For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா சதி: டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Ramadoss demand appoint officer to Mullaiperiyar monitoring committee
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தடையை ஏற்படுத்தும் கேரளாவின் சதியை முறியடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டைப் போடும் முயற்சிகளில் கேரள அரசு ஈடுபட்டிருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் வாகன நிறுத்தத்தை கேரளம் அமைத்து வருகிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுப்பதற்காக நீர்தேக்கப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்தை 10 கோடி செலவில் கேரள அரசு அமைத்து வருகிறது. இதற்காக இராட்சத எந்திரங்களை பயன்படுத்தி நீர் தேங்கும் பள்ளமான பகுதிகளில் மண்ணைக் கொட்டி மேடாக்கும் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்காக கேரள அரசின் சார்பில் கூறப்படும் காரணம் ஏற்கக் கூடியதாக இல்லை. கேரள அரசு திட்டமிட்டுள்ளவாறு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருவதற்கான சுரங்கப்பகுதியில் உடைப்பு ஏற்படுவதுடன், தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்கும். இதற்கெல்லாம் மேலாக வாகன நிறுத்துமிடத்திற்கு தண்ணீர் வந்துவிடும் என்பதை காரணம் காட்டி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கும்.

மொத்தத்தில் கேரள அரசின் நோக்கம் வாகன நிறுத்துமிடம் அமைப்பது இல்லை; நீர்மட்டம் உயர்த்தப்படுவதை தடுப்பது தான் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டதை பயன்படுத்திக் கொண்டு, நீர்த்தேக்கப் பகுதிகளில் சுற்றுலா மாளிகைகளை கேரளம் கட்டியது. இதனால், நீர்மட்டத்தை எதிர்காலத்தில் 152 அடியாக உயர்த்த முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

இந்த நிலையில், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கும் முட்டுக்கட்டைப் போடுவது இருமாநில நல்லுறவுக்கு வழி வகுக்காது. எனவே, முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வசதியாக, உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணை அதிகாரி ஒருவரை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss Mullaperiyar Supreme Court Monitoring Committee set up by the chairman of the Central Government shall appoint an officer of the Order of the water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X