For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் பாஜக வளர குறுக்கு வழியில் உதவுகிறார்களா ரஜினி, கமலும்? கி.வீரமணி பரபரப்பு அறிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பாஜகவுக்கு உதவ முற்படுவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டு அரசியலில் நுழையப் போவதாகவும், முதல் அமைச்சர் ஆகப் போவதாகவும் சினிமாத் துறையில் புகழ்பெற்ற இரு முக்கிய பிரமுகர்கள் அறிவித்துள்ளனர். ஒருவர் ரஜினிகாந்த், இன்னொருவர் கமலகாசன்.

அரசியலில் யாரும் நுழையலாம், முதல் அமைச்சர் ஆகவும் ஆசைப்படலாம். அதனைத் தவறாகக் கருத முடியாது அரசியல் சட்டப்படி. என்ன நிபந்தனை என்றால், (1.) 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். (2.) பைத்தியம் பிடிக்காதவராக இருக்க வேண்டும். (3) இன்சால்வெண்ட்டாக இருக்கக் கூடாது. அவ்வளவே!
அரசியலில் நுழையட்டும், நாட்டுப் பிரச்சினைகளில் நேரிடையாக ஈடுபடட்டும். தாங்கள் வைத்திருக்கும் கொள்கைகளை - திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துக் கூறட்டும்!

போராடவில்லை

போராடவில்லை

பிரசாரம் செய்யட்டும், களப்பணிகளில் இறங்கட்டும், போராட வேண்டிய தருணத்தில் போராட்டத்தில் குதிக் கட்டும், அதற்காகச் சிறை செல்ல நேர்ந்தால், அதனைச் சிரித்த முகத்தோடு ஏற்றுக் கொள்ளட்டும்! (சினிமாவில் சிறைக்குள் செல்லுவது என்பது வேறு!) இவற்றை எல்லாம் எதுவும் செய்யாமல், பொது வாழ்க்கையில், நாட்டுப் பிரச்சினைகளில் ஒரு சிறு ‘துரும்பை'க்கூடக் கிள்ளிப் போடாதவர்கள் நேரடியாக ஆட்சியைப் பிடிப்போம், முதல் அமைச்சர் கிரீடத்தைச் சூட்டிக் கொள்வோம் என்று சொல்லுவதெல்லாம் வெறும் சிறுபிள்ளைத்தனம் என்று சொல்ல முடியாது, மக்கள் ஏமாளிகள், முட்டாள்கள், சினிமாத்துறையில் தங்களுக்கு இருக்கும் கவர்ச்சியும், ரசனையும், ஈர்ப் பும் போதும் - அதுவே நம் கைமுதல், மக்கள் தம் வலையில் வீழ்வார்கள் என்ற நினைப்பு ஆபத்தானது - மோசமானது - நேர்மையற்றதும்கூட!
இதற்கு முன் சினிமாக்காரர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் போதும் - போதும்; இனியும் அந்த நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது.

அண்ணா, கருணாநிதிக்கு சினிமா கருவி

அண்ணா, கருணாநிதிக்கு சினிமா கருவி

‘‘அறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கருணாநிதியும் கலைத்துறையில் ஈடுபடவில்லையா? சினிமாத் துறையைக் கையில் எடுத்துக்கொள்ளவில்லையா'' என்று சிலர் கேள்வி எழுப்பக் கூடும். அவர்கள் கலையைக் கையில் எடுத்துக் கொண்டது தங்கள் கொள்கையை மக்கள் மத்தியில் பரப்பிடவே, அதனை ஒரு கருவியாகக் கொண்டனர். அதுவே அவர்களுக்குப் பிரதானம் அல்ல! மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம், பகுத்தறிவுப் பிரச்சாரம், பெண்ணுரிமை, சமத்துவ உணர்வு, திராவிடர் பண்பாடு இவைகளைப் பரப்புவதற்குக் கலை ஒரு தலைசிறந்த சாதனம் என்கிற அளவில்தான் கலையை அவர்கள் கையாண்டனர். அவர்களுக்காக ரசிகர் மன்றங்கள் உருவாக வில்லை. மாறாக, மக்கள் மத்தியில் அவர்கள் பரப்பிய கொள்கைகளின்பால் மக்கள் ஈர்க்கப்பட்டனர்.

