புதுச்சேரி 100 அடி சாலை "டாக்டர் கலைஞர் சாலை" என பெயர் சூட்ட முடிவு
புதுச்சேரியில் பிரதான சாலைகளுக்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள இரு முக்கிய சாலைகளுக்கு மறைந்த கருணாநிதியின் பெயர் சூட்ட உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி மீது எப்போதுமே அதிக பற்றும் மரியாதையும் உடையவர் முதலமைச்சர் நாராயணசாமி. சமீபத்தில் புதுச்சேரியில் திமுக சார்பில் நடைபெற்ற கருணாநிதியின் புகழஞ்சலி விழாவில் நாராயணசாமி கலந்துகொண்டதுடன், தோல்வியை கண்டு கலங்காத தலைவர் கருணாநிதி, அகில இந்திய அளவில் தனது செல்வாக்கை பயன்படுத்தி பிரதமர்களை உருவாக்கும் தகுதி பெற்றவர் என்று புகழாரம் சூட்டினார்.
முழு வெண்கல சிலை
புதுச்சேரி அரசு சார்பில் கருணநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று கருணாநிதி இறந்த ஒரு சில தினங்களிலேயே நாராயணசாமி அறிவித்தார். அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள இரு முக்கிய சாலைகளுக்கு கருணாநிதியின் பெயர் சூட்டவும் முடிவு செய்துள்ளார்.
27 விவகாரங்கள்
நாராயணசாமி தலைமையில் நேற்றிரவு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதுவை அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. 27 விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கவும், ஆலோசிக்கவும் பட்டது. அதில் முதன்மை அம்சமானது, பிரதான சாலைகளுக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது குறித்து ஆகும். இதுகுறித்து நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டாக்டர் கலைஞர் சாலை
"புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலை - ராஜீவ்காந்தி சிலை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிக்கு "டாக்டர் கலைஞர் சாலை" என்று பெயர் சூட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலையில் ஒரு இருக்கை
அதேபோல, காரைக்கால்-திருநள்ளாறு பைபாஸ் சாலை, பட்ட மேற்படிப்பு மையத்திற்கும் கருணாநிதி பெயரை சூட்ட முடிவு செய்துள்ளோம். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் ஒரு இருக்கை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது."
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.