For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைதியாக போராடியவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதா? - மநகூ கண்டனம்

அமைதிப் போராட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது தமிழக அரசும் காவல்துறையுமே என மக்கள் நல கூட்டியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு அனுமதி கோரி அமைதியாக போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது தமிழக அரசும் காவல்துறையுமே என்று சிபிஎம், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அடங்கிய மக்கள் நலக் கூட்டியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் கடந்த 9 நாட்களாக அறப்போராட்டம் நடத்தி வந்தனர். திடீரென இன்று அதிகாலையிலிருந்து மாணவர்களையும், இளைஞர்களையும் போராட்டக்களங்களிலிருந்து கலைப்பதற்கு ஜனநாயக நெறியற்ற முறைகளில் தமிழக அரசு - காவல்துறை ஈடுபட்டது. தமிழகமெங்கும் ஆங்காங்கே தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவியுள்ளது.

 PWF Condemnes lathi charge in marina

சென்னை மெரினா கடற்கரையில் போராடியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முனையாமல் பல்லாயிரக்கணக்கில் காவல்துறையினரைக் குவித்து வன்முறைகளை ஏவி வெளியேற்றியுள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, தீ வைப்பு போன்ற நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் அலங்காநல்லூர், கோவையில் காந்திபுரம் ஆகிய இடங்களிலும் காவல்துறையினர் இதே முறையில் அடக்குமுறைகளை ஏவியுள்ளனர். குறிப்பாக கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் அமைதியான முறையில் போராடியவர்கள் மீதும் தடியடி நடத்தியுள்ளனர்.

காவல்துறையின் இத்தகைய கொடூரத் தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையில் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களைக் குறிவைத்து காவல்துறையினர் வீதி, வீதியாக - வீடு, வீடாகப் புகுந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

குறிப்பாக மெரினா பகுதியில் அயோத்தியாக்குப்பம், நடுக்குப்பம், ஐஸ் அவுஸ், ரூதர்புரம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஐஸ் அவுஸ், ரூதர்புரம் போன்ற பகுதிகளில் காவல்துறையினரே பொதுச்சொத்துக்களிலும், பொதுமக்களின் உடைமைகளிலும் தீ வைத்துள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒருவார காலமாக மிகவும் அமைதியாகப் போராடியவர்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்திய இந்தக் கொடூரமான வன்முறைத் தாக்குதல் முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். தமிழக அரசின், காவல்துறையின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான அத்துமீறல்களை மக்கள் நலக் கூட்டியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தொடர்ந்து மெத்தனம் காட்டி வரும் மத்திய பாஜக அரசின் போக்கே அடிப்படையான காரணமாகும். காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்குவதற்கு ஏற்றவாறு சட்டத் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளாததுதான் தமிழகத்தில் உருவான பெரும் கொந்தளிப்புக்கு காரணமாகும்.

எனவே இன்றைய நெருக்கடி நிலைமைகளுக்கு மத்திய, மாநில அரசுகளும், தமிழகக் காவல்துறையுமே முழுப்பொறுப்பு என மக்கள் நலக் கூட்டியக்கம் சுட்டிக்காட்டுகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் வரலாறு காணாத எழுச்சிமிகு அறப்போராட்டத்தின் விளைவாகவே இன்று மாநில அரசு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து, சட்டசபையின் சிறப்பு அமர்வைக் கூட்டி, அதனை சட்டமாக நிறைவேற்றியுள்ளது.

இது வெகுமக்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியே ஆகும்!. இதற்காகப் போராடிய மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மக்கள் நலக் கூட்டியக்கம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

அறவழியில், அமைதி வழியில் நடந்த இப்போராட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது தமிழக அரசும், காவல்துறையுமே ஆகும். மாறாக, தீவிரவாத, சமூகவிரோத சக்திகள் ஊடுருவினார்கள் என்று யார் மீதோ பழிபோட முனைவதையும், திசைதிருப்புவதையும் மக்கள் நலக் கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அத்துடன், காவல்துறையினரின் தாக்குதலால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உரிய சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீது புனையப்பட்டுள்ள பொய்வழக்குகளைத் திரும்ப பெற வேண்டுமெனவும் தமிழக அரசை மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் வற்புறுத்துகிறோம்.

English summary
People's Welfare Front Condemnes on police men lathi charge in marina
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X