For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தந்தை ஈமச்சடங்கில் பங்கேற்க நளினிக்கு ஒருநாள் பரோல்.. தமிழக அரசின் எதிர்ப்பை மீறி ஹைகோர்ட் அனுமதி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள, நளினி, உயிரிழந்த தனது தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்வதற்காக ஒருநாள் பரோலில் வெளியே வர சென்னை ஹைகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இன்று மாலை முதல் நாளை மாலைவரையில் அவர் பரோலில் வெளியேவரலாம்.

முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நளினி.

Rajiv gandhi case: Nalini granted parole for one day

நளினியின் தந்தை சங்கர நாராயணன் கடந்த மாதம் 23ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து, நளினி 24ம் தேதி பரோலில் வெளிவந்து, தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று, மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் கடந்த 2ம் தேதி நளினி விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் அந்த கோரிக்கை மீது சிறைத்துறை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை ஹைகோர்ட்டில், பரோல் அனுமதி கேட்டு நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. நளினியை பரோலில் விடக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே பரோல் தரப்பட வேண்டும். எனவே நளினிக்கு இப்போது பரோல் தேவையில்லை என்று வாதிடப்பட்டது. ஆனால், 16வது நாள் ஈமச்சடங்கில், மகள் என்ற முறையில் கலந்து கொள்ள வேண்டும், என்று நளினி சார்பில் வாதிடப்பட்டது.

நளினி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாலா, அவருக்கு ஒருநாள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணிவரை நளினிக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய விரும்புவதாகவும், இதில் மத்திய அரசின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள விரும்புவதாகவும், தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சமீபத்தில், கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், நளினி அவரது தந்தை ஈமச்சடங்கில் பங்கேற்க பரோலில் வெளிவிட அனுமதிக்குமாறு சிறைத்துறை நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்தபோது, ஒரு பதிலும் சொல்லாமல் மவுனம் காத்துள்ளது சிறைத்துறை. இதன்பிறகு, ஹைகோர்ட்டில் பரோல் கேட்டு நளினி சார்பில் மனு தாக்கல் செய்தபோதும், தமிழக அரசு சார்பில், பரோலில் வெளியேவிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறிதான், ஹைகோர்ட் அனுமதியை வழங்கியுள்ளது.

7 தமிழர்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய முழு மனதோடு தமிழக அரசு முடிவெடுத்திருந்தால், 1 நாள் பரோலுக்கு கூட ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பது புரியாத புதிராக உள்ளது.

English summary
Nalini granted parole to perform her father last rituals by Chennai High court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X