For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வை சந்திக்க காத்திருக்கும் புதுவை எம்.எல்.ஏ.க்கள்... உதயமாகிறது என்.ஆர்.காங் (ஜெ) அணி?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அரசுக்கு ஆதரவளித்து வரும் சுயேட்சை எம்.எல்.ஏ. சிவக்குமார், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று திடீரென சந்தித்து பேசினார். அ.தி.மு.க.வில் சிவக்குமார் விரைவில் சேர உள்ளதாகவும் அவரைத் தொடர்ந்து ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலரும் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாகவும் வெளியாகி உள்ள தகவல் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

புதுச்சேரியில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களிலும் அ.தி.மு.க. 5 இடங்களிலும் வென்றது.

30 உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி சட்டசபையில் ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வுடன் ஆதரவுடன் ஆட்சி அமைக்காமல் சுயேட்சை எம்.எல்.ஏ. சிவக்குமார் ஆதரவுடன் ரங்கசாமி முதல்வரானார்.

அதிமுகவுடன் மோதல்

அதிமுகவுடன் மோதல்

இதனால் என்.ஆர்.காங்கிரஸ்- அ.தி.மு.க. கூட்டணி முறிந்தது. ரங்கசாமியை ஆதரித்த சுயேட்சை எம்.எல்.ஏ. சிவக்குமார் தி.மு.க.வில் இருந்தவர். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படாததால் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார்.

ரங்கா மீது அதிருப்தி

ரங்கா மீது அதிருப்தி

இந்த நிலையில் புதுச்சேரியில் அண்மையில் ஒரு இடத்துக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காரைக்காலை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. சிவக்குமார் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ரங்கசாமி இதை நிராகரித்ததால் அவர் அதிருப்தி அடைந்தார்.

எம்.எல்.ஏக்களும் அதிருப்தி

எம்.எல்.ஏக்களும் அதிருப்தி

அதேநேரத்தில் ஒரு ராஜ்யசபா இடத்தை பாரதிய ஜனதாவும் கோரியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அதிருப்தி அடைந்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏக்களுடன் இணைந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனை ராஜ்யசபா தேர்தலில் நிறுத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

அதிமுகவிடம் சரண்

அதிமுகவிடம் சரண்

இந்த வியூகத்தால் ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்த முதல்வர் ரங்கசாமி திடீரென அ.தி.மு.க.வுக்கு தூதுவிட்டார். அ.தி.மு.க.வும் ரங்கசாமியின் சமாதானத்தை ஒருவழியாக ஏற்று அவர் பரிந்துரைத்த தொழிலதிபர் கோகுலகிருஷ்ணனை கட்சியில் சேர்த்து ராஜ்யசபா எம்.பி.யாக்கிவிட்டது.

உதயமாகிறது என்.ஆர்.காங்(ஜெ) அணி

உதயமாகிறது என்.ஆர்.காங்(ஜெ) அணி

எனினும் கடந்த சட்டசபை தேர்தல் முடிந்த உடன் கூட்டணியில் இருந்து கழற்றிவிட்ட ரங்கசாமிக்கு பதிலடி கொடுப்பதற்கு அ.தி.மு.க. தற்போது தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தேர்தலின் போது கூட்டணியில் இருந்துவிட்டு பின்னர் கழன்று கொண்ட தே.மு.தி.க.வை உடைத்து எப்படி தே.மு.தி.க.(ஜெ) அணி உருவாக்கப்பட்டதோ அதேபோல் தற்போது புதுவையில் என்.ஆர்.காங் (ஜெ.) அணியை உருவாக்க அ.தி.மு.க. பக்கா ப்ளான் போட்டு வருகிறது.

சுயேட்சை எம்.எல்.ஏ. சந்திப்பு

சுயேட்சை எம்.எல்.ஏ. சந்திப்பு

இதன் முதல் கட்டமாக ரங்கசாமிக்கு ஆதரவு அளித்து வரும் சுயேட்சை எம்.எல்.ஏ. சிவக்குமார், அண்ணா தி.மு.க.வில் இணைய இருக்கிறார். அவர் சென்னையில் நேற்று தமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலருமான ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. எனது 80% ஆதரவாளர்கள், நான் சுயேட்சையாக இருப்பதை விட அ.தி.மு.க.வில் சேருவதையே விரும்பினர். அதை அம்மா அவர்கள்தான் முடிவு செய்வார்கள் என்றார்.

என்.ஆர்.காங். அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

என்.ஆர்.காங். அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

தற்போது சிவக்குமாரைத் தொடர்ந்து ரங்கசாமி மீது அதிருப்தியில் இருக்கும் பல என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதாவை சந்திக்க காத்திருக்கின்றனராம்.. போயஸ் தோட்டத்தில் இருந்து சிக்னல் கிடைத்த உடன் ஒவ்வொருவராக ஜெயலலிதாவை சந்தித்து "வாழ்த்து பெற" உள்ளனர் என கூறப்படுகிறது.

இதனால் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் (ஜெ) அணி ஒன்று விரைவில் உதயமாவது உறுதியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் பலத்தை அதிகரித்து எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற திட்டத்தோடு அ.தி.மு.க. காய்களை நகர்த்தி வலைகளை விரித்து வைத்திருக்கிறது. அ.தி.மு.க.வின் இந்த வியூகத்தால் புதுச்சேரி அரசியலில் சூறாவளி மையம் கொள்ள தொடங்கியுள்ளது.

இனி விஸ்வரூபம்தான்!

English summary
The lone independent candidate in Puducherry Sivakumar who supports NR Congress government, called on AIADMK general secretary and TN CM J Jayalalithaa in Chennai on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X