிக தடையும், நிரந்தர தடையும் கூட விதித்திருக்கின்றன என்பதுதான் யதார்த்தம்

தங்கள் மீதான இந்த நடவடிக்கை ஏற்கனவே ஆட்சியை காப்பாற்ற தள்ளாடிக் கொண்டிருக்கும் அஇஅதிமுக அரசு செய்யும் ஓர் அரசியல் சூழ்ச்சி என்று கருதுகிறது திமுக.' 'ஏனெனில் டிடிவி தினகரன் அணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து செல்லும் எம்எல்ஏ க்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான். எடப்பாடியை உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி தனது பெரும்பான்மையை அவர் நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவுக்கு திமுக, காங்கிரஸ் மற்றும் இதர சில கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.

ஒருவேளை தினகரன் தரப்பில் தற்போது உள்ள 22 அஇஅதிமுக எம்எல்ஏ க்களும் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தாலும், திமுக வின் 21 எம்எல்ஏ க்களின் தாற்காலிக அல்லது நிரந்தர பதவிநீக்கம் தங்கள் அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தையோ அல்லது நம்பிக்கை இல்லா தீர்மானத்தையோ சந்திக்க நேர்ந்தால், அந்த வாக்கெடுப்பில் தங்கள் அரசை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்'' என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத எடப்பாடிக்கு விசுவாசத்துடன் இருக்கும் அமைச்சர் ஒருவர்.

நாடு விடுதலை அடைந்த இந்த 70 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டமன்ற உரிமைக் குழுவுக்கும், எதிர்கட்சிக்ளுக்கும், பத்திரிகைகளுக்கும் இடையே நடந்த மோதல்கள் உலகப் பிரசித்தி பெற்றவை என்றுதான் சொல்ல வேண்டும். 1984 ம் ஆண்டு ''ஆனந்த விகடன்'' ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன் மீது ஒரு உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காரணம் ''ஆனந்த விகடன்'' எம்எல்ஏ க்களை இழிவுபடுத்தும் வகையில் அதனது முகப்பில் ஒரு கேலிச் சித்திரத்தை வெளியிட்டது என்பதுதான். அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனையை கொடுத்தது உரிமை குழு.

ஆனால் சிவில் சமூகம் மற்றும் பத்திரிகையாளர்களின் போராட்டங்கள் போன்றவற்றால் ஏப்ரல் 4, 1987 ல் கைதான பாலசுப்பிரமணியன் ஏப்ரல் 6 ம் தேதியே அதாவது இரண்டே நாட்களில் அன்றையை எம்ஜிஆர் அரசால் விடுதலை செய்யப் பட்டார். இதே போல வணிக ஒற்றுமை என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஏ.எம். பால்ராஜ் என்பவருக்கு அன்றைய சபாநாயகர், அரசாங்கத்தை எதிரத்து எழுதியதற்காக 3 மாத கால கடுங் கால சிறை தண்டனையை விதித்தார்.

1991 ம் ஆண்டு பதவிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக ஆட்சியில் உரிமைக் குழுவுக்கும், நீதித் துறைக்கும் இடையே பெரிய மோதல்களை உருவாகின. 1989-ல் அன்றைய ''இல்லஸ்டிரேடட் வீக்லி'' என்ற பத்திரிகையின் சென்னை செய்தியாளர் கே.பி. சுனில் தமிழக சட்டமன்றத்தை பற்றி எழுதிய ஒரு கட்டுரைதான் இதற்கு காரணம். சுனிலுக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து அன்றைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தீர்ப்பளித்தார். ஆனால் சுனில் போலீஸ் வருவதற்கு முன்பே தலைமறைவாகி, அடுத்த நாளே உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். உச்ச நீதிமன்றம் உடனடியாக சுனிலை கைது செய்ய தடை பிறப்பித்தது. அதற்கடுத்த நாள் சட்டமன்றம் கூடிய போது மீண்டும் ஒரு முறை சுனிலை கைது செய்ய அன்றைய சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்திரவிட்டார் சபாநாயகர். உடனே மீண்டும் விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார் சுனில். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், தங்கள் உத்தரவை யார் மீறினாலும் அவர்கள் அதற்கான கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று எச்சரித்தது. அத்துடன் அந்த விவகாரம் முடிந்தது.