நடிப்பதற்கும், தனி வாழ்விற்கும் தொடர்பில்லை

நடிப்பதற்கும், தனி வாழ்விற்கும் தொடர்பில்லை

சினிமாவில் கதாநாயகனாக நடித்து, நல்லவனாகவும், வல்லவனாகவும் (கற்பனைதான்) தன்னை உருவகப்படுத்தித் திட்டமிட்ட வகையில் மக்கள் மத்தியில் இடம்பெறும் யுக்தி என்பது வேறு. மக்கள் மத்தியில் உள்ள பாமரத்தன்மையை இலாவகமாக பயன்படுத்துகின்றனர். சினிமாவில் நடிப்பதற்கும், அவர்களின் தனி வாழ்விற்கும் சம்பந்தம் இல்லை என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? அதிலும் சினிமாவில் வில்லனாக எவ்வளவு சிறப்பாக நடித்தாலும், அவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரமுடியாது.

மக்கள் மத்தியில் ஊடுருவினார் எம்ஜிஆர்

மக்கள் மத்தியில் ஊடுருவினார் எம்ஜிஆர்

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக வந்தது பல நடிகர்களின் நாக்கில் எச்சிலை ஊற்றெடுக்கச் செய்தது. கதர்ச் சட்டைக்காரராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.க.விலிருந்து சிவாஜி கணேசன் அகன்ற இடைவெளியைப் பூர்த்தி செய்து, சினிமாவில் தி.மு.க கொடியைக் காட்டியது முதல், வசனம், பாடல்கள் வரை மிகவும் கவனம் செலுத்தி, மக்கள் மத்தியில் ஊடுருவினார் என்பதுதான் உண்மை. உடனடியாக அரசியலில் நுழைந்து விடவில்லை. பின்னணியில் தி.மு.க. என்ற பலம்வாய்ந்த ஓர் அரசியல் கட்சி கொள்கைகள் இருந்தன. அவர் முதல்வர் ஆனது - யாரிடமும் இல்லாத கொள்கைக் கோட்பாடு, உன்னத இலட்சியங்கள், திட்டங்கள் அவரிடம் இருந்தன என்பதால் அல்ல. சினிமாவில் உத்தமபுத்திரராக அவர் நடித்ததாலும், சண்டைக் காட்சிகளும்தான் அதற்கு மூலவித்தாக இருந்தன. (அண்ணா அவர்களே எம்.ஜி.ஆரை வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்தினார் - அது தவறாக முடிந்தது).

திராவிட கொள்கையற்ற எம்ஜிஆர்

திராவிட கொள்கையற்ற எம்ஜிஆர்

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் திராவிட இயக்கக் கொள்கையின் அடிப்படையிலோ, அறிஞர் அண்ணாவின் சிந்தனை அடிப்படையிலோ ஆட்சி நடத்தினார் என்று சொல்ல முடியாது. சீர்திருத்தவாதி என்றிருந்த அந்த நிறமும் முற்றிலும் சிதிலம் அடைந்தது. மூகாம்பிகைப் பக்தராக தன்னைக் காட்டிக் கொண்டார். அதன் எதிரொலி கட்சியின் இலட்சக்கணக்கான தொண்டர்கள் வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. "ராஜாஜியின் சொல்கேட்டு அரசியல் கட்சியை ஆரம்பித்தேன், சங்கராச்சாரியார் ஆலோசனையின் அடிப்படையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினேன்" என்று சொல்லும் அளவுக்கு திராவிட இயக்கக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்தார். பொருளாதார அளவு கோலை இடஒதுக்கீட்டுக்குக் கொண்டு வந்தார். கட வுளே இல்லை என்று சொன்ன பெரியார், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்லியிருப்பாரா என்று கேட்டார் என்றால், அவர் எந்த அளவுக்குத் தந்தை பெரியாரைப் புரிந்துகொண்டவர் - நாட்டு நடப்பை எந்தளவிற்குத் தெரிந்துகொண்டு இருந்தவர் என்பதற்கான சாட்சியமாகும். பொருளாதார வளர்ச்சி, நாட்டுநலத் திட்டங்கள் என்பதில் குறிப்பிடத்தக்க மிகப் பெரிய சாதனை என்று சொல்லுவதற்கும் ஏதுமில்லை - அவர்தம் ஆட்சியில்!

