For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செத்து போயிருவோம்னு நினைச்சோம்... ஆனா தப்பிச்சிட்டோம்... உயிர் பிழைத்தவர்களின் கண்ணீர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: " என் கண் முன்னே வீட்டிற்குள் தண்ணீர் வருகிறது. கால்களில் தண்ணீர் ஏற கட்டில் மீது ஏறி அமர்ந்தோம்... வேகமாக வெள்ளநீர் வீட்டிற்குள் வர தப்பிப்பிழைத்து மாடியில் ஏறினோம்... கடல் மாதிரி சுத்தி வெள்ளம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு 3 நாட்கள் காத்திருந்தோம். அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது செத்து விடுவோம் என்று நினைத்த எங்களை ராணுவத்தினர் படகில் வந்து மீட்டு வந்தனர்" என்று வெள்ளத்தில் தப்பி உயிர் பிழைத்து, கிடைத்த வாகனத்தில் ஏறிச் சென்று கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளவர்கள் கண்ணீர் மல்க தங்களின் திகில் அனுபவங்களை கூறி வருகின்றனர்.

வரலாறு காணாத மழை சென்னை மக்களை புரட்டி போட்டு விட்டது. பலருக்கும் உயிர் மட்டுமே மிச்சமிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர். வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் அவர்களது வேதனையை தொலைபேசி வாயிலாக கேட்கும் போதே நெஞ்சை பதறவைக்கிறது. கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து வாங்கிய பொருட்கள் எல்லாம் ஒரே நாளில் தண்ணீரில் சென்றுவிட்டது.

மரணத்துடன் போராடி உயிர் பிழைத்தவர்கள், சொன்னதை அப்படியோ பதிவு செய்கிறோம்.

வெள்ளச்சேரியான வேளச்சேரி

வெள்ளச்சேரியான வேளச்சேரி

நான் பழம் வியாபாரம் செய்கிறேன் இப்போதுதான் வேளச்சேரியில் வீடு வாங்கினேன். எனது வீடு தரை தளத்தில் உள்ளது. கீழ் தளத்தில் இரண்டு வீடு. மேல் தளத்தில் இரண்டு வீடுகள் உள்ளது. கடந்த புதன் கிழமை காலையில் வியாபாரத்திற்கு செல்வதற்காக அதிகாலையில் எழுந்துவிட்டேன்.

மழையோ விடாமல் பெய்து கொண்டிருந்தது. சில மணிநேரத்தில் என் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. எப்போதும் போல வீட்டுக்கு வெளியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி பின்னர் வடிந்து விடும் என்று அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தண்ணீரின் வேகம் அதிகரிக்க தொடங்கியது. நிமிஷத்துக்கு நிமிஷம் தண்ணீரின் உயரம் அதிகரிக்க தொடங்கியது. வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டது.

வீட்டிற்குள் புகுந்த வெள்ளம்

வீட்டிற்குள் புகுந்த வெள்ளம்

தண்ணீர் குறைந்துவிடும் என நினைத்துக் கொண்டிருந்த போதே வேகமாக தண்ணீர் புகுந்தது. உடனடியாக எனது மனைவி, குழந்தைகளை மொட்டை மாடிக்கு அனுப்பிவிட்டு ரேசன் கார்டு, அலுவலக ஐடி கார்டு உள்ளிட்ட ஒரு சில ஆவணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு செல்வதற்குள், வீட்டுக்குள் நின்று கொண்டிருந்த என்னை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் உயர்ந்துவிட்டது. அதிர்ச்சியில் உறைந்து போன நான் வீட்டை வேகமாக பூட்டிவிட்டு மொட்டை மாடிக்கு உயிர் பயத்தில் ஓடி தப்பினேன். இந்த சம்பவங்கள் அனைத்தும் 1 மணி நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது.

மொட்டை மாடியில் தஞ்சம்

மொட்டை மாடியில் தஞ்சம்

மாடிக்கு சென்ற நான் மனைவி, குழந்தையை பார்த்துவிட்டு கீழே வீட்டில் நிலையை அறிவதற்காக கீழே வந்தேன். அதற்குள் வீடு முழுவதுமாக மூழ்கி முதல் மாடி வரை தண்ணீர் வந்துவிட்டது. எங்கும் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த எங்களை காப்பாற்ற யாரும் வரவில்லை.
செல்போன் செயல்படவில்லை. மழை பெய்த அன்று இரவு முழுவதும் பசிக் கொடுமையால் குடும்பமே தவித்துக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் வரை தண்ணீரின் வேகம் கொஞ்சம் கூட குறையவில்லை. கீழ்வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

விடிய விடிய மரண ஓலம்

விடிய விடிய மரண ஓலம்

சிறு குழந்தைகள் எல்லாம் உயிர் பயத்தில் அழுது துடித்தனர். செத்து விடுவோமோ என்று குழந்தைகள் கேட்டுக் கொண்டிருந்தனர். இதுபோன்று பக்கத்து மாடிகளில் இருந்து பெண்களின், குழந்தைகளின் அழுகை விடிய விடிய கேட்டுக் கொண்டே இருந்தது.

அமிர்தமான சோறு

அமிர்தமான சோறு

இரண்டு நாட்கள் கஞ்சி மட்டும் குடித்து வந்த எங்களுக்கு தண்ணீர் ஓரளவு வடிந்த நிலையில் படகுகளில் வந்து சாப்பாடு பொட்டலம் கொடுத்தனர். 3 நாட்களுக்கு பின்பு சாப்பாட்டை பார்த்த எங்களுக்கு அது அமிர்தம் போல இருந்தது. சாப்பிட்டு விட்டு படகிலேயே தப்பி வந்தோம். கோயம்பேடு வந்து மதுரைக்கு பஸ் ஏறிய பின்னர்தான் உயிரோடு இருக்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு அக்காவின் வீட்டில்தான் நிம்மதியாக உறங்கினேன்.

இனி என்ன செய்வேன்

இனி என்ன செய்வேன்

வீட்டுக்கும் சேறும், சகதியும்தான் இனி இருக்கும் டிவி, கட்டில், மெத்தை என எல்லாம் வீணாப் போச்சு. புதுசா வாங்கின பைக் தண்ணீரில் ஒரு வாரமா மூழ்கி கிடக்கிறது. எப்படி.. திரும்பவும் எனது வாழ்க்கையை எப்படி மீட்கப்போகிறேன் என்பது தெரியவில்லை. மறுபடியும் அந்த வீட்டிற்குப் போய் வாழ முடியுமா என்று தெரியவில்லை என்கிறார் வெள்ளத்தில் உயிர் தப்பியவர்.

சென்னையே வேண்டாம்

சென்னையே வேண்டாம்

இவரைப்போல பலரது கதையும் கேட்கும் போதே கண்களின் ஓரம் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது. அரசு நிவாரணமாக கொடுக்கும் சில ஆயிரங்களை வாங்கக் கூட வழியில்லை. ஏனெனில் சென்னைக்கு போகலாம் என்று கூறினாலே அழுது துடிக்கின்றனர் பல குழந்தைகள். இனி சென்னைக்கு திரும்ப முடியுமா என்பதே பலருக்கு கேள்விக்குறியாக இருக்கிறது.

English summary
Chennai Rain and flood affected several people life. Intermittent rains in the city in areas like Kodambakkam, T Nagar, Adyar and Kotturpuram and Velacherry threatened to revive the ghost of flooding again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X