வெள்ளம் வடிந்தது.. 48 மணி நேரத்திற்கு பிறகு ஒளிபரப்பை தொடங்கிய புதிய தலைமுறை, ஜெயா பிளஸ்!
சென்னை: வெள்ள நீர் புகுந்ததால், நேற்று முன்தினம் முதல் செயல்படாமல் இருந்த புதிய தலைமுறை மற்றும் ஜெயா பிளஸ் செய்தி சேனல்கள் 48 மணி நேரத்திற்கு பிறகு இன்று ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.
புதிய தலைமுறை மற்றும் ஜெயா பிளஸ் ஆகிய இரு சேனல்களுமே, சென்னை, ஈக்காடுந்தாங்கல் பகுதியில், காசி தியேட்டருக்கு ஓரளவு அருகில் உள்ளன.

நேற்றுமுன்தினம் மாலை ஏரி நீர் அதிக அளவுக்கு திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, ஈக்காடுந்தாங்கல் ஏரியாவிற்குள்ளும் புகுந்தது. இந்த வெள்ளநீர் பெருமளவுக்கு, இவ்விரு சேனல் அலுவலகங்களுக்குள்ளும் புகுந்தது.
அடையாறு ஆற்றங்கரையில்தான் இந்த இரு அலுவலகங்களும் அமைந்துள்ளன. அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் புதிய தலைமுறை, ஜெயா தொலைக்காட்சி அலுவலகங்களில் வெள்ளம் புகுந்தது. பல அடி உயரத்துக்கு அங்கு வெள்ள நீர் தேங்கியது
இதனால், நேற்றுமுன்தினம் மாலை முதல் இவ்விரு சேனல்களும் ஒளிபரப்பை நிறுத்தின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, செய்திகளை ஒளிபரப்ப முடியவில்லை என்ற அறிவிப்பு மட்டும் வெளியானது. இந்நிலையில், ஜெயா டிவி காலையிலேயே ஒளிபரப்பை துவங்கிய நிலையில், ஜெயா பிளஸ் சேனல் மாலையில் ஒளிபரப்பை தொடங்கியது.
இதேபோல புதிய தலைமுறை சேனலும், மாலை முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. இருப்பினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவ்வப்போது புதிய தலைமுறை சேனல் ஒளிபரப்பில் இடைஞ்சல் ஏற்பட்டது.
இரு அலுவலகங்களிலும் வெள்ள நீர் வடிந்துள்ளதாக அதன் ஊழியர்கள் தெரிவித்தனர். பாதுகாப்புக்காக, ஜெயா தொலைக்காட்சி சேனல் ஆபீஸ் வெளியே, பெருமளவுக்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மழை காரணமாக 2ம் தேதி சென்னையில், தி ஹிந்து எடிசன் நிறுத்தப்பட்டது. அப்பத்திரிகையின் 138 வருட வரலாற்றில் எடிசனை நிறுத்தியது, அதுதான் முதல் முறை. மழை பெய்தால் டிஷ் ஆன்டனாக்களில் நீர் படிந்து டிவிகளில் சேனல்கள் தெரியாமல் சில நிமிடங்கள் போகும்.
ஆனால், டிவி சேனலே 2 நாட்கள் ஒளிபரப்ப முடியாமல் போனது இதுதான் முதல்முறை.