முதல் பரிசு ஜெயலலிதாவுக்கு

முதல் பரிசு ஜெயலலிதாவுக்கு

எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபோது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆக்கப் பட்ட செல்வி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவிற்குப் பிறகு முதல்அமைச்சராகி - கட்சியின் - ஆட்சியின் சர்வாதிகாரியாக நிலைபெற்று, திரா விட இயக்கத்தின் அடிப்படை முற்போக்கு - பகுத் தறிவுச் சிந்தனைகளை எல்லாம் சீர்குலைத்ததில் அவருக்குத்தான் ‘முதல் பரிசு!' மண்சோறு சாப்பிடுவது, யாகம், ஜோசியம், வாஸ்து, தங்கத்தேர் இழுப்பது என்று எவற்றையெல்லாம் பார்ப்பனீயம் என்று தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், திராவிடர் இயக்கச் சித்தாந்தமும் பட்டியலிட்டதோ, அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து சிம்மாசனத்தில் ஏற்றியதில் இவருக்கு நிகர் இவர்தான்! நெற்றியில் திருநீற்றுப் பட்டை, அதில் ஒரு குங்குமம், ஜோசியப்படி கைகளில் கத்தைக் கத்தையாக வண்ணவண்ணக் கயிறுகள் - இவைதான் அ.இ.அ.தி. மு.க.வின் ‘அக்மார்க் அடையாளம்' என்று ஆக்கப்பட்டு விட்டன. இதனுடைய பாதிப்பு தி.மு.க வரை ஓரளவு சென் றுள்ளது என்றாலும், கட்சித் தலைவர் என்ற முறையில் கருணாநிதி கண்டிக்கவும், சுட்டிக்காட்டவும் தவறவில்லை.

சினிமா பாணி

சினிமா பாணி

செல்வி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இலவச திட்டங்களில் கவனம் செலுத்திய அளவுக்கு பொரு ளாதார வளர்ச்சியோ, தொழிற்சாலைகள் பெருக்கமோ, வேலையின்மைக்கான பரிகாரமோ குறிப்பிடத்தக்க அளவில் ஏதுமில்லை. அவர் ஆட்சிக்காலத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது திராவிடர் கழகம் கொடுத்த சட்ட ஆலோசனையை ஏற்று சட்டம் இயற்றியதுதான் குறிப்பிடத்தக்கதாகும். இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டுவந்த எம்.ஜி.ஆர். 1980 மக்களவைத் தேர்தலில் சந்தித்த கடும் தோல்வி - ஜெய லலிதாவுக்கு எச்சரிக்கையாக அமைந்ததுதான் அதனை ஏற்றுக் கொண்டதற்கு முக்கியக் காரணம்.
முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா காட்சிக்கு எளியவரும் அல்லர். மக்களைச் சந்திப்பதுகூட தேர்தல் நேரத்தில் மட்டுமே, அதிலும் சாலைவழிப் பயணம் அல்ல - ஹெலிகாப்டரில்தான்! இதெல்லாம் ‘சினிமாத்தனமான அணுகுமுறை'யே! இவ்வளவையும் எடுத்துச் சொல்லுவதற்குக் காரணமே. சினிமாக்காரர்களை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியதால் நாடு கடும் விலையை கொடுக்க நேர்ந்தது என்பதற்காகத் தான்.

