ஜெயலலிதா வழக்கு எதிரொலி: கன்னடர் பற்றிய போஸ்ட்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப தடை- தமிழக டிஜிபி
சென்னை: கன்னடர்களுக்கு எதிராக போஸ்டர்கள் அடிப்பதோ, சமூக வலைத்தளங்களில் அதை ஷேர் செய்வதோ கூடாது என்று தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் தமிழகத்திலுள்ள கன்னடர்கள் சிறை வைக்கப்படுவார்கள் என்று சென்னையில் அதிமுக நிர்வாகிகள் சிலர் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதுகுறித்த செய்தி வெளியானதும், பெங்களூர் போலீஸ் கமிஷனர் ரெட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை போனில் தொடர்புகொண்டு அந்த போஸ்டர்களை அகற்ற கேட்டுக்கொண்டார். இதையேற்று சென்னையில் போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் இருமாநில பிரச்சினையாக இது உருவெடுப்பதை தொடர்ந்து, தமிழக டிஜிபி ராமானுஜம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இருமாநில மக்களிடையே பிரச்சினையை உருவாக்கும் வகையிலான போஸ்டர்களை யாரும் பிரிண்ட் செய்ய கூடாது என்று அச்சு தொழில்செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கன்னடர்களுக்கு எதிரான போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ய கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஷேர் செய்து கன்னடர்களுக்கு பீதியை உருவாக்கினால், ஐபி அட்ரசை வைத்து, விஷமிகளை கைது செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.