For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகு கேது பெயர்ச்சி: பரிகாரதலங்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், திருப்பாம்புரம், குன்றத்தூரில் உள்ள ராகு கேது பரிகாரத்தலங்களில் பக்கத்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து சிவன்கோவில்களிலும் ராகு- கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகாதீபாராதனையும் நடைபெறுவதால் சிறப்பு லட்சார்ச்சனையும், பரிகார பூஜைகளும் நடைபெறுகின்றன.

நவகிரகங்களில் ராகு பகவானை யோகக்காரகன் என்று அழைப்பர் யோகக் காலத்தை உருவாக்குபவரே ராகுதான். ஒரு ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இல்லையெனில் வாழ்க்கையில் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். வேதனையும், வெறுப்பும் அதிகமிருக்கும். நவகிரகங்களில் கேதுவை ஞானகாரகன் என்று அழைப்பர். தெளிவற்ற, நிம்மதியற்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள் கேதுவின் அருளால் சட்டென்று ஞானப் பாதைக்குத் திரும்புவார்கள். கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்; எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிக்கவேண்டியிருக்கும்.

Rahu Kethu peyarchi - Important Pariharam Temples

ஜோதிட ரீதியாக ஒருவர் உயர்வடைவதும், அதல பாதாளத்திற்குச் செல்வதும் ராகு-கேதுவால்தான். சூரிய, சந்திரரையே பலமிழக்கச் செய்யும் சக்தி இந்த இரு கிரகங்களுக்கும் உண்டு. பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப ராகு-கேது என்றால் நடுங்காதவர்களே இல்லை. சொந்த வீடோ, முறையான சுற்று வட்ட பாதையோ, எதுவும் இல்லாவிட்டாலும் எந்த கிரகத்தோடு சேர்கின்றார்களோ எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கின்றார்களோ எந்தெந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ அதற்கு தகுந்தாற் போல் ஆனால், அதே நேரத்தில் தனக்கென விதிக்கப்பட்ட பலனை தவறாமல் தருவதில் ராகு-கேதுவிற்கு ஈடு இணை யாரும் இல்லை.

வலியவனை எளியவனாக்குவதும், நல்லவனை, பொல்லாதவனாக்குவதும், தரமில்லாதவர்களை தரப்படுத்துவதும் இவர்கள் வேலைதான். ஷேர், ரேஸ், லாட்டரி மூலம் பிச்சாதிபதியை லட்சாதிபதியாக்குவது ராகுவின் வேலை.ஒருவரை பரதேசியாக்கி மெய் ஞானத்தை தருவது, கேதுவின் செயல். ராகுவும், கேதுவும் ஈடு இணையற்ற வல்லமைபொருந்திய கிரகங்கள் என ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தான். நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் மனிதர்களை நிழல் போல பின் தொடர்ந்து அவர்களின் ஏற்ற இறக்கங்களுக்கு காரணமாக இருக்கின்றன. உலகிலுள்ள அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கும் யோகத்தை தருபவர் ராகு. அதே நேரத்தில் பக்தி மார்க்கத்திற்கு அழைத்துச் சென்று இறைநிலையை ஏற்படுத்தி மோட்சத்திற்கு வழி காட்டுபவர் கேது.

ராகு - கேது பெயர்ச்சி

நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23ம் நாள் 08.01.2016 வெள்ளிக்கிழமை, கிருஷ்ணபட்சத்து சதுர்தசி திதி, மூலம் நட்சத்திரம், விருத்தி நாம யோகம், சகுனி நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்த யோக நாளில் நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கும், கேதுபகவான் மீன ராசியிலிருந்து, கும்ப ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ராகு, கேது பரிகார தலங்களை அறிந்து கொள்ளலாம். இந்த பரிகார தலங்களுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்யலாம்.

திருநாகேஸ்வரம்

திருநாகேஸ்வரம் நாகதோஷ பரிகாரத்தலம் நாகவல்லி-நாகக்கன்னியோடு, நாகநாதரின் அருள் சூழ, திருநாகேஸ்வரத்தில் மங்களமாக அமர்ந்திருக்கிறார், மங்கள யோக ராகு பகவான். கோயிலின் நிருதி மூலையில் நாகவல்லி-நாகக் கன்னியோடு கம்பீரமாய் வீற்றிருக்கிறார், ராகு பகவான். ராகு பகவானுக்கு தினமும் ராகு கால நேரத்தில் பாலபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறும். மூலவரான நாகநாதரின் கோயில் சோமாஸ்கந்தரின் அமைப்பையொட்டி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாகநாத சுவாமி, முருகன், பிறையணிவாள் நுதல் அம்மை சந்நதிகள் சிறப்புற அமைந்துள்ளன. கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.

