• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை: செல்வம், ஆயுள், ஆரோக்கியம் தரும் பெருமாள் விரதம்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: செல்வ வளம் வேண்டி விரதம் இருப்பவர்கள் பலர், ஆரோக்கியம் வேண்டி விரதம் இருப்பவர்கள் சிலர், நீண்ட ஆயுள் வேண்டி இறைவனை நாடுபவர்கள் இருக்கின்றனர். ஆனால், செல்வம், ஆயுள், ஆரோக்கியம் என மூன்று பலன்களையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய விரதம் ஒன்று இருக்கிறது என்றால் அது புரட்டாசி சனிக்கிழமை விரதம்தான் என்கின்றனர் ஆன்மீக ஞானிகள்.

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று. இந்த விரதத்தை அனுஷ்டிக்க பெரிய அளவுக்கு காசு, பணம் தேவையில்லை. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள்.

Purattasi Saturday rituals receive the blessings of Vishnu

பல கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் வைடூரியம் என கொட்டிக்கிடக்கும் திருமலை ஏழுமலையான் சன்னதியில் பெருமாளுக்கு நிவேதனம் படைப்பது சாதாரண மண்சட்டியில்தான் படைக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதற்கும் சனிக்கிழமை விரதத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? இதற்கு அழகான கதை ஒன்று உள்ளது.

சீனிவாச பெருமாள் கதை

தசாவதாரங்கள் எடுத்த பின்பும், உலகில் பாவங்கள் குறையவில்லை. எனவே, பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார். இவ்வூரின் அருகிலுள்ள கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்தார். இவர், சீனிவாசனின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார்.

பெருமாளிடம் வேண்டுதல்

தனது விரதத்திற்கு பலனாக, 'மிக உயர்ந்த செல்வம்' வேண்டும் என, அவர் பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார். பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக வசிக்க வேண்டும் என்பது தான் அவரது வேண்டுதல். இவர் தினமும் மண்பாண்டம் செய்வார் அல்லவா... பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்க மாட்டார். அந்த மண்ணைக் கொண்டு சிறு, சிறு பூக்கள் செய்வார்.

மண்பூக்கள் அர்ச்சனை

திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு, ஏடுகுண்டல வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, பத்மநாபா, சீனிவாசா... என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களை தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார்.

தங்கப் பூக்கள்

திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தான் தொண்டைமான் எனும் மன்னன். அவன் ஒருநாள் ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றான். பெருமாளுக்கு தூவுவதற்காக அவன் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தான். அங்கு போய் பார்த்த போது, மண்பூக்களாகக் கிடந்தன. தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ என சந்தேகப்பட்டான். எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டான்.

மன்னன் கண்காணிப்பு

மறுநாள் அவன் சன்னிதிக்கு வந்தான். அப்போதும், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்தன. குழம்பிப் போன அவனது கனவில், சீனிவாசன் தோன்றினார். "மன்னா... பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்ககளால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும், மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன...' என்றார்.

சனிக்கிழமை விரதம்

மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றான் மன்னன். அவர், பெருமாளின் மண்சிலைக்கு மண் பூக்களைத் தூவிக் கொண்டிருந்தார். "எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்துப் பூக்கள் கூட கிடைக்கவில்லையா?' என்றான். "அரசே... நான் பரம ஏழை. இந்த வேலையை விட்டு, விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில் தவிக்கும். அதனால் தான், என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன். மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும் தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்...' என்றார்.

மன்சட்டியில் நிவேதனம்

இதைக் கேட்ட தொண்டைமான் மனம் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு பணம் கொடுத்தான். ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக் குயவர். நிஜ பக்திக்கு உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார். இதனால் தான், இப்போதும் திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சனீஸ்வர பகவான்

சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கேடுப்பாரும் இல்லை என சோதிடம் கூறுகின்றது.இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

சனிதோஷம்

சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.

சனிக்கிழமை விரதம்

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும். எப்படி இருக்க வேண்டும். சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம் என்கின்றனர்.

English summary
Lord Vishnu descended into the Earth plane in human form of Venkateshwara during the Tamil Month of Purattasi. Participate in the Purattasi Saturday rituals and receive the blessings of Vishnu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X