தொடர்பில்லாத இருவர் வருகிறார்கள்

தொடர்பில்லாத இருவர் வருகிறார்கள்

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பொது வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தொடர்பே இல்லாத எதையும் கண்டுகொள்ளாத இருவர் - வெறும் சினிமா நட்சத் திரங்கள் என்ற கவர்ச்சியை மட்டும் முதலீடாகக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க மோகங்கொள்வது பண் புடைமைதானா? முறையானதுதானா?
எதற்காக அரசியலில் நுழைகிறார்கள் என்ற கேள்விக்கு கலைஞானி கமலகாசன் என்ன பதில் சொல்லுகிறார்? ‘ஊழல் ஒழிப்பு' என்பதை முன்னிறுத்துகிறார். எல்லா அரசியல்வாதிகளும் வழக்கமாகச் சொல்லும் கிளிப்பிள்ளைப் பாடம்தான் இது. ஊழல் ஒழிப்பு என்பது ஒரு நிருவாகப் பிரச்னை - அதுவே எல்லாமும் ஆகிவிடாது!

சினிமா துறையில் கறுப்பு பணம் உள்ளதே

சினிமா துறையில் கறுப்பு பணம் உள்ளதே

முதலில் அவரை நோக்கி ஒரு கேள்வி. கறுப்புப் பணத்தின் நடமாட்டம் மற்ற துறைகளைவிட முக்கியமாக சினிமாத்துறையில்தானே அதிகம். சினிமாவில் வாங்கும் உண்மையான பணத்தைத் தான் வருமான வரித் துறையில் கணக்காகக் காட்டுகிறார்களா? அதுபற்றி இதுவரை ஏதாவது கருத்து சொன்னதுண்டா?
முதலில் தான் சார்ந்திருக்கும் துறையில் கறுப்புப் பணத்தை ஒழிக்க முன்வரட்டும். அதற்கான இயக்கத்தை நடத்தட்டும். ‘வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளும்' என்ற சொலவடைதான் இந்த சினிமா நடிகர்களுக்கும் பொருந்தும். இன்னொரு கேள்வியும் உண்டு. இவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள செலவுத் தொகைக்குள்தான் செலவு செய்வோம் என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

ரஜினியை விமர்சிக்க மாட்டாராம் கமல்

ரஜினியை விமர்சிக்க மாட்டாராம் கமல்

இன்னொன்றையும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ரஜினிகாந்த்தும், கமலகாசனும் அரசியலுக்கு வந்தாலும் ஒருவரை ஒருவர் விமர்சிக்க மாட் டார்களாம். இதைவிட அறிவு நேர்மையின்மை ஒன்று இருக்க முடியுமா? யாராக இருந்தாலும் விமர்சிப்பேன் என்று சொன்னால் அதனைப் புரிந்து கொள்ள முடியும். விமர்சிக்க மாட்டேன் என்று சொன்னால், இந்த இடத்தில் யாருக்கும் ஒரு சந்தேகம் வரத்தான் செய்யும். ஒருவருக்கொருவர் பூடகமாகப் பேசி வைத்துக்கொண்டு அரசி யலில் இறங்குகிறார்களோ என்று கருத வேண்டியுள்ளது. நீங்களோ பகுத்தறிவுவாதி - ரஜினியோ ஆன்மீகவாதி - இந்த நிலையில் எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும் என்றகேள்விக்கு மழுப்பலான பதில் தான் கமலகாசனிடமிருந்து; நீங்கள் பகுத்தறிவாளர், பா.ஜ.க ஆன்மீக நாட்ட முள்ள கட்சி - இப்படி இருக்கும்போது பா.ஜ.க.வுடன் நீங்கள் ஒருங்கிணைந்து எப்படி செயல்பட முடியும்? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்கிறார் கமல்? ‘‘நான் பகுத்தறிவுவாதி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. ஆனால், அதேநேரத்தில் எல்லா கோவில்களையும் தரைமட்டமாக்க வேண்டும் என்று நான் கூறவில்லை'' என்று பதில் கூறுகிறார். இதிலிருந்து பகுத்தறிவு என்பதில்கூட அவருக்குத் தெளிவு இல்லை என்று தெரிகிறது. பகுத்தறிவுவாதி எவரும் எந்தக் கோயிலையும் தரைமட்டமாக்க வேண் டும் என்று கூறவில்லை. ஆன்மீக அமைப்பான பா.ஜ.கதானே 450 ஆண்டு வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக் கிற்று. துணிவிருந்தால் பட்டென்று அதனையல்லவா எடுத்துக் கூறியிருக்க வேண்டும்