1994 ல் திமுக வின் அதிகாரபூர்வ ஏடான ''முரசொலியின்'' ஆசிரியர் செல்வத்தை, சட்டசபைக்கு இதற்கென்றே பிரத்தியேகமாக கொண்டு வரப்பட்ட ஒரு கூண்டில் ஏற்றி, அவர் மீது இந்த சட்டமன்றம் உங்களுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறது என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. 1994 ல் திமுக பேச்சாளர் காலஞ்சென்ற வெற்றிகொண்டான் மீது அஇஅதிமுக வின் பெண் எம்எல்ஏ க்கள் பற்றி அவதூறாக பேசினார் என்று குற்றஞ் சாட்டி உரிமைக் குழு அவருக்கு 15 நாள் சிறைத் தண்டனை வழங்கியது. ஆனால் உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தை வெற்றிகொண்டான் நாடி, உரிமைக் குழுவின் தீர்ப்புக்கு தடை வாங்கி விட்டார். விவகாரம் அத்துடன் முடிந்தது.

2001 - 2006 அஇஅதிமுக ஆட்சியில் 2003 நவம்பர் மாதம் ''தி ஹிந்து' ஆங்கில நாளேட்டின் அன்றைய ஆசிரியர் என்.ரவி உள்ளிட்ட அந்த நாளேட்டின் மொத்தம் ஐந்து பத்திரிகையாளர்களுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்தது தமிழக சட்டமன்ற உரிமைக் குழு. ஒரு வெள்ளிக் கிழமை மதியம் நான்கு மணி அளவில் இந்த தண்டனை அறிவிக்கப் பட்டது. அதில் ஒருவர் அப்போது லண்டனில் இருந்தார். மற்ற நால்வரும் எப்படியோ விஷயத்தை தெரிந்து கொண்டு தீர்ப்புக்கு ஒரு மணி நேரம் முன்பே சென்னையை விட்டு தப்பிச் சென்று விட்டனர். மறுநாள் சனிக்கிழமை இரவு ''தி ஹிந்து'' சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.சி. லஹோத்தி வீட்டில் கைது நடவடிக்கைக்கு தடை கோரி மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே முறையிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கு திங்கட் கிழமை காலையில் உச்ச நீதிமன்றம் கூடியதும் முதல் வழக்காக எடுத்துக் கொள்ளப் படும் என்று அறிவித்தார். ஆனால் கைது நடவடிக்கைக்கு நேரடியாக தடை விதிக்கவில்லை. இருந்த போதிலும் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் தமிழக போலீஸ் சம்மந்தப் பட்ட நால்வரையும் கைது செய்ய எந்த முயற்சியும் விடுவிக்கவில்லை.

இந்த வழக்கை திங்கட்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம் உடனடியாக உரிமைக் குழுவின் தீர்மானத்துக்கு தடை விதித்து, ஐந்து பத்திரிகையாளர்களுக்கும் ஜாமீன் வழங்கியது.

சட்டமன்றத்தின் உரிமை குழுவுக்கு வானாளவிய அதிகாரம் உள்ளது என்று கூறுவார் பி.எச். பாண்டியன். அது ஓரளவுக்கு உண்மையும் கூடத்தான். ஆனால் அப்பட்டமாக இயற்கை நீதி மறுக்கப் படும்போது பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றங்களை நாடினால் உரிமை குழுவின் தீர்ப்பை நிறுத்தி வைக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு என்பதுதான் கடந்த 30 ஆண்டுகளில் நாட்டுக்கு கிடைத்த பாடம்.

அதேபோல எம்எல்ஏ க்களுக்கு எதிராக உரிமைக் குழு தீர்ப்பளித்தாலும் அதிலும் சில வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உரிமைக் குழு மற்றும் சம்மந்தப்பட்ட சட்டசபையின் சபாநாயகரின் உத்திரவுகளுக்கு தடை விதித்திருக்கிறது. உரிமைக் குழுவின் முடிவுகளை முற்றிலுமாக ரத்து செய்தும் இருக்கிறது.

2011 -2016 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விஜயகாந்தின் தேமுதிக கட்சியின் ஆறு எம்எல்ஏ க்களுக்கு விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டு, 10 மாதங்களாக எம்எல்ஏ க்களாக செயற் பட முடியாமல் இருந்த காலத்திற்கான அவர்களுடையை மாத சம்பளம் மற்றும் இதர படிகளையும் அவர்களுக்கு உடனடியாக வழங்க உத்திரவிட்டது.

இறுதி அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்குத் தான், சட்டமன்றத்துக்கு கிடையாது என்பதுதான் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் நடைபெற்ற பல சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

இன்று ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏ க்களுக்கு எதிரான உரிமைக் குழுவின் அடுத்த தொடர் நடவடிக்கைகள் என்ன மாதிரியான முடிவுகளை, மாற்றங்களை தமிழக அரசியலிலும், நீதித் துறையிலும் கொண்டு வரப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
An analysis on Tamil Nadu's assembly privilege committee decisions on Political leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X