For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கி பணம் கொள்ளை: ஈரோடு ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு போலீசாரிடம் விசாரணை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஈரோடு: வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் ஈரோடு ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வங்கிப்பணத்தை எடுத்துச் செல்ல ரயில் பெட்டி ஒதுக்கி கொடுத்த ஈரோடு ரயில்லே அதிகாரிகளிடமும், சேலத்தில் பணத்தை ரயிலில் ஏற்றியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வங்கி பணம் கொண்டு வரப்பட்டு ரயிலில் பாதுகாப்புக்கு வந்த 9 காவல் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உதவி ஆணையர் நாகராஜன் உள்பட 9 போலீசிடம் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Railway police grills railway staffs in train heist

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு காலை 6.35 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்த இரவு 9 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு, அதிகாலை 4.45 மணிக்கு வந்தடைகிறது.

சேலம் ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு இரவு 11.50 மணிக்கு வந்தது. அங்கிருந்து நள்ளிரவு 12.10 மணிக்கு புறப்பட்ட ரயில், சென்னைக்கு அதிகாலை 4.30 மணிக்கு சென்றுள்ளது. சேலத்திலிருந்து விருத்தாசலம் வரை டீசல் என்ஜினில் இயக்கப்படும் ரயில் விருத்தாசலத்திலிருந்து மின்சார ரயிலாக மாற்றப்படுகிறது.

இந்த ரயிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகள் உள்ளிட்ட தேசிய வங்கிகளின் சுமார் ரூ. 342.75 கோடி மதிப்பிலான பழைய, கிழிந்த, அழுக்கு படிந்த நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் செலுத்த 226 மரப்பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டன.

இதற்கென தனி பெட்டி ரயிலுடன் இணைக்கப்பட்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் போலீஸார் முன்னிலையில் சீலிடப்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஆயுதப் படை உதவி ஆணையர் நாகராஜன், ஆய்வாளர் கோபி, 2 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமைக் காவலர்கள், 4 காவலர்கள் என 9 பேர் ஈடுபட்டிருந்தனர்.

செவ்வாய்க்கிழமை காலை சென்னை எழும்பூர் சென்றடைந்ததும், ரயில் பெட்டியைத் திறந்த அதிகாரிகள், பெட்டியின் மேற்கூரையில் ஆள் புகும் அளவில் துளை போடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், இரண்டு மரப் பெட்டிகளில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டதும் தெரியவந்தது.

எனவே, இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள ரயில்வே போலீஸார், செவ்வாய்க்கிழமை மாலை விருத்தாசலம் சந்திப்பு ரயில் பாதைகளில் ஆய்வு செய்தனர். மேலும் இரவு நேர ரயில்வே ஊழியர்கள், உணவக ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர்.

விருத்தாசலம் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் நாகராஜன் மற்றும் ரயில்வே இருப்புப் பாதை ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான தனிப்படையினர் விருத்தாசலம்-விழுப்புரம் இடையே ரயில் வழித்தடத்தில் டிராலியில் சென்று விசாரணை செய்தனர்.

சேலம் டிஐஜி நாகராஜ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறார்கள். பார்சல் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் இவர்கள் பயணித்துள்ளனர். கொள்ளையர்கள் ரயிலின் மேற்கூரையை வெல்டிங் மிஷின் மூலம் ஒரு ஆள் செல்லும் அளவுக்கு துளை போட்டுள்ளனர்.

இந்த சத்தம் அடுத்த பெட்டியில் இருந்து காவல்துறையினருக்கு தெரியவில்லை. சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரயில் டீசல் என்ஜின் மூலமே இயக்கப்பட்டுள்ளது. விருத்தாசலத்தில் ரயிலை நிறுத்தி இன்ஜின் மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து ரயில் இங்கிருந்து புறப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட இடங்களில்தான் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சென்னை மண்டல கமிஷனர் அஷ்ரப் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மாநில ரயில்வே போலீஸாரும் ஐ.ஜி. ராமசுப்பிரமணி தலைமையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். டி.ஐ.ஜி. பாஸ்கரன், சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 8 தனிப்படையினர், கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.

சீலிடப்பட்ட இந்த ரயில் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் சேலம் மாநகர ஆயுதப்படையைச் சேர்ந்த ஆயுதப்படை உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர், 2 சப்இன்ஸ்பெக்டர், 2 தலைமைக்காவலர்கள், 4 காவலர்கள் என 9 பேர் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீஸாரின் செல்போன்களை பெற்று தனிப்படை போலீஸ் விசாரணை செய்தனர்.

பணம் நிரப்புவதற்காக ஈரோட்டில் இருந்து ரயில் பெட்டி கொண்டு வரப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொள்ளை நடந்த ரயில் பெட்டியின் மீது அமர்ந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே 4 பேரின் கைரேகைகள் சிக்கியுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சேலம் ரயில் நிலையத்தில் பணம் இறக்கும் பணியில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களிடமும், வங்கி ஊழியர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
Police are probing the Erode railway officials and security persons on the Train heist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X