பாஜகவுடன் கமல் கூட்டாம்

பாஜகவுடன் கமல் கூட்டாம்

பா.ஜ.க.வுக்குக் கூட்டணிக்குத் தயார் என்று சொல்லிவிட்ட பிறகு கமலகாசன் மீது கொஞ்ச நஞ்ச எதிர்ப்பார்ப்பு வைத்திருந்தவர்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டாரே! (ஆதாரம்: 25.9.2017 நாளிட்ட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா')
காவி, கருப்பு என்பதற்கெல்லாம் எதைஎதையோசொல்லித்தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புகிறார். கருப்பு - கருப்புச் சட்டை என் றால் என்ன என்பது சிறுவனுக்கும் தெரிந்த ஒன்று; அதேநேரத்தில் காவி என்றாலும் மக்களுக்கு மிக நன்றாகவே புரியும். இந்நிலையில் திரிபுவாதம் செய்யலாமா? குட்டை யைக் குழப்பலாமா? தான் கருப்பு என்று அடையாளம் காட்டி, அதே நேரத்தில் காவியிடம் சரணாகதி என்பதில் உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது.
‘ஒரே ஒரு கிராமம்' என்ற ஒரு திரைப்படம் 1987 இல் வந்தது. அந்தப் படத்தில் இடஒதுக்கீட்டையும்,அண்ணல் அம்பேத்கரையும் கொச்சைப் படுத்தியிருந்தது. அந்தப் படவிழாவில் பேசிய கமலகாசன், "ஜாதி ஒழியும்வரை இடஒதுக்கீடு இருக்கும். பாலம் கட்டும் வரை மாற்றுப் பாதை - டைவர்சன் சாலை இருக்கத்தானே செய்யும்?'' என்ற முதல் அமைச்சர் கருணாநிதி சொன்னபோது- "எவ்வளவு நாளைக்கு டைவர்சன் ரோடு?'' என்று சமூகநீதியைக் கிண்டல் செய்தவர் கமலகாசன். சமூக நீதியில்லாத பகுத்தறிவால் யாருக்குப் பயன்? இது தமிழ்நாட்டில் எடுபடாது என்பது நினைவிருக்கட்டும்! "மாநில அரசைக் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு மத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ள பி.ஜே.பி ஆட்சி பற்றி விமர்சிப்பதில்லையே" என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்கிறார்? முதலில் என் வீட்டை சுத்தப்படுத்துகிறேன்என்றுசொல் கிறாரே - மத்தியில் உள்ள ஆட்சியால் தானே ‘நீட்' வந்தது - ஜி.எஸ்.டி. வந்தது - இந்தி வருகிறது - சமஸ்கிருதம் வருகிறது - நவோதயா வருகிறது. இவையெல்லாம் தமிழ்நாட்டுக்குச் சம்பந்தம் இல்லாதவையா? என்னே நழுவல்! இதன் உள்ளார்ந்த அரசியல் பூடகம் என்னவோ?

மதவாதம் லஞ்சத்தைவிட ஆபத்தல்லவா?

மதவாதம் லஞ்சத்தைவிட ஆபத்தல்லவா?

