For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.ஐ.டி.களில் கட்டாயமாகும் சமஸ்கிருத பாடம் .... கி.வீரமணி கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தி எதிர்ப்பைவிட மிகவும் முன்னுரிமை கொடுத்து எதிர்க்கப்பட வேண்டியது சமஸ்கிருதத் திணிப்பு தான், இதை தமிழ்நாட்டுக் கட்சித் தலைவர்கள், மொழிப் பற்றாளர்கள், இன உணர்வாளர்கள் மறந்து விடக் கூடாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வேதங்களிலும், பல்வேறு ஹிந்து புராண நுல்களிலும் இடம்பெற்றுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்துக்களை படிக்க வசதியாக, நாடு முழுவதும், அய்.அய்.டி.,களில் சமஸ்கிருத மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமஸ்கிருத மொழி வாயிலாக, ஹிந்து புராண நூல்களில் உள்ள தொழில்நுட்ப, அறிவியல் விஷயங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், வேதங்கள் மற்றும் புராண நூல்களில் இடம்பெற்றுள்ள விஷயங்களை, பாடவாரியாக போதிக்க வேண்டும்.

நவீனகால படிப்புகளாக விளங்கும், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பாக, வேதங்களில் கூறப்பட்டுள்ளவிஷயங்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக, அய்.அய்.டி., இந்திய அறிவியல் மய்யம், மத்திய பல்கலை.கள், அனைத்து பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில், சமஸ்கிருத பிரிவுகள் துவக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐஐடிகளில் சமஸ்கிருதம்

ஐஐடிகளில் சமஸ்கிருதம்

இந்த பரிந்துரை அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள அய்.அய்.டி., கல்வி மய்யங்களுக்கு அனுப்பிய உத்தரவில், ‘வேதங்களில் கூறப்பட்டுள்ள அறிவியலை, மாணவர்கள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில், சமஸ்கிருத மொழியை பயிற்றுவிக்க, தனி பிரிவு துவக்கப்பட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. லோக்சபாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்து மூலம் அளித்த பதிலில், இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

தமிழில் ஏன் கூடாது?

தமிழில் ஏன் கூடாது?

அய்.அய்.டி.,களில், சமஸ்கிருத மொழியை போதிப்பதற்கு, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்.,சின் கொள்கையை திணிக்கும் வகையில், மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளதாக, இடதுசாரி மற்றும் காங்., கட்சிகள் கூறியுள்ளன. டில்லி மாநில துணை முதல்வரும், ஆம் ஆத்மி ‘கட்சி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா, சமூக வலைதளமான, ‘டுவிட்டரில் மத்திய அரசின் முயற்சியை, கிண்டலடித்துள்ளார். ‘மத்திய அரசு, கம்ப்யூட்டர் மொழியை, தேசவிரோதமானது என அறிவித்து விடலாம்' என, தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., டி.ராஜா கூறுகையில், ‘'சமஸ்கிருதம் மட்டும் ஏன்? தமிழ் மொழியை ஏன் பயன்படுத்தக்கூடாது? ஆர்.எஸ்.எஸ்., கொள்கைப்படி, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட வேண்டும்,'' என்றார். காங்., மூத்த தலைவர் பிரமோத் திவாரி, ‘'அய்.அய்.டி., இன்ஜினியருக்கு, அவர் தொழிலில், சமஸ்கிருதம் அவசியமாக இருக்காது. இதுபோன்ற விஷயத்தை திணிப்பது சரியல்ல,'' என்றார்.

மேலே கண்ட செய்தி இன்றைய நாளேடுகளில் குறிப்பாக (‘தினமலர்' 27.4.2016 பக்கம் - 12) வந்துள்ள செய்தியாகும்.

செத்த மொழிக்கு முன்னுரிமை

செத்த மொழிக்கு முன்னுரிமை

மத்தியில் ஆட்சியிலுள்ள ஆர்.எஸ்.எஸ். ஆணையை தலைமேல் தாங்கி, அவ்வமைப்பின் வழிகாட்டுதலின்படியே செயல்பட்டு வரும் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசின், மத்திய மனித வளத் துறையின் கட்டாயத் திணிப்பாக, முதலில் தங்களின் நேரடி நிர்வாகத்தின்கீழ் இயங்கும் அய்.அய்.டி. என்ற மத்திய என்ஜினியரிங் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் (இவைகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆகும்) "செத்த மொழியான" - ஆரிய மொழியான நாட்டு மக்களில் ஒரு சதவிகிதம்கூட பேசாத மொழியான சமஸ்கிருதத்தைப் பாடமாக வைக்க வேண்டுமென்று ஆணை பிறப்பித்துள்ளது!

கேலிக்கூத்து

கேலிக்கூத்து

ஒவ்வொரு அய்.அய்.டி. நிர்வாகக் கழகத்திற்கும் (பல்கலைக் கழகங்களில் உள்ளதுபோல) தனி ஆளுமைக் குழு, கல்விக் குழு உள்ளன. எத்தகைய பாட திட்டங்களை அவர்கள் போதிப்பது என்பதை, மத்திய கல்வி அமைச்சகம் (மனித வளத் துறை) ஆணையிடுவது பல்கலைக் கழகங்களின் கல்விச் சுதந்திரத்தை அறவே பறிப்பதும், தன்னாட்சியைக் கேலிக் கூத்தாக்குவது ஆன செயலாகும். இதற்கு வேடிக்கையான காரணம் கூறப்படுகிறது. வேத விஞ்ஞானம் படிக்க இது உதவுமாம்! அப்படி ஒரு விஞ்ஞானம் உள்ளதா?

புராண குப்பைகள்

புராண குப்பைகள்

புராண இதிகாசங்களில் புதைந்துள்ள தொழில் நுட்பங்களையெல்லாம் இந்த சமஸ்கிருத பாஷையை கற்றுக் கொள்வதன் மூலம் அய்.அய்.டி. மாணவர்கள் மிகவும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளுவார்களாம்!

புராணங்களில் விஞ்ஞானத் தத்துவங்கள் இருக்கின்றன என்று சிலர் கூறியபோது தந்தை பெரியார் நறுக்கென்று அரிசிக் கடையில் அரிசி விற்கிறது; அதை வாங்குவதைவிட்டு, மலத்தில் அரிசி பொறுக்கலாமா என்று கேட்டார்.

அரசியல் சாசனத்துக்கு எதிரானது

அரசியல் சாசனத்துக்கு எதிரானது

இது நமது அரசமைப்புச் சட்டம் கூறியுள்ள "விஞ்ஞான மனப்பான்மையைப் பெருக்குவது, சீர்திருத்தம் அடைவது, கேள்விகேட்டு அறிவை விசாலப்படுத்துதல், மனிதநேயம்" - இவைகளுக்கு முற்றிலும் எதிரானது இது!

தங்களிடம் ஆட்சி, அதிகாரம் சிக்கிக் கொண்டது என்பதற்காக, "தேவபாஷை" என்று பீற்றிக் கொண்டு இதனை அய்.அய்.டி.களில் வைப்பதன் மூலம், சமஸ்கிருத பண்டிதர்களான பார்ப்பனர்கள் - பலருக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கலாம்.

மேலும் புராணங்களை, பழைய கள், புதிய மொந்தை என்பது போல ஆய்வு என்ற பேரில் உயர் தொழில் நுட்பக் கல்லூரி - பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதத்தைத் திணித்து, ஒரு ஆரியப் பண்பாட்டை நிகழ்த்தலாம் என்று திட்டமிட்டே இதனைச் செய்கின்றனர்!

அன்றும் இப்படித்தான்...

அன்றும் இப்படித்தான்...

ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி அய்யங்கார், சமஸ்கிருத பரப்புக்குழுவின் தலைவர் சில வாரங்களுக்கு முன்பு கட்டாயமாக திணிக்க மாட்டோம் என்று கூறியதற்கு நேர்மாறானது இச்செயல்; இப்படித்தான் முன்பு டாக்டர் பட்டத்திற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை - மனு போடவே - இருந்தது; நீதிக்கட்சி ஆட்சியில், (சமஸ்கிருத எம்.ஏ. படித்த) முதல்வர் பனகல் அரசரே அதனை ஒழித்தார் - தந்தை பெரியார் போன்றவர்களது முயற்சியினால்!

அடுத்து சிபிஎஸ்இ மத்திய பள்ளிகள் மூலம்; அதற்கடுத்து எல்லா பள்ளிகளிலும் கட்டாயம் என்று ஆணைகளையும் அனுப்பத் தயங்க மாட்டார்கள். மிகப் பெரிய ஆபத்து இது; ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் முதல் தாக்குதல்; இதனை துவக்கத்திலேயே அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து விரட்டி அடிக்க வேண்டும்!

சூழ்ச்சி பொறியும் கூட...

சூழ்ச்சி பொறியும் கூட...

பார்ப்பன உயர் ஜாதி மாணவர்களுக்கு மேலும் அய்.அய்.டி. கதவு திறக்கவும், அவர்களை வெற்றி பெற வைக்கவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்ற மாணவர்களை அழுத்தி மட்டம் தட்டவும்கூட இச்சமஸ்கிருத திணிப்பு மறைமுகமாகவும், உதவக் கூடும். இது பண்பாட்டுப் படையெடுப்பு மட்டுமல்ல; ஒரு சூழ்ச்சிப் பொறியும்கூட.

இதனை மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் அனைவரும் அணி திரண்டு எழுந்து எதிர்த்து ஒழிக்க வேண்டும்.

சமஸ்கிருத திணிப்பை எதிர்ப்போம்

சமஸ்கிருத திணிப்பை எதிர்ப்போம்

‘சமஸ்கிருத நாள்' கொண்டாடும்படி முன்பு தமிழ்நாட்டில் ஆழம் பார்த்து - எதிர்ப்புக் கிளம்பியவுடன் பின் வாங்கிக் கொண்டது மத்திய மனிதவளத் துறை - நினைவிருக்கிறதா?

மே 16 தேர்தல் முடிந்த பிறகு மிகப் பெரியதொரு எதிர்ப்பினை தமிழ்நாட்டில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து திராவிட மாணவர்களையும் திரட்டி, அற வழிக் கிளர்ச்சிகளை நடத்தும் என்பதையும் தெரிவிக்கிறோம்.

இந்தி எதிர்ப்பைவிட மிகவும் முன்னுரிமை கொடுத்து எதிர்க்க வேண்டியது இந்த சமஸ்கிருதத் திணிப்பு என்பதை தமிழ்நாட்டுக் கட்சித் தலைவர்கள், மொழிப் பற்றாளர்கள், இன உணர்வாளர்கள் மறந்து விடக் கூடாது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Dravidar kazhaka president Veeramani has said that Protest against Sanskrit is more important now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X