For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: தமிழக எதிர்க்கட்சிகளுக்கு ஒரு திறந்த மடல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்கேநகர் இடைத் தேர்தல் நெருங்கும் நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது. ராமசாமி போட்டியிட தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தால், அது ஒரு பெரும் அரசியல் புரட்சியாகவே பார்க்கப்படும்.

திணிக்கப்பட்ட தேர்தல்

திணிக்கப்பட்ட தேர்தல்

ஒரு வித்தியாசமான அரசியல் சூழலில் ஆர்கே நகர் இடைத் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த தேர்தல் திணிக்கப்பட்ட ஒரு தேர்தல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக வேட்பாளருக்கே வாக்களித்து வெற்றிவேலை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு அவர் அளித்த பரிசு ராஜினாமா கடிதம்.

கவுரவ பிரச்சினை

கவுரவ பிரச்சினை

ஜூன் 27ம் தேதி, ஆர்கே நகருக்கு இடைத் தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்ட நிலையில், வெற்றிவேலுக்கு பதிலாக வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா களம் காணப்போகிறார். இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்கு கவுரவப் பிரச்சினை எனும்போது, முதல்வரே போட்டியிடும் தொகுதியை ஆளும் கட்சி எப்படிப் பார்க்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆளும் கட்சி உழைப்பு

ஆளும் கட்சி உழைப்பு

ஒட்டுமொத்த பலமும் ஒரே தொகுதியில் காண்பிக்கப்படும். தொகுதி மக்கள் அன்போடு 'கவனிக்கப்படுவார்கள்'. அதே 'அன்பை' எதிர்க்கட்சிகள் எடுத்துக் கொண்டு சென்றால் அடித்து விரட்டப்படுவார்கள். ஸ்ரீரங்கம் தொகுதியில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்றுக்கொடுத்து அபார பலத்துடன் ஆட்சியில் அமரச் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதாவுக்காக ஆளும் கட்சியினர் அபாரமாக உழைப்பார்கள். இதற்கு காவல் துறையினரும் அரசு அதிகாரிகளுடன் முழு உதவியையும் செய்வார்கள்.

தற்காப்பு தந்திரம்

தற்காப்பு தந்திரம்

இந்த அமளி துமளிக்கு அஞ்சியே, உங்களில் பல எதிர்க்கட்சிகள் போட்டியே வேண்டாமப்பா சாமி.. என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்பது மக்கள் அறிந்ததே. முக்கிய கட்சிகளான திமுக, விடுதலை சிறுத்தைகள் வெளிப்படையாகவே இதை அறிவித்துவிட்டன. மற்ற கட்சிகளும் பதுங்கியபடியே மிரட்சியோடு பார்த்துக் கொண்டுள்ளன. பொதுத் தேர்தலுக்கு அதிகபட்சம் ஓராண்டு மட்டுமே பாக்கியுள்ள நிலையில், சூடுபட்டுக் கொண்டு, தொண்டர்களை சுருண்டு போக செய்துவிட கூடாது என்று யோசிக்கும் எதிர்க் கட்சிகளின் தற்காப்பு தந்திரம் புரியாமல் இல்லை.

வீரனுக்கு அழகு

வீரனுக்கு அழகு

ஆனால், போராடி வீழ்பவனை விட, போராட பயந்து ஓடுபவனையே உலகம் பழிக்கும் என்பதை எதிர்க் கட்சிகள் உணர வேண்டும். போரில் புறமுதுகு காட்டுபவனைவிட, நெஞ்சில் வேல் பாய்ந்து வீழ்வதையே புகழென மார்தட்டுகிறது மறத்தமிழ் வரலாறு. ஆயிரம் காரணம் சொல்லி தேர்தலை புறக்கணித்தாலும், அஞ்சி ஓடியதாகவே ஆளும் கட்சி எக்காளம் அடிக்கும். அதுவே உண்மையென ஊரில் பாதி நம்பும்.