பிஜேபி ஆட்சியை விமர்சிக்க மூன்றுஆண்டுபோதாதாம்.இன்னும் ஓராண்டு தேவையாம். அப்படிப் பார்க்கப்போனால் மாநிலத்தில் எடப் பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி வந்து வெறும் மூன்று மாதம்தானே! அதற்குள் ஏன் அதிரடி விமர்சனம் என்ற கேள்வி எழாதா? பதவி ஆசையில் அவசர அவசர யோசனையில் தடுமாறுகிறார் என் பது மட்டும் தெரிகிறது. மேலும் யாருக் காகவோ பேச முயன்று திணறுவதும் புரிகிறது. பி.ஜே.பி என்பது இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் - ராமராஜ்ஜியத்தை ஏற்படுத்துவோம் என்று ஒளிவு மறை வின்றி சொல்லுகிற கட்சி. எதிலும் மதவாதக் கண்ணோட்டம் என்பது அதன் குருதியோட்டம். உண்பது முதல் உடுத்துவது வரை எல்லாம் காவி மயச் சிந்தனை. அப்படிப்பட்ட ஒரு கட்சியோடு ஒரு பகுத்தறிவுவாதி - மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ள ஒருவர் எந்த வகையில் கூட்டணிஅமைத்துக்கொள்ளமுடி யும்? கொள்கையில் சமரசம் செய்து கொள்ளக் கூடியவர் என்பது புரிய வில்லையா? இந்த வகையில் இவர் எப்படி தனித்தன்மையானவர்? லஞ்சத்தைவிட மதவாதம் பேராபத்து என்பதைப் புரிந்துகொள்ளாத விசித்திர மான பகுத்தறிவுவாதியாக(?) அல்லவா தோற்றம் அளிக்கிறார்!
எந்தஇசத்திலும்அவருக்குநம் பிக்கை கிடையாதாம். அப்படியென் றால் கமலகாசனிசம் என்ற ஒன்றைக் கொண்டுவரப் போகிறாரா? அண் ணாயிசத்திற்கு எம்.ஜி.ஆர். கொடுத்த வேடிக்கையான விளக்கம்தான் நினைவிற்கு வருகிறது. "நான் யாருடனும் கூட்டு சேரப் போவதில்லை - தனித்தன்மையுடன் - புதிய ‘இசத்துடன்' - புதிய திட்டங் களுடன் இந்தக் கமலகாசன் அரசியலில் பிரவேசிப்பான்" என்று மார்தட்டி சொல்லக்கூடிய தைரியம் இவரிடம் இல்லாதபோது - இவரும் பத்தோடு பதினொன்றுதான் என்ற முடிவுக்குத்தானே எவரும் முடிவுக்கு வரமுடியும்?
பகுத்தறிவுக் கொள்கைக்காக கேரள மாநிலத்தில் விருது கொடுத்தால் ஏற்றுக்கொள்வார். தமிழ்நாட்டில் எந்தப் பகுத்தறிவுப் பிரச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். இது ஒருவகைத் ‘தொழில் ரகசியமோ!'

கருணாநிதி அப்படி சொன்னார்

கருணாநிதி அப்படி சொன்னார்

நாட்டுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றால் அது வெறும் அரசியல் மட்டும்தானா? அதைவிட சமூக ரீதியிலான அடிப்படைப் பணி கள் ஏராளம் இருக்கின்றனவே. அந்த அடிப்படை சமுதாயக் களத்தில் பணியாற்றினால்தான் அரசியல்கூடத் தூய்மை பெறும் என்பது அவருக்குத் தெரியாதா? இன்னும் தீண்டாமை இருக்கிறது - ஜாதி தாண்டவமாடுகிறது - கவுரவக் கொலை என்று புது மகுடம் அணிந்து வருகிறது, மதவாதம் தலை தூக்குகிறது, மதவாதத்தால் வன்முறைகள் தலை விரித்தாடுகின்றன. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற பாசிசம் கொம்புமுளைத்து பாய்கிறது. ஒரு பகுத்தறிவுவாதிக்கு இந்தத் தளத்தில் ஏராளமான பணிகள் அலைஅலையாக இருக்கின்றன. இத னைப் புறந்தள்ளிப் பதவி அரசியல் பக்கம் நாட்டம் கொள்வதன் பொருள் என்ன? சுயநலமும், பதவி மோகமும் இரு கால்களாக இருக்கின்றன என்று சொன்னால் அவர் சினம் கொள்ளக் கூடாது.

சமூக அரசியல் தடத்தில் புடம் போட்ட மாமனிதரான தலைவர் கருணாநிதியிடம், முன்பு ஒருமுறை "நீங்கள் பிரதமர் ஆவீர் களா?'' என்று கேட்டபொழுது, ‘என் உயரம் எனக்குத் தெரியும்?' என்றாரே, அந்த அனுபவக் கடலே அவ்வாறு கூறும்பொழுது, எந்தத் தளத்திலும், தடத்திலும் கால்பதித்தறியாத அடுத் தவர்கள் எழுதிக் கொடுக்கும் வசனத் தைப் பேசி, இயக்குநர் சொல்லிக் கொடுத்த வகையில் நடித்து, யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அள வுக்குக் கோடிக்கணக்கில் பணம் குவிக்கும் தொழிற்காரர்கள் அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடிக்க நினைப் பது - லஞ்சத்தை ஒழிப்பதாகச் சொல்லுவதெல்லாம் நம்பத் தகுந்ததும், ஆரோக்கியமானதுமல்ல!

