For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பலியானோர் குடும்பங்களுக்கு அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்- ராமதாஸ்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை தமிழக அரசு மூடி மறைக்கப்பார்க்கிறது என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது 5-க்கும் மேற்பட்டோர் பலி- வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீதான காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலும், அதை மூடி மறைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளும் கண்டிக்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் 100வது நாளையொட்டி, மாவட்ட ஆட்சியரிடம் பேரணியாகச் சென்று மனுக்கொடுக்கச் சென்ற பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில், மிகப்பெரிய வன்முறை வெடித்தது.

    இதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், இருவர் பலியாகி உள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

     100வது நாள் போராட்டம்

    100வது நாள் போராட்டம்

    தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் கடல் வளத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அப்பேரழிவு ஆலையை மேலும் 600 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்ததைக் கண்டித்தும், தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம் பகுதியில் தூத்துக்குடி மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று நூறாவது நாளை எட்டியிருக்கிறது.

     பேச்சுவார்த்தை நடக்கவில்லை

    பேச்சுவார்த்தை நடக்கவில்லை

    ஆனால், தங்களின் போராட்டத்தை மதித்து, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வராததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தூத்துக்குடி பகுதியில் உள்ள 18 கிராம மக்கள் அறிவித்திருந்தனர். இது ஒருவகையான அறவழிப் போராட்டம் தான் என்பதால் அதை அமைதியாக நடத்த பொதுமக்களைஅனுமதித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டக்காரர்களுடன் முன்கூட்டியே பேச்சு நடத்தி போராட்டச் சூழலை தவிர்த்திருக்க வேண்டும்.

     144 தடை உத்தரவு

    144 தடை உத்தரவு

    ஆனால், அதை செய்யாத மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் போராட்டத்தை ஒடுக்குவதிலேயே கவனம் செலுத்தின. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்கும் நோக்குடன் தூத்துக்குடி பகுதியில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். அதுமட்டுமின்றி ஏராளமான காவல்துறையினரை குவித்து மக்களை மிரட்டும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டது. தமிழக அரசின் இந்த ஒடுக்குமுறை காரணமாகவே போராட்டக்காரர்கள் சில இடங்களில் பொறுமை இழந்தனர்.

     ஆட்சியர் அலுவலகம் சூறை

    ஆட்சியர் அலுவலகம் சூறை

    இதைக் காரணம் காட்டி காவல்துறை தடியடி, கண்ணீர்புகைக் குண்டு வீச்சு என ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். இதற்கு பொதுமக்கள் எதிர்வினையாற்றியதன் விளைவாக போராட்டம் வன்முறையாக மாறியது. காவல்துறையினரின் ஒடுக்குமுறையையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அங்கும் தமிழகக் காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 3பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் தவிர ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

     விரும்பத்தகாத நிகழ்வு

    விரும்பத்தகாத நிகழ்வு

    கொல்லப்பட்டவர்களின் உடல்களை காவல்துறையினர் அகற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் தவிர மேலும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்களில் ஒருவரின் பெயர் ஜெயராமன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அதுகுறித்த செய்திகளை தமிழக அரசு இருட்டடிப்பு செய்துள்ளது. ஒரு நல்ல நோக்கத்திற்காக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதற்கு அரசின் அணுகுமுறையே காரணம் ஆகும். தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்; இந்த நிகழ்வுகள் துரதிருஷ்டவசமானவை; இவற்றுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

     தமிழக அரசின் பொறுப்பு

    தமிழக அரசின் பொறுப்பு

    ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் விரிவாக்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தில் உள்ள நியாயத்தை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டிருக்கிறது. 1994 முதல் 2004 வரையிலான காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்; 13 பேர் இறந்துள்ளனர். வெளியில் தெரியாமல் பல இறப்புகள் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாற்றுகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திற்கும், அப்பகுதியில் உள்ள பல்லுயிர்வாழ் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. அதை மதித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு வாக்குறுதி அளித்திருந்தால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.

    தமிழக அரசின் தோல்வி

    அதை செய்யத் தவறியது தமிழகத்தை ஆளும் பினாமி ஆட்சியாளர்களின் மிகப்பெரிய தோல்வியாகும். தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்தி, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும் தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குவதுடன், அவர்களுக்கு காயத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Ramadoss condemns TN Police and Government on Firing at Thoothukudi. Earlier Thoothukudi People protest against Sterlite issue and police attacked the public by today morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X