டிராபிக் ராமசாமி

டிராபிக் ராமசாமி

வீரமா, விவேகமா என்ற எதிர்க் கட்சிகளின் எண்ணப் போராட்டத்திற்கு, முடிவுகட்ட தானாக முன்வந்துள்ளார் ஒரு தவப் புதல்வன். 82 வயது இளைஞர் ராமசாமி என்ற டிராபிக் ராமசாமி. இந்தியன் தாத்தா. எந்த கட்சி தனியாக நின்றாலும், வேட்பாளரையை இனிமேல் தான் தொகுதி மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். ஆனால் ராமசாமி அப்படியல்ல. அந்த வகையிலும் இவரை பொது வேட்பாளராக்கினால் எதிர்க் கட்சிகளுக்கு பப்ளிசிட்டி செலவு மிச்சமே.

மக்கள் சேவகன்

மக்கள் சேவகன்

டிராபிக் ராமசாமி சமூகத்திற்காக என்ன கிழித்தார் என்று யாரும் கேட்க முடியாது. நடைபாதைகளில் மக்களை தொந்தரவு செய்யும் வகையில் ஆளும் கட்சியினரால் வைக்கப்படும் பேனர்களையும், போஸ்டர்களையும் பலமுறை கிழித்துள்ளார். பொதுமக்கள் நலனுக்காக 400க்கும் மேற்பட்ட மனுக்களை கோர்ட்டில் போட்டு பலவற்றில் வென்றும் காட்டினார். சென்னையில் பலர் செத்துப் போக காரணமாக இருந்து மீன்பாடி வண்டிகளை முற்றாக ஒழிக்க காரணகர்த்தாவும் இவரே. டிராபிக் போலீசாரின் லஞ்ச லாவண்யத்தை போட்டோ ஆதாரத்துடன் போலீஸ் கமிஷனுக்கு அனுப்பியவர். இதனாலேயே ஏகப்பட்ட வழக்குகளை சந்தித்து துப்பாக்கி பாதுகாவலர்கள் பாதுகாப்புடன் அசராமல் உழைப்பவர். இவருக்கு திமுக, அதிமுக என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. நியாயத்தை மட்டுமே பார்ப்பவர்.

உங்களுக்கு பாதிப்பில்லையே

உங்களுக்கு பாதிப்பில்லையே

ராமசாமியை பொதுவேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்தி அவர் தோல்வியே அடைந்தாலும், மண் ஒட்டப்போவது உங்கள் மீசையில் இல்லையே. ஆனால், தேர்தல் களத்தில் கடைசிவரை நின்றோம் என்ற புகழ் மலையளவு எழும்புமே. ஒருவேளை ராமசாமி டெபாசிட் வாங்கிவிட்டாலோ, அல்லது உலக அதிசயமாக, வென்றுவிட்டாலோ அதன்பின் எதிர்க் கட்சிகள் பாடு கொண்டாட்டம்தானே. ஓரணி கூட்டணிக்கு இது அச்சாரமாகவும் அமையுமே.

மக்களே முடிவு செய்யட்டும்

மக்களே முடிவு செய்யட்டும்

அதிகார மையத்துக்கும், ஒரு சாமானியக்கும் நடுவிலான போட்டியாக மாறும் இந்த தேர்தலை நாடே கவனிக்கும். 82 வயது தாத்தாவை வீழ்த்தினாலும் அந்த வெற்றியை விமரிசையாக கொண்டாட ஆளும் கட்சியினருக்கே கொஞ்சம் சங்கோஜமாகத்தான் இருக்கும். அந்த வகையிலும், ஆளும் கட்சிக்கு செக் வைத்தது போலத்தான் ஆகும். தங்கள் ஓட்டு அதிகார மையத்துக்கா, இல்லை, அச்சமில்லா முதியவருக்கா என்பதை 2,25,648 லட்சம் தொகுதி மக்களே முடிவு செய்யட்டும். பழம் நழுவி பாலில் விழுந்துள்ளது. எடுத்து புசிப்பது எதிர்க் கட்சிகளின் கையில்.

English summary
An open letter to Tamilnadu opposition parties regarding R.K.Nagar by election and Traffic Ramaswamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X