நாகர்கோவில் - நாகராஜா

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் தனிச்சிறப்பு கொண்டது. மூலவர் இங்கு தண்ணீரிலேதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். பாம்பிற்காக எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தில் உட்கோயில் வாசலில் இருபக்கமும் ஐந்து தலையுடன் படமெடுத்த கோலத்தில் ஆறு அடி உயரத்தில் இரண்டு பெரிய பாம்பு சிலைகள் உள்ளன. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டு சென்றால் தோஷம் நிவர்த்தியாகிறது. நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையம், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் நாகராஜா கோயில் அமைந்துள்ளது.

திருபாம்புரம்

இத்தலத்தில் ஓருருவாகி ஈசனை நெஞ்சில் இருத்தி ராகுவும், கேதுவும் அருள் பெற்றார்கள் என்பது புராண வரலாறு. ஆகையால் இத்தலத்திலுள்ள சுவாமி, அம்பாள் மற்றும் ராகு-கேதுவை வணங்குபவர்களுக்கு பாபங்கள் நீங்கப் பெறுகின்றன; நினைத்த காரியம் கை கூடுகிறது. ராகுவும், கேதுவும் கோயிலின் ஈசான்ய மூலையில் தனிச் சந்நதியில் எழுந்தருளியுள்ளார்கள். ராகு கால வேளையில் இச்சந்நதியில் அபிஷேக அர்ச்சனை செய்வோர் தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறுகின்றனர். திருப்பாம்புரத்தில் பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை என்பது ஐதீகம். இன்றும் இவ்வூர் சுவாமி சந்நதி கருவறையில் அவ்வப்போது நாகம் வந்து வணங்குவதாக சொல்லப்படுகின்றது. திருவாரூர் மாவட்டம் குடவாசல்-பேரளம் வழியில் இருக்கிறது திருப்பாம்புரம்.

கவுந்தப்பாடி காளத்தீஸ்வரர்

ஈரோட்டிலிருந்து 18வது கிலோ மீட்டரில் கோபி-சத்யமங்கலம் பேருந்து பாதையில் உள்ளது கவுந்தப்பாடி. கவுந்தப்பாடிக்கு அருகே உள்ள மாரப்பாளையம் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு அரை கி.மீ. நடந்து சென்று, ராகு-கேது பரிகாரத் தலமாகத் திகழும் காளத்தீஸ்வரர் கோயிலைக் காணலாம். தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்திருக்கும் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து தம் பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள். இங்கு அம்பாள், பிரசன்ன நாயகியை ஞானப்பூங்கோதை என்றும், ஞானப் பிரசன்னாம்பிகை என்றும் அழைக்கிறார்கள். இறைவன் காளத்தீஸ்வரரின் கருவறைக்கு முன்னால் ராகு-கேது,கணபதி மற்றும் நால்வர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. ராகு-கேது தோஷங்களும், திருமணத் தடையும் இக்கோயிலுக்கு வந்து வணங்கும்போது நீங்கிவிடும் என்பது ஐதீகம். ஸ்ரீகாளஹஸ்தியிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் இவ்வாலயத்தில் வீற்றிருப்பது தனிச்சிறப்பு.

குன்றத்தூர் - நாகேஸ்வரர்

தோஷ பாதிப்புகளை நீக்கிக்கொள்ள குன்றத்தூர் தலத்தில் நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது. ஈடு இணையற்ற பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலம் இது. இத்தலத்தை வடநாகேஸ்வரம் என்று அழைத்தனர். கருவறையில் நாகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். தலைப்பகுதியில் சிறிதளவு பின்னப்பட்டிருந்ததால் நாகேஸ்வரரை திருக்குளத்தில் இட்டுவிட்டு அருணாசலேஸ்வரரை மூலவராக பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தனர், சிவனடியார்கள். அதனால் குளம் திடீரென ரத்தச் சிவப்பாயிற்று. சிவனடியார் கனவில் பழையபடி மூலவர் இடத்திலேயே நாகேஸ்வரரை பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவு வர, பக்தர்கள் மீண்டும் நாகேஸ்வரரை மூலவராகவும், அருணாசலேஸ்வரரை பிராகாரத்திலும், பிரதிஷ்டை செய்தனர்.

கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர்

போரூர் அருகில் உள்ள வட கீழ்ப்பெரும்பள்ளம் எனப்படும் கெருகம்பாக்கம் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் ஆலயமும் நாகதோஷம் போக்கும் சக்திவாய்ந்த ஸ்தலமாகும். கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரரை தரிசிக்கும்போது கேதுவினால் ஏற்படும் பிரச்னைகள் தீரும். இக்கோயிலில் கேதுபகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். இரு நாகங்கள் பின்னிப் பிணந்திருக்க, நடுவில் ‘காளிங்க நர்த்தன கண்ணன்'போல இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட வேளை கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்டவேளை பூஜைகள் விசேஷம். ஈசனுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போல் ஒரு சிற்பம் காணப்படுகிறது. இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடுபலன்கள் குறைகிறது. சென்னை அருகே போரூர்-குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் உள்ளது, இந்த ஆலயம். போரூர் சந்திப்பில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

கீழ்ப் பெரும்பள்ளம்

ராகு-கேது பெயர்ச்சியால், கேதுவால் ஏற்படக்கூடிய பாதகங்களுக்கு பரிகாரத் தலமாக கீழ்ப்பெரும்பள்ளம் விளங்குகிறது. சௌந்தரநாயகியுடன் நாகநாதசுவாமி அருள்பாலிக்கும் இந்த ஆலயத்தில் கேது பகவான் தனிச் சந்நதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கே, நாகநாதசுவாமி, வாசுகியின் வேண்டுகோளின்படி கேது கிரக தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்கிறார். கோயில் இருக்குமிடம் நாகநாதர் கோயில் எனவும், வாசுகி தவம் செய்த இடம் மூங்கில்தோப்பு எனவும் இன்றளவும் பெயர் வழங்கி வருகிறது. இத்தலத்தின் தலவிருட்சமும் மூங்கில்தான். கோயிலுக்கு முன்பாக நாகதீர்த்தக் கரையில் அரச மரமும் வேம்பும் இணைந்தே உள்ளதால் இங்குள்ள கேது சிலைகள் மீது மஞ்சளுடன் கூடிய தாலிக் கயிற்றைக்கட்டி வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். நாகை மாவட்டம், மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் தருமகுளம் என்ற இடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

பாமணி - நாகநாத சுவாமி

மன்னார்குடியை அடுத்த பாமணியில் அருள்பாலிக்கிறார் அருள்மிகு அமிர்தநாயகி சமேத நாகநாத சுவாமி. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு தென்பகுதியில் உள்ள சிறிய கிராமம்தான் பாமணி. ஒரு காலத்தில் திருபாதாளேச்சுரம் என்றும், பாம்பணி என்றும் அழைக்கப்பட்டது மருவி, தற்போது பாமணி என்றாகிவிட்டது. முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பேற்றபின் முதன் முறையாக போருக்கு செல்லுமுன் இக்கோயிலுக்கு வந்து நாகநாதரை தரிசனம் செய்துவிட்டு சென்றார். நாகநாத சுவாமி ‘சர்ப்பபுரீஸ்வரர்' எனவும் அழைக்கப்பட்டார். இதனாலேயே இத்தலம் நாகதோஷ நிவர்த்தி தலமாக விளங்கி வருகிறது. நாகநாத சுவாமி கோயிலில் உள்ள தனஞ்செயர், ராகு-கேது தோஷப் பரிகார மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

வாழை தோட்டத்து அய்யன்

கோவை -அவினாசி பாதையில் மோகனூர் அருகில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. ராகு-கேது பரிகார ஸ்தலம், பிரார்த்தனை ஸ்தலம். சோளிங்கரிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள பெத்த நாகபுடியில் நாகவல்லி சமேத நாக நாதேஸ்வரரை தரிசிக்கலாம். கொடு முடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ளது ஊஞ்சலூர். இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவர். காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர். இது, ராகு-கேது பூஜித்த தலமும் ஆகும்.

சென்னையில் ராகு கேது பரிகார தலங்கள்

ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும். சென்னை, மைலாப்பூரில் உள்ள முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு- கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.

இன்னும் எங்கெங்கு உள்ளது

பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி சந்நிதி உண்டு. இங்கு வழிபடலாம். திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அபிஷேகம் செய்யலாம். சீர்காழியில் சிரபுரம் பகுதியிலுள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இங்கும் வழிபடலாம். செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது ஸ்தலம் ஆகும். இங்கு வழிப்படலாம். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்- திருச்செந்தூர் பாதையில் உள்ள தொலைவில்லிமங்கலம் சென்று வணங்கலாம்.

English summary
The Temples worshipped by The Great Divine Serpent Adiseshan Neutralizes Rahu Ketu ill effects.The king of the nagas, Rahu prayed to Lord Siva and hence this place got the name Thirunageswaram. Here Rahu Bhagavan has manifested with both his consorts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X