ரஜினிகாந்த் பாதை

ரஜினிகாந்த் பாதை

பகுத்தறிவுவாதி என்பவர் இப்படி யென்றால், ‘அவன் இருக்கான் - எல்லாம் அவன் பார்த்துப்பான்' என்று சொல்லுகிற ரஜினிகாந்த் ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர ஆசைப்படுகிறார். "சர்வமும் சர்வேசன் மயம்" என்று சொல்லி கடவுளைக் கைகாட்டிவிடுவார். "ஆண்டவன் சொல்றான் - அடியேன் செய்கிறான்" என்று சுலபமாக சொல்லிவிடுவாரே. இது தமிழ்நாட்டில் எடுபடுமா? தமிழ்நாட்டுக்குக்காக இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார்? அவரின் முதலீடுகள் எல்லாம் எந்த மாநிலத்தில் என்ற கேள்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருக்குமே! இவற்றை எல்லாம் தாக்குப் பிடிக்கும் இயல்பை - திறனைக் கொண்டவரா ரஜினிகாந்த்?
என்னே வினோதம் - என்னே விபரீதம்!
தமிழ்நாட்டில் 1967 முதல் தி.மு.க ஆட்சியும், ‘திராவிட' ‘அண்ணா' பெய ரில் அ.இ.அ.தி.மு.க.வும் ஆட்சி நடத்தி வந்துள்ளன. செல்வி ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணத்தைத் தழுவிய நிலையில் அ.இ.அ.தி.மு.க பிளவுபட்டு, பலகீன நோயால் படுக் கையில் விழுந்துவிட்டது.

குறுக்கு வழியில் பாஜகவுக்கு உதவி?

குறுக்கு வழியில் பாஜகவுக்கு உதவி?

ஏதோ தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்ற நினைப்பில் பா.ஜ.க. என்னும் பாசிச பாம்பு அரி யணை ஏற குறுக்கு வழியைத் தேடும் தருணத்தில், இரு முன்னணி சினிமா நடிகர்களும் திராவிட இயக்கத்தைப் பலகீனப்படுத்தி, வாக்குகளைச் சிதறச் செய்து அதன் மூலம் பா.ஜ.க.வைப் பதவி நாற்காலியில் அமர வைக்கும் குறுக்குவழி உபாயம் இதன் பின்ன ணியில் இருக்கிறதோ என்ற ஒரு கருத்தும்கூட உள்ளது. மனக்கோட்டை கட்டுவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட நிலைக்கு நடிகர்கள் ஆளாக வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.
தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் உருவாக்கி வைத்துள்ள அடிப்படைக் கட்டுமானத்துக்குச் சேதம் விளை விக்க காவிகள் வந்தாலும், அரி தாரங்கள் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள், கற்பிக்கவேண்டும்; இதில் இப்போது ஏமாந்து விட்டால், இன்னும் எழ, மீள மேலும் 25 ஆண்டுகள் ஆகுமே! சமூகநீதி, மதச்சார்பின்மை சக்தி கள் வேறு எப்பொழுதையும்விட விழிப்புடன் ஒன்றுபட்டு நிற்கும் காலகட்டம் இது என்பதையும் நினைவூட்டுகிறோம். தலைவலி போய் திருகுவலிக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. மாற்றந்தான் வரட்டுமே - அதையும்தான் பார்ப்போமே என்ற சிறுபிள்ளைத்தனமான நினைப்பும், நடப்பும் நாட்டை நாசப்படுத்திவிடும் - மத்தியில் அப்படித்தான் நடந்து நாடு காடாகியிருக்கிறது - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

English summary
Rajini and Kamal try to help BJP to get Tamilnadu power, accusing Veeramani in an press release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X