For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக மீனவர்களை விடுவிக்க.. இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் - வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கையில், "தமிழக மீனவர்களையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் சிங்கள கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. ஆனால் எங்களது நட்பு நாடு என்று சொல்லுகிற மத்திய அரசோ, இந்த நாட்டின் குடிமக்களாகிய தமிழக மீனவர்களை விடுதலை செய்த துளி நடவடிக்கையும் எடுக்காமல் மவுனியாக இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

Protest in Chennai for TN fishermen

தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் பல முறை மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பியும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களிடம் நேரில் தெரிவித்தும் கூட மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையுமே மேற்கொள்ளவில்லை.

அதுவும் இந்த மார்ச் மாதத்தில் நாள்தோறும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்து சிறைச்சாலைகளில் அடைத்து வருகிறது. கடந்த 9 ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள், சிங்கள கடற்படையால் 10 ஆம் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள காரை நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த 12 ஆம் தேதி இரவு பாம்பன் மீன்பிடித் தளத்திலிருந்து 3 நாட்டுப் படகுகளில் சென்ற 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டனர். மறுநாள் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் அதிகாலை கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நாட்டுப் படகில் சென்ற மீனவர்கள் ஆழ்கடலில் போய் மீன்பிடித்தார்கள் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி அவர்களையும் கைது செய்திருக்கிறது சிங்கள கடற்படை. இதுவரை மொத்தம் 96 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது 84 படகுகளும் உபகரணங்களும் இலங்கை வசம் உள்ளன.

96 தமிழக மீனவர்களையும் அவர்களது 84 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பல முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு கண்டுகொள்ளாமலே இருந்து வருகிறது. இலங்கை சிறையில் வாடும் அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது வாழ்வாதராமான படகுகளையும் உடனே விடுதலை செய்யக் கோரி வரும் வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு மாபெரும் கண்டன போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்த இருக்கிறது.

இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் பெருந்திரளாக அனைவரும் பங்கேற்று நம் மீனவர்களின் விடுதலையை வென்றெடுக்கவும் மீன்வர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கவும் உரத்து குரல் கொடுப்போம்! போராடுவோம்!! என அன்புடன் அழைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
TVK will protest for TN fishermen and their boats before Sri lankan